Friday, October 24, 2014

கத்தி திரைவிமர்சனம்: மாஸ் ஹீரோவும் விவசாயிகளின் பஞ்சமும்


'சினிமா என்பது சமூகத்தைவிட்டு தனியாகப் பயணிக்கக்கூடியதல்ல; சினிமா சமூகத்தோடு, சமூகத்தின் பாரம்பரிய சிந்தனைகளில், புரிதல்களில், கருத்தியலில், இரசனைகளில் பாதிப்பை உருவாக்கியபடியே நகரக்கூடியது' அகிரா குரோசவா , (உலகத் திரைப்பட மேதை, அகிரா. புதுமைப்பித்தன் பதிப்பகம், 2002)

அகிரா குரோசாவின் ரஷமோன் படம் 1951ஆம் ஆண்டு யுத்தத்திற்குப் பிறகு உலக மக்களிடையே திரையிடப்பட்டது. எது தரமான சினிமா எனப் பிரித்தறிய முடியாத ஐரோப்பிய இரசிகர்கள் நிறைந்த காலக்கட்டம் அது என சத்ய ஜீத்ரே 'singular samurai' முன்னுரையில் அதனைக் குறிப்பிடுகிறார். ஆனால், அதுவரை யாரும் நம்பாத வகையில் ரஷமோன் என்கிற புதிய முயற்சி மாபெரும் வெற்றி அடைந்து ஒரே கணத்தில் உலகின் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பிய இரசனைகளில் பெரும் தாக்கத்தை உருவாக்கி அடுத்தடுத்து வித்தியாசமான சினிமாக்கள் வெற்றியடையும் வகையிலான ஒரு பாதையை ஏற்படுத்திவிட்டது. இதற்கு முந்தைய ஜப்பானிய சினிமாக்களின் வெற்றியை உள்வாங்கிக் கொண்டு அகிரா அடுத்த கட்டத்தை நோக்கி ஜப்பான் இரசிகர்களையும் உலக இரசிகர்களையும் நகர்த்தினார். ஏற்கனவே இருக்கும் ஜப்பானிய இரசனைகளோடு அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆகையால், அவர் என்ன தோல்வியடைந்துவிட்டாரா? அல்லது ஜப்பானிய சமூகப் பிரச்சனையைப் பேச முடியாமல் போய்விட்டாரா?

அகிரா, ஜப்பானிய சமுராய் மரபிலிருந்து தன் சினிமாவைத் துவங்கி, ஜப்பானிய நவீன சமூகத்தின் சிதறல்கள் வரை சமூக அக்கறையுடன் செயல்பட்ட ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார்.

கத்தி திரைப்படத்தைப் பற்றி சிலர் தன் விமர்சனங்களில், படத்தின் முதல் பாதியைவிட அடுத்த பாதியே விறுவிறுப்பாகப் போகின்றது எனச் சொல்கிறார்கள். நன்றாகக் கவனித்தால், படத்தின் முதல் பாதியில்தான் விவசாயிகள் பஞ்சம் காரணமாகத் தன் கிராமங்களைவிட்டுத் துரத்தியடிக்கப்பட்ட நிலையையும், தற்கொலை செய்துகொண்ட அவலத்தையும், குற்ற உணர்ச்சியைக் கிளப்பிவிடும் வகையில் சொல்லயிருப்பார்கள். இரண்டாம் பாதி விஜயின் மாஸ் ஹீரோவின் அதிரடியே நிறைந்திருக்கும். ஆகக், கத்தி படம் நிரம்ப சமூக அக்கறை நிரம்பிய படமாக இருந்தாலும் ஒரு பொதுஜன இரசனை என்பது அதை நீக்கியெறிந்துவிட்டு அதை விஜய் படமாகவே வலுக்கட்டாயமாகப் பார்க்க ஆரம்பிக்கிறது.

கத்தி திரைப்படம் ஆபத்தான படம் கிடையாது. மற்ற படங்களைப் போல இரட்டை அர்த்தமிக்க வசனங்களோ ஆபாசமான செய்கைகளோ இல்லை. வழக்கமான தமிழ் சினிமா பாணியை விட்டுக் கொஞ்சமும் நகராமல் ஒரு புதிய கருத்தை, சமூகம் மறந்துபோன அவலத்தைப் பேசியுள்ளது. ஆனால், என்னை அது கொஞ்சமும் பாதிக்கவில்லை. சினிமா குறித்த குறைவான தேடல் உள்ளவர்களுக்கும், சினிமாவை வெறும் பொழுதுபோக்குக்கான அம்சமாகவே பார்ப்பவர்களுக்கும் இப்படம் சட்டென அவர்களின் மண்டையில் அடித்திருக்கக்கூடும் அல்லது குறைந்தபட்சம் முதுகைச் சொறிந்துவிட்டிருக்கும். மேலும் அவர்களுக்கு இது முதன்முறையாக விவசாயிகளின் பிரச்சனையைப் பேசிய படம் எனத் தோன்றக்கூடும். நான் முன்பே குறிப்பிட்டதைப் போல , 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமான 'பெப்லி' படத்தைப் பார்க்க நேர்ந்தவர்களுக்கு இரு திரைப்படங்களின் சமூக அக்கறை புரிந்திருக்கும். பெப்லி படம், எந்த மாஸ் ஹீரோவின் உதவியுமின்றி இந்திய மக்களின் மனத்தையும் உள்ளுக்குள் உறைந்துபோன பொறுப்புணர்வையும் அதன் அடிவேர்வரை சென்று கிளறிவிட்டது. பல விமர்சகர்கள் அப்படத்தை முன்னிறுத்தி விவசாயிகளின் பிரச்சனைக்களை அக்காலக்கட்டத்தில் பேசியிருக்கிறார்கள்.