Monday, January 14, 2013

2012ஆம் ஆண்டின் மறக்க இயலாத நிகழ்ச்சிகள்


கடந்துபோகும் ஒவ்வொரு வருடத்தையும் அதன் இறுதி எல்லையில் இருந்துகொண்டு மீட்டுண்ர்வதென்பது எழுதி வைத்த டைரியை வெகுநாள் கழித்துப் படித்துப் பார்ப்பதை போன்ற உணர்வைக் கொடுக்கும். 2012ஆம் ஆண்டு மறக்க முடியாத பல சந்தர்ப்பங்களையும் மறக்க நினைக்கும் பல கணங்களையும் கொடுத்திருக்கின்றன.

கோப்புகளுக்குள் ஒளிந்து கிடக்கும் சில புகைப்படங்களின் வழியே கடந்தாண்டு நிகழ்வுகளை நினைவுக்கூற முடிகின்றது. அவற்றுள் சில:

அ. மலாக்கா மாநில தமிழ் ஆசிரியர்களுடன் சந்திப்பு- 16.09.2012

முகநூல் நண்பர் திரு.ராஜா அவர்களின் மூலம் தமிழ் மொழி பட்டறை நடத்த முதன்முதலாக வெளிமாநிலம் சென்ற அனுபவம் மறக்க முடியாதது. முதலில் ராஜா அவர்கள் பணிப்புரியும் பாத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி பட்டறை நடத்தினேன். மாணவர்கள் ஆர்வமுடன் இருந்தார்கள். சிறப்பாகப் பங்கெடுத்த மாணவர்களுக்கு நூல்களைப் பரிசாகக் கொடுத்தேன். பிறகு மதியம் அலோர் காஜா தமிழ்ப்பள்ளிக்கு என்னை அழைத்துச் சென்றார். அனுபவமிக்க மூத்த ஆசிரியர்கள் பலர் இருந்தனர். மலாக்கா மாநிலத்தின் ஆறாம் ஆண்டு தமிழ் போதிக்கும் ஆசிரியர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 4 மணி நேரம் பட்டறையை வழிநடத்தினேன்.

ஆ. புத்தாக்க ஆசிரியர் விருது- 25 ஜூன் 2012

மாவட்ட ரீதியில் கல்வி இலாகாவின் முதல்வர் அவர்களால் இந்தப் புத்தாக்க ஆசிரியர் விருது 2012-ஐ வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த விருது எனக்களிக்கப்படுகிறது. எங்கள் மாவட்டத்தில் இந்தப் புத்தாக்க விருதை இரண்டு முறையும் பெற்றது நானே.
 இதுவரை யாரும் பரிந்துரைக்கப்பட்டதும் இல்லை. இதை இங்கு யாரும் கொண்டாடியதும் கவனப்படுத்தியதும்கூட இல்லை. சமூகத்தின் சாபக்கேடு. என்ன செய்வது? இருப்பினும் தனிநபராக எனக்கு மகிழ்ச்சியளித்த தருணம் அது. இந்தச் செய்தியைத் தினகுரலில் பிரசுரித்த பி.ஆர் ராஜன் அவர்களுக்கும் என்னை இந்த விருதுக்குப் பரிந்துரை செய்த முன்னால் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் திரு.முனியாண்டி அவர்களுக்கும் நன்றி.


இ. The school bag – குறும்படம்

ஜூன் மாதத்தில் ஒரே நாளில் இயக்கிய குறும்படம் ‘பள்ளிப்பை’. சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் சிறுகதையான ‘பள்ளிப்பை’ எனும் கதையை மையமாக வைத்து இயக்கப்பட்ட குறும்படம். பள்ளியில் என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் ஹென்ரி, லில்லி, வசந்தி, மாணவர்கள் ஜெசிந்தா மற்றும் லோகபிரதீபன் போன்றவர்கள் ஒரே நாள் பயிற்சியுடன் குறும்படத்தில் நடித்தார்கள். பள்ளியில், சாலையில் என இரு கதைக்களம். மாலை 4 மணியைப் போல முடிவடைந்தது. மகிழ்ச்சியான பயணம் அது.

ஈ. தேவதைகளின் காகிதக் கப்பல் நூல் வெளியீடு – 07.10.2012

இவ்வருடம் தயாராகி மலேசிய முழுக்கப் பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களைச் சென்றடைந்திருக்கும் என்னுடைய ‘தேவதைகளின் காகிதக் கப்பல்’ சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூலின் வெளியீடு மிகச் சிறப்பாக நடந்தேறியது. மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் வருகையளித்து நூல் வெளியீட்டைச் சிறப்பு செய்தார். 200 பேருக்கு மேல் வந்து கலந்துண்டதோடு மாணவர்களின் நாடகம், மாணவர்களின் விமர்சன அரங்கு எனப் பல அங்கங்கள் இணைக்கப்பட்டிருந்தன. தலைமை ஆசிரியர் திரு.அம்பிகாபதி அவர்கள் நூல் வெளியீட்டை வழிநடத்தினார். மாணவர் சமூகத்தை இலக்கியத்தின்பால் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களின் உலகைப் பற்றிய கதைகளுடன் தொடங்கப்பட்ட முதல் முயற்சி. பாரதி பதிப்பகத்தைச் சேர்ந்த ம.நவீன் அவர்களுக்கும் சிவா பெரியண்ணன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலிலுள்ள ஓவியங்களை வரைந்த ஆசிரியர் தானிய லெட்சுமிக்கும் ஓவியர் சந்துருவிற்கும் பாராட்டுகளும் நன்றியும்.

உ. லுபோக் செகிந்தா தமிழ்ப்பள்ளியின் தமிழ் மொழி பட்டறை-october

ஆசிரியை அண்ணி மார்கரேட் அவர்களின் மூலம் லுபோக் செகிந்தா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி பயிற்சி பட்டறையும் தேவதைகளின் காகிதக் கப்பல் நூல் வெளியீடும் நடைப்பெற்றது மறக்க முடியாத நிகழ்ச்சி. என் சிறுவர் சிறுகதை நூலை வெளியிட்ட முதல் தமிழ்ப்பள்ளி அது. அதன் தலைமை ஆசிரியரான திரு.தண்ணிமலை அவர்களுக்கும் ஆசிரியை அண்ணி மார்கரேட் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுமார் 3 மணி நேரம் பட்டறையில் அனைத்து மாணவர்களும் ஆர்வமாகப் பங்கெடுத்தனர். மற்ற பட்டறைகளைவிட இப்பட்டற்றையில் நான் உற்சாகம் குன்றாமல் பேசியதாகத் தோன்றுகிறது.

ஊ. காது இரைச்சல் – 01.10.2012

உடல் பிரச்சனை தொடர்பாக நான் இப்படிப் பாதிப்பிற்குள்ளானது கிடையாது. இதுவே முதல்முறை. 01.10.2012 ஆம் நாள் காலையில் 6மணியைப் போல எழுந்ததும் காதில் இந்தச் சத்தம் கேட்பதை உணர்ந்து தடுமாறிப் போனேன். வெளியில் இருந்து எவ்வளவு சத்தமானாலும் கேட்க முடியும். இது உள்ளிருந்து கேட்கும் சத்தம். ‘டப் டப் டப்’ என. பிறகு அது ‘கொய்ங்ங்ங்ங்ங்ங்’ எனக் கேட்கத் தொடங்கியது. 2 நாள் தூக்கம் இல்லாமல் காது மருத்துவரைப் பார்த்தேன். இரண்டுநாள் மருத்துவமனையிலேயே தங்கி மூளையைச் சோதனை செய்தேன். ஒன்றும் இல்லை என்றார்கள். காதும் நன்றாக இருக்கிறது என்றார் மருத்துவர். பிறகெப்படி அந்தச் சத்தம் விடாமல் கேட்கிறது? மருத்துவரை மீண்டும் பார்க்கச் சென்றால் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தைக் கொடுத்து எதையும் பொருட்படுத்தாமல் நிம்மதியாகத் தூங்கு என்கிறார். அவரால் மட்டுமல்ல நான் இப்பிரச்சனைக்குப் பிறகு போய்ப் பார்த்த 5 மருத்துவர்களாலும் சரியான காரணத்தைச் சொல்ல முடியவில்லை. டாக்டர் சண்முகசிவாவைக் கேட்டபோது இது ஒருவகையான tinittus பிரச்சனை என்றார். இதற்கு உலகில் மருந்தும் காரணமும் இல்லை என்றார். ஒருவேளை சளி பிரச்சனையால் நரம்பு தூண்டப்பட்டு அதனால் எழும் சத்தமாக இருக்கக்கூடும் என்றார். இதை எதிர்க்க ஒரே வழி அந்தச் சத்தத்தைப் பழகிக் கொள்வதுதான் என்றார். அதெப்படி பழகுவது? இன்னும் பல நிவாரணங்களைத் தேடி தேடி ஓடினேன். ஒவ்வொரு வாரமும் கோலாலம்பூர் சென்றேன். யாராலும் என் காதில் கேட்கும் ஒலியைக் கொஞ்சம்கூட அசைக்கமுடியவில்லை. மூன்று மாதம் ஆகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக நான் அந்தச் சத்ததுடன் பழகிக் கொண்டேன். இதுவே வாழ்வின் மிக நெருக்கமான உண்மை. வாழ்க்கையை அடுத்து வாழ்வதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் அல்லவா? தூக்கமின்றி அலைந்த என் வாழ்நாள் கொஞ்சமாகத் தேறியுள்ளது என்றே நினைக்கிறேன். இது எப்பொழுது தீரும் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இப்பிரச்சனை சீரான மனநிலையைப் பாதிப்பதோடு தூக்கத்தையும் கெடுத்துவிட்டது என்றே சொல்லலாம். யாரும் காதில் பேசும் ஒலி கேட்கிறதா என சிலர் கேட்டனர். நான் மன ரீதியில் எந்தப் பாதிப்பும் அடையவில்லை என எப்படி நிருபிப்பது? ஆகையால், தெளிவாக அவர்களிடம் விளக்க வேண்டிய சூழல். மருத்துவ ரீதியாகவும் இதை ‘tinittus’ பிரச்சனை என்றும் உலகில் 150 கோடி பேர்களுக்கு இப்பிரச்சனை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால் நான் தனி ஆள் இல்லை என்பதே எனக்கு ஆறுதல்.

-தொடரும்
கே.பாலமுருகன் 

No comments: