Friday, December 14, 2012

சிறுகதை: மோப்பம்

நான் ரவிகுமார். கொஞ்சம் உயரமாக இருப்பேன். கண்கள் இரண்டும் குழிக்குள் பதுங்கியிருக்கும். வலிமையற்றவன் போல உடலை இயக்கத் தெரியாமல் சோர்ந்திருப்பேன். யாராவது அழைத்தால் நான் பார்க்கும்விதம் எரிச்சல் ஊட்டும்படி இருக்கும். பெரும்பாலும் அழைப்பவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. எனக்கு நடக்க மட்டுமே தெரியும். உடலின் மையம் கால் பாதத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டதைப் போல கால்களில் வெறும் அவசரம் மட்டுமே. எங்கிருந்து எங்கு நகர எத்தனை அடிகள் வைத்தால் போதும் என்ற அளவிற்கு துல்லியமாக நடப்பேன். அது கண் தெரியாதவர்களின் கணக்கு. சட்டென பொருள்கள் மறைந்து வெறும் சுவராகி போகும்போது இருளைத் தடவுவேன்.

வேலை முடிந்ததும் ஜாலான் அம்பாங் பாசார் பூரோ கோடியில் இருக்கும் அப்பே நாசி லெமாக் கடையில் 10 நிமிடம் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அறைக்கு உடனே சென்றுவிட வேண்டும். அதிகநேரம் நான் வெளியில் திரியும் தருணத்தை ஆபத்தாகவே உணர்கிறேன். ஒரு நிமிடத்திற்கு மேல் நான் உற்றுக்கவனிக்கும் எதன் மீதும் வெறுப்பு வந்துவிடுகிறது. உலகத்தையே வெறுத்துவிடும் அபாயம் எனக்கு அருகாமையிலே சுருண்டிருக்கும். விருவிருவென மாடியேறி அறைக்குள் புகுந்துவிடுவேன்.