Friday, November 14, 2014

பாலியல் கல்வியும் சமூகமும்

'பள்ளிப்பருவத்து மாணவர்கள் பாலூறவில் எந்த ஆர்வமும் காட்டம்மாட்டார்கள் என்ற சமூகத்தின் பிரமையைத் தன் சினிமாவின் வழி கலைத்தவர் பாலு மகேந்திரா' - ராஜன் குறை.

நம் இந்திய சமூகம் பாலியல் கல்வியின் தேவையை இறுதிவரை புரிந்துகொள்ளமல் மிகவும் இறுக்கமாகப் பிள்ளைகளை வளர்க்கும் சமூகம் என்றால் அது மிகையில்லை. அதனால்தான் இந்தச் சமூகத்தில் கள்ளத்தனமான உறவுகள் குடும்பங்களைப் பெருமளவில் சிதைத்து வருகின்றன. அதிகமான மணமுறிவுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியக் குடும்ப அமைப்புகளை ஒருமுறை ஆழமாக ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரிய வரும். குடும்பம் சார்ந்த பல விசயங்களைத் தெளிவாகக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டிய/கற்பிக்க வேண்டிய தேவை இன்று இருக்கின்றது.

ஒரு சிறுமியைத் தன் குடும்பப்படத்தை வரையக் கூறினால், அச்சிறுமி நிச்சயம் அப்பாவை உயரமாகவும் அம்மாவைக் குட்டையாகவும் வரைந்து காட்டும். நான் செய்து பார்த்திருக்கிறேன். ஏன் இருவரையும் சமமாக வரைய முடிவதில்லை? குடும்ப அமைப்பு அவர்களின் மீது விதிக்கும் மனநிலை அது. குழந்தைகளுக்கு முன்னே சண்டை போட்டு அப்பா தன் வீரத்தை/ஆணாதிக்கத்தை அந்தக் குழந்தைக்குள் கட்டமைக்கிறார். அக்குழந்தை பெரிதாகும்வரை ஆண்கள் நம்மை விட பலமானவர்கள் என்ற ஒரு புரிதலுக்குள் சிக்கிக்கொள்கிறது.