Tuesday, October 21, 2014

கடைசி முத்தமும் கடைசி கண்ணீரும்

நான் வேலைக்குச் சென்று வாங்கிய முதல் மாத சம்பளத்தில் அப்பாவிற்கு 50 ரிங்கிட் கொடுத்திருந்தேன். அதை அவர் 8 வருடங்கள் செலவு செய்யாமல் பத்திரமாகவே வைத்திருந்தார் என்பதே அவர் மரணத்திற்குப் பிறகே தெரிந்தது.

என்னுடைய அப்பா திரு.கேசவன் அவர்கள் கடந்த 20ஆம் திகதி முதல் இரண்டு நாள் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். அவர் உடல் சுயமாக மூச்சுவிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. சுய நினைவே இல்லாமல் மூன்றாம் நாள் காலையில் மரணமுற்றார். மருத்துவர் என் அப்பா இறந்துவிட்டார் எனச் சொல்லி அனைத்து இயந்திரங்களையும் அகற்றிய பிறகு உள்ளே சென்று பார்த்தேன். கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகியிருந்தது.

சுய நினைவாக இல்லாவிட்டாலும் உயிரைவிடும் போது கடைசியாக அப்பா அழுதிருக்கிறார். உயிர் மீதும் வாழ்தலின் மீது மிகவும் விருப்பம் கொண்டவர். அவர் மட்டுமல்ல நாம் எல்லோரும் வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம். அழுத அவர் கண்களை அதற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. மரணத்தைவிட வாழ வேண்டும் என நினைக்கும் மனிதனின் ஆசைக்கு முன் நிற்க கொஞ்சம் நடுக்கமாகவே இருக்கின்றது.


அப்பாவின் உடலைக் கழுவ எடுத்துச் சென்றார்கள். வெளியில் காத்திருந்த என்னை மூர்த்தி அங்கிள் உள்ளே அழைத்தார். அப்பாவின் உடல் நிர்வாணமாகக் கிடந்தது. அப்பொழுது அது வெறும் உடல் என என்னால் நினைக்க முடியவில்லை. அந்த உடல்தானே அவர்? அவரை அப்படிப் பார்க்க முடியாததால் உடனே வெளியேறினேன். இவ்வளவுத்தானா வாழ்க்கை என சட்டென சொல்ல முடியாத ஒரு துயரம் தொண்டையை அடைத்துக் கொண்டது.

அப்பாவின் உடலைக் கழுவி அதனைத் தூக்கி சவப்பெட்டியில் போடும்போது அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் திடீரென கொட்டியது. அருகில் யாரும் இல்லை. கொஞ்சம் தூரமாகச் சென்று அழுதுவிட்டு வந்தேன். எனக்கு அழத் தெரியாது. அழுதும் எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. அழும்போது வாய் கோணும் என்றும், தொண்டை விக்கும் என்றும், தலை கணமாகும் என்றும் அன்றுத்தான் தெரிந்து கொண்டேன். அழும்போது சிறு குழந்தையாகிவிடுகிறோம் என்பதும் அன்றுத்தான் தெரிந்தது. ஆள்களின் முன்னே அழுவது வெட்கமான விசயம் என்றே சிறுவயதிலிருந்து அம்மா சொல்வார்.

அந்த நேரத்தில்தான் என் மாநிலத்தின் மொழித்துணை இயக்குனர் திரு.பெ.தமிழ்செல்வம் அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். ஆறுதல் சொல்லிவிட்டு, “காசு ஏதும் வேணுமாயா?” எனக் கேட்டபோது உடைந்து அழுதேன். சக மனிதர்கள் இது போல நேரத்தில் எவ்வளவு முக்கியமானவர்களாகத் தோன்றுகிறார்கள் என்பதை அப்பொழுது உணர முடிந்தது.

எல்லாம் முடிந்துவிட்டது. கையொப்பம் வைத்ததும் அப்பாவின் மரண சான்றிதழ் மாதிரியை வாங்கிக் கொண்டேன். நண்பர் ஹென்ரி வந்ததும் அவருடைய படத்திற்கு ப்ரேம் போடச் சென்றோம். ஹென்ரி மிகவும் அக்கறையுள்ள நண்பர். அவருடைய அப்பா தொலைபேசியில் அழைத்து என் அப்பாவிற்காக ஜெபம் செய்தார். ஜெபத்தைவிட அவருடைய அக்கறை மீண்டும் அழச் செய்தது. அப்பொழுதெல்லாம் அழுது அழுது பழகிக் கொண்டிருந்தேன் என்பதால் அவ்வளவு வெட்கமாக இல்லை.

வீட்டிற்குப் போகும்போது அப்பாவின் உடலை நடுவீட்டில் வைத்திருந்தார். உள்ளே நுழைந்ததும் மூத்த அக்காள் “அப்பா பாருடா தூங்கிட்டு இருக்காரு” என்றதும் திடீரென உடல் இயக்கத்தை ஏதோ நிறுத்தியது போன்று இருந்தது. அதனை எப்படி விளக்குவது? நிச்சயம் அதனை உணர்ந்தவர்களால் அதனை விளக்க முடியாது. இழப்பு எப்பொழுதுமே சரிக்கட்ட முடியாததுதான். இப்பொழுது நான் நினைத்தாலும் எங்குத் தேடினால் என் அப்பா இல்லை என்பதே நித்தியம்.

நண்பர்கள், ஆசிரியர்கள், அப்பாவின் நண்பர்கள், உறவினர் என வீடே நிறைந்து நிறைந்து காலியாகி மீண்டும் நிறைந்து சட்டென மாலையில் அமைதியானது. வல்லினம் நண்பர்களும் கோலாலம்பூரிலிருந்து மாலையில் வந்து சேர்ந்தனர். வருவோர் எல்லோரிடமும் என் இழப்பை அழுது காட்டி தெரிவித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு அடையாளம். இழப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எங்களுக்காக உழைத்து உழைத்து தேய்ந்துபோன அப்பாவின் உடல் எங்கள் முன் அசைவற்று கிடப்பதை வேறு என்ன சொல்லி விளக்க முடியும்?

20ஆம் திகதி மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பு கூட அவர் வேலை செய்துவிட்டுத்தான் வீட்டிற்கு வந்திருந்தார். கையில் சாயக்கறை அப்படியே இருந்தது. எனக்குள் குற்ற உணர்ச்சி மேலிட்டே இருந்தது. வயதான காலத்தில் அவர் வேலைக்குச் செல்ல அனுமதிருக்கக்கூடாதுதான். ஆனால் அவர் வேலை செய்தே அனுபவப்பட்டவர். மோட்டார் பட்டறை ஒன்றை வைத்து இன்று சுங்கை பட்டாணியிலுள்ள பெரும்பாலான மோட்டார் பழுதுபார்ப்பவர்களுக்கு வேலையைக் கற்றுக்கொடுத்தவர் அப்பாத்தான். அவரை இன்று எல்லோரும் போஸ் என்றுத்தான் அழைப்பார்கள். தோட்டத்தில் இருக்கும்போது மண்வாரி இயந்திரம் ஓட்டுவது, பெரிய பெரிய கனவுந்துகளைப் பழுதுபார்ப்பது என அப்பொழுதே ஸ்காப்ரோ தோட்டத்தில் நன்கு அறியப்பட்டவர் அப்பா.

வாயில் எப்பொழுதுமே சுருட்டு இருக்கும். அதைப் புகைப்பதை அவர் குறைத்துவிட்டாலும் வெறுமனே வாயில் வைத்திருப்பார். அதனாலும் அவரை ‘சுருட்டு’ என்றும் அழைப்பார்கள். நிறைய வித்தை தெரிந்த மனிதர். சிறுவயதில் கொஞ்சம் மாந்திரீகமும் படித்துள்ளார். எனக்கே ஞாபகம் இருக்கிறது. முற்சந்தியில் இருக்கும் கற்களைப் பொறுக்கிக் கொண்டு வரச் சொல்வார். கையில் வைத்து மடக்கி அடுத்த வினாடியே அதனைத் திருநீராக்கி என் கையில் கொட்டுவார். இப்படிப் பல மந்திர வித்தைகள் அப்பாவிற்குத் தெரியும்.

கடுமையான கோபக்காரர். ஆனால் நான் இன்று நல்ல நிலையில் இருக்க அவரே காரணம். ஆறாம் முடித்துவிட்டு கோலாலம்பூரில் மாமா வீட்டில் தங்கி சரியாகப் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த என்னை அவர்தான் 14ஆவது வயதில் அங்கிருந்து இங்குக் கொண்டு வந்து சேர்த்து மீண்டும் படிக்க வைத்தார். படிப்பின் மீது கவனம் வர அவரே காரணம்.

எங்காவது நடுரோட்டில் கார் நின்றுவிட்டால் எங்கிருந்தாலும் உடனே ஓடிவருவார். பசி என்றால் உடனே எனக்கு சமைத்துக் கொடுப்பார். அம்மாவைவிட அப்பாவே சிறந்த சமையல்க்காரர். என்னுடைய இரண்டாவது அக்காவின் திருமணத்தில் அப்பாத்தான் முழு சமையலையும் செய்தார். அவர் உண்மையில் பல வித்தைகள் தெரிந்தவர் என்பதில் எனக்கு தனி கர்வம் இருந்தது.

ஒரு சிறு பிரச்சனையால் ஏறக்குறைய ஒரு வருடம் அவருடன் சரியாகப் பேசியதில்லை என்பதே எனக்குள் ஊறிப்போன குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் வாழும் காலத்தில் அவர்களை உதாசினப்படுத்தாமல் இருப்பதே இப்போதைக்கு மனதில் பதிந்த உண்மையாக உள்ளது.

என் அப்பாவின் பெட்டியுடன் என்னை மட்டும் மூடுந்தில் ஏற்றினார்கள். சுடுகாட்டில் புதைப்பதாகத் தீர்மானம் ஆகியது. என் இத்தனை கால வாழ்வில் அன்றுதான் அவருடன் நான் தனியாக இருந்தேன். அப்பாவின் உடம் மூடப்பட்டிருந்தது. மூடுந்து புறப்பட்டதும் அந்தக் கணம் ஒரு சிறுவனாகி தேம்பி தேம்பி அழுதேன். அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுப் பேசினேன். ஒரு பைத்தியக்காரனைப் போல அவரைத் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தேன். இதற்கு முன் மதங்கள் சொல்லிக்கொடுத்த அனைத்துத் தத்துவங்களும் என்னை ஆறுதல்படுத்தவே இல்லை.
அவர் பெட்டியை முத்தமிட்டேன். அது ஒரு குற்ற உணர்ச்சி மிகுந்த முத்தம். அதில் எவ்வளவோ இடைவேளி நிரம்பிய அன்பு இருந்தது. கடைசியாக என்னுடைய 21 ஆவது வயது பிறந்தநாளில் என் அப்பா எனக்கு முத்தமிட்டார். 12 வருடங்கள் கழித்து திரும்பவும் அவர் இருந்த பெட்டிக்கு நான் முத்தமிட்டேன். ஆண் என்கிற திமிரும், வறட்டு கெளரவமும் உடைந்து போயின.

அப்பொழுது நான் அப்பாவின் கடைசி பையனாக உட்கார்ந்திருந்தேன். வாழ்க்கையில் நாம் ஆறுதலே சொல்ல முடியாத இழப்பு மரணம்தான். வாழ்வதைப் பற்றி யோசிக்காமல் மரணப் பயத்துடன் வாழ்நாள் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறோம் என்றுத்தான் தோன்றுகிறது.

‘இறந்து போனார்’ என்பதில் இறப்பு என்பது நிதர்சனம் என்றால் ‘போனார்’ என்பது உலகத்தால் கற்பிக்கப்பட்டது. இறந்து இன்னொரு உலகம் போயிருக்கிறார் எனும் நம்பிக்கை இழப்பைச் சரிக்கட்ட சொல்லப்பட்ட ஆறுதல் என்றே உணர்கிறேன்.

எல்லாம் மதங்களும் மரணத்தைப் பற்றிய மனித பயங்களை அறிந்து வைத்திருப்பதனால்தான் மிகவும் எளிமையாக ஒரு மனிதனின் மனத்தை ஆக்கிரமிக்க மரணத்திற்கு அப்பால் எனப் பேசத் துவங்குகின்றன. மதங்கள் மரணத்திற்கு முன்பான வாழ்க்கையைவிட மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையைத்தான் அதிகம் பேசியுள்ளது. இறந்த பிறகு உள்ள சொர்க்கம் நரகம் போன்ற அனைத்துமே மனிதர்களின் மரணப் பயத்திற்கு ஒரு வடிக்கால் போட்டுப் பார்க்கும் முயற்சியிலிருந்தே மதமும் சமயம் தனது அதிகாரமிக்க இருக்கையை மனித வாழ்விற்குள் போட்டுள்ளது.

எப்படியும் ஒவ்வொரு மனிதனும் சந்திக்க வேண்டிய கட்டாயம் மரணம். அதனைத் தவிர்க்க முடியாததால் மனிதன் அதற்கு ஆறுதலான வழியைச் சொல்லும் நிறுவனத்திடம் ஆயுள் சந்தாகாரனாக மாறிவிடுகிறான். ஆன்மா எனும் சிந்தனையே உடலை மறுக்கும் முயற்சித்தான். உடல் ஒரு நாள் மண்ணோடு போகும் ஆன்மா பரலோகம் போகும் என்பதெல்லாம் இந்த உடலுக்கு நேரும் மரணத்தின் யதார்த்தத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியே.

ஆனால் உடல் என்பது வாழும் காலத்தின் நிதர்சன உண்மை. இப்பொழுது இந்தக் கணம் நான் இந்த உடலாலே இந்த உலகத்தாரால் அறியப்படுகிறோம். உடல் இல்லாமல்போகும் போது வாழும் மனிதர்களின் நினைவுகளாகிவிடுகிறோம்.

உடலாக இருந்து நினைவாகிப் போன என் தந்தையின் பெயரால் அடுத்த மாதம் சிறுவர் நாவலை வெளியீடு செய்கிறேன். கடைசியாக ஓர் இலக்கியவாதியினால் என்ன செய்ய முடியும் எழுதுவதைத் தவிர?

கே.பாலமுருகன்
நன்றி: வல்லினம்.காம்

No comments: