Tuesday, March 25, 2014

எழுத்தாளர் ஜெயமோகனுடன் மூன்று நாள் இலக்கிய முகாம்- பினாங்கு கொடி மலை

கூலிம் நவீன இலக்கிய சிந்தனைக்களம் ஏற்பாட்டில் கடந்த 16ஆம் திகதி முதல் ஜெயமோகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகையளித்து 25ஆம் திகதிவரை பல இலக்கிய நிலக்ழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். 16ஆம் திகதி புத்தகச் சிறகுகள் ஏற்பாட்டில் நடந்த கவிதை மாலையில் 'காலம்தோறும் கவிதைகள்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அதன் பிறகு 18ஆம் திகதி விரிவுரையாளர் குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில் பினாங்கு ஆசிரியர் பயிற்றகத்தில் பயிற்சி ஆசிரியர்களிடம் உரையாற்றினார். அம்மாணவர்கள் ஜெயமோகனின் /வெண்முரசு' நாவலின் ஒரு காட்சியை நாடகமாக நடித்திருந்தார்கள். மேலும் அவருடைய சிறுகதைகள் நாவல்களை வாசித்திருந்ததும் மகிழ்ச்சியளித்தது.

அடுத்ததாக 19ஆம்திகதி ஜெயமோகன் அவர்கள் சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் வளாகத்தில் 'இலக்கிய வகைகளையும் அது வழங்கக்கூடிய பேரனுபவம் தொடர்பாகவும்' உரையாற்றினார். விரிவுரையாளர் திரு.தமிழ் மாறன் அவர்களின் ஏற்பாட்டில் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

வியாழக்கிழமை 20ஆம் திகதி அன்று ஜெயமோகன் அவர்கள் பிரமானந்த சரஸ்வது அவர்களின் ஆசிரமத்தில் உரையாற்றினார். கூலிம் வட்டாரத்தைச் சேர்ந்த பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று ஜெயமோகன் அவர்கள் கூலிம் நவீன இலக்கிய சிந்தனைக்களத்தைச் சேர்ந்த நண்பர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். மணிஜெகதீசன், குமாரசாமி, பாண்டியன், கே.பாலமுருகன், தினகரன், தமிழ்மாறன், கோ.புண்ணியவான் எனப் பலர் அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

மறுநாள் 22ஆம் திகதி முதல் ஜெயமோகன் அவர்களுடன் மூன்று நாள் இலக்கிய முகாம் பினாங்கு கொடி மலையில் நடைபெற்றது. சனிக்கிழமை தொடங்கி திங்கள்வரை அந்த முகாம் பற்பல தலைப்புகளில் முன்னெடுக்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த ம.நவீன் மலேசிய நாவல்களையும், கோ.புண்ணியவான் மலேசியச் சிறுகதைகளையும், சு.யுவராஜன் மலேசியக் கவிதைகளையும் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அந்த மூன்று நாள் இலக்கிய முகாமையும் எழுத்தாளர் ஜெயமோகன் மிகச் சிறப்பாக வழிநடத்தினர். அவருடன் நண்பர்கள் ராஜமாணிக்கம் மற்றும் கிருஷ்ணன் அவர்களும் கலந்துரையாடல்களில் பங்கெடுத்தனர்.

- எழுத்து & புகைப்படங்கள்: கே.பாலமுருகன்