Tuesday, April 21, 2015

திரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகளின் உலகம்

மணிரத்னம் படத்தில் நான் அதிகப்படியாக விரும்புவது அவர் மெனக்கெடும் ஒளிப்பதிவு, கலை, வசனம், இசை மட்டுமே. தமிழ்ச்சினிமாவில் ஒளிப்பதிவை மிக நேர்த்தியாகக் கதைக்களத்தை உயிரூட்டிக் காட்டும் ஒரே இயக்குனராக அறியப்பட்டவர் மணிரத்னம் ஆகும். ஆனால், தற்பொழுது நிறைய புதிய இயக்குனர்கள் அவ்விடத்திற்குள் வந்துவிட்டனர். பீ.சி அவர்கள் வேறு யாருக்காகவது ஒளிப்பதிவு செய்திருந்தாலும், மணிரத்னம் அளவிற்கு அவரிடமிருந்து உழைப்பைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஒளிப்பதிவு

மும்பை நகரின் பெரும்பகுதியைக் காட்டாவிட்டாலும் பீ.சியின் ஒளிப்பதிவில் மும்பை நகர் சிவப்பும் மஞ்சளுமாகப் படர்கிறது. இது தனித்த ஒளிப்பதிவுக்கான அம்சமாகும். மழை நேரத்தில் ஆட்டோக்களும், மனிதர்களுக்கும் மத்தியில் கேமரா அடர்த்தியாக விரிகிறது. பிரகாஷ்ராஜ் தங்கியிருக்கும் வீட்டின் சுவரிலும் படிக்கட்டிலும் சூழ்ந்து நிற்கும் சிவப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

லீலா

இந்தியாவின் எழுத்தாளர் என்றும் பாடகர் என்றும் பரதநாட்டிய கலைஞர் என்றும் பல அடையாளங்கள் உள்ள ஆளுமைமிக்க பெண்மணி. இப்படத்தில் அவருடைய நடிப்பே என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. பிரகாஷ் ராஜ் அவர்களின் யதார்த்தமான நடிப்பிற்கு நிகராக மிகவும் எளிமையாகக் கதையுடன் பொருந்தி நிற்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் அவருடைய நினைவுகள் மெல்ல காணாமல் போகின்ற வியாதியாலும் அவர் அவதிப்படும் கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டு வேறு காட்சிகளில் அவர் வீட்டுக்கு வரும் வழியை மறந்துவிடுகிறார். பிரகாஷ்ராஜ் அவர்களும் கதாநாயகனுமே அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஒரு காட்சியில் மும்பையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அன்றைய மாலையில் லீலா வீட்டிலிருந்து வெளியேறி மீண்டும் வரவில்லை. அனைவரும் அவரைத் தேடுகிறார்கள். திடீரென மும்பையின் ஒரு சிறுநகரத்தின் நாற்சந்தியில் நைட்டியுடன் மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்குப் போகும் வழியை மறந்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார். மிகவும் அழுத்தமான காட்சி அது. முதுமைக்கே உரிய ஆக நிதர்சனமான பழக்கம் மறதி. அதுவே வியாதியாகிப் போகும்போது உடன் இருப்பவர்களையும் மறந்து அவர்கள் நினைவற்றவர்களாக மாறுகிறார்கள். அப்படியொரு நோயின் விளிம்பிலேயே லீலா கதைக்குள் இடம் பெறுகிறார்.

Saturday, April 18, 2015

நேர்காணல்: தோட்டங்களை விட்டு ஓடிவந்த தமிழர்களின் நிலவியல் வாழ்க்கையே கே.பாலமுருகனின் நாவல்!

http://www.selliyal.com/?p=88939
கோலாலம்பூர், ஏப்ரல் 18 – கே.பாலமுருகன் (படம்) எனும் படைப்பாளி மலேசிய தமிழிலக்கிய சூழலில் சிறுகதைகள், நாவல்கள் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் படைப்பாளி. தனது 23ஆவது வயதில் அவர் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ எனும் நாவல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான தமிழ் நாவல் போட்டியில் 2007ஆம் ஆண்டில் முதல் பரிசை வென்று தமிழ் இலக்கியச் சூழலை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதோடுமட்டுமல்லாமல் அவருடைய அந்த நாவல், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் முஸ்தப்பா அறவாரியத்தின் வழியாக அவருக்கு ‘கரிகாற் சோழன்’ விருதைப் பெற்றுக் கொடுத்தது. நாவல் பயணத்தில் தனித்து விளங்கும் கே.பாலமுருகனின் அடுத்த இரண்டு குறுநாவல்கள் அடங்கிய ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் தொகுப்பு குறித்து அவரிடம் உரையாடியபோது:
unnamed (1)
கேள்வி: ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் நாவல் எப்படி உருவானது? அதன் பின்னணி என்ன?
கே.பாலமுருகன்: நான் எனது 11ஆவது வயது முதல் 15ஆவது வயதுவரை ஆற்றோரக் கம்பத்தில்தான் வாழ்ந்தேன். பின்னர் அந்த ஆற்றோரம் இருந்தவர்களுக்கு ஒரு மலிவு அடுக்குமாடி கட்டித்தரப்பட்டது. நாங்கள் சீனக் கம்பத்திலேயே இருந்துவிட்டோம். என் நண்பர்கள் பெரும்பாலானோர் அடுக்குமாடிக்குப் போய்விட்டதால் வாரத்தில் நான்குமுறை அங்குப் போய் அவர்களுடன்தான் இருப்பேன்.

Friday, April 3, 2015

ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ அவர்களின் ‘ அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ எனும் சிறுகதையை முன்வைத்து

காலச்சுவட்டின் வெளியீட்டில் எம்.எஸ் மொழிப்பெயர்ப்பில் வெளிவந்தஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனைகள்மொழிப்பெயர்ப்பு சிறுகதை தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அர்ஜெண்டானாவில் பிறந்த ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ அவர்களின் கதைகள் ஆங்கீலம், போர்த்துகீஸ், ஜெர்மன், வியட்நாமீஸ், பிரெஞ்சு, இத்தாலி, பின்னிஷ், போலிஷ் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு மிகத் தீவிரமாகவும் உரையாடப்பட்டிருக்கின்றன.

 தன்னுடைய கதைகளை ஒரு அதீதமான கற்பனைக்குள் புனையப்படும் உண்மையையே ஆதாரமாகக் கொண்டிருப்பதாகப் பலராலும் விமர்சிக்கப்பட்டதாக ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ குறிப்பிடுகிறார். இந்தக் கதை தொகுதியைப் படித்து முடிக்கும்போது என்னாலும் அவர் உலகத்திற்குள் அவர் புனைந்திருக்கும் படிமங்களினூடாகவே பயணிக்க முடிகிறது. கதை என்பதோ கலை என்பதோ மேட்டிமைவாத குறிக்கோள்களுடன் அணுகக்கூடியதாக இருத்தல் கூடாது. அது கலைக்கான புரிதலைச் சாத்தியப்படுத்தாது. கலை என்பது பாராபட்சமின்றி மனித குலத்திற்கே உரியது. அது பேசும் உலகை வைத்தே அதன் தீவிரத்தையும் ஆழத்தையும் நம்மால் மதிப்பிட முடியும்.

ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ அவர்களின் இந்தத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையானஅவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்முதல் வாசிப்பில் பெருமளவு சமூக உறவு குறித்தான அதிர்ச்சியையே அளித்தது. அதனைத் தாண்டி கதை கொண்டிருக்கும் வாதங்களுக்குள் நுழைய வேண்டி இருந்தது. கதையின் மேல்தட்டிலேயே ஒருவன் தங்கிவிட முடியும். ஆனால், அது கதையின் ஆழத்திற்குள் நம்மை கொண்டு போகாது. பூங்கா ஒன்றில் பத்திரிகை படிக்கச் செல்லும் ஒருவன் திடீரென தன் தலையில் யாரோ குடையால் அடிப்பதை உணர்கிறான். வலியை உண்டாக்காத அதே சமயம் எந்தவகையிலுமே ஆபத்தில்லாத அடி அது. அவனுடைய குடையால் தொடர்ந்து கதைச்சொல்லியின் தலையில் அடித்துக் கொண்டே இருக்கிறான். ஆத்திரம் அடைந்த கதைச்சொல்லி அவனை ஓங்கிக் குத்துகிறான். மூக்கில் இரத்தம் வடிய பலவீனத்துடன் எழுந்து மீண்டும் அவன் தலையில் குடையால் அடிக்கத் துவங்குகிறான். காலம் காலமாக அதே வேலையைச் செய்து செய்து சலித்துப் போனவனின் பாவனையில் அவன் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்கக் கதைச்சொல்லி அங்கிருந்து ஓடுகிறான். ஆனால், அந்தக் குடையால் அடிப்பவன் கதைச்சொல்லியைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனுடன் பேருந்தில் ஏறி எல்லோரும் கேலியாகச் சிரிக்க எந்த உணர்ச்சியுமில்லாமல் கதைச்சொல்லியின் தலையில் அடித்துக் கொண்டே இருக்கிறான்.

இப்படியாக ஐந்து வருடங்கள் கதைச்சொல்லியை அவன் குடையால் தலையில் அடித்து அடித்து, அது ஒரு வழக்கமான விசயமாக மாறுகிறது. அந்தக் குடை அடி இல்லாமல் தன்னால் உறங்க முடியாது என்கிற நிலைக்குக் கதைச்சொல்லி வந்துவிடுகிறான், மேலும் இனி தனக்கு இருக்கும் ஒரே பயம் ஒருவேளை தன்னைக் குடையால் அடித்துக் கொண்டிருப்பவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இனி மிச்ச நாட்களை இந்தக் குடையால் அடிக்கப்படாமல் எப்படி வாழப்போகிறேன் என்கிற சந்தேகங்களுடன் கதை முடிகிறது.