Wednesday, May 30, 2012

2010க்குப் பிறகு அறிமுகமான படைப்பாளர்கள் - வாசகர்கள்



சமீபத்திய மலேசிய இலக்கியச் சூழலில் நம்பிக்கை தரும் படைப்பாளிகளாகவும் வாசகர்களாகவும் ஒரு சிலர் அடையாளம்காணப்பட்டே வருகிறார்கள். மரபார்ந்த சிந்தனை அமைப்புமுறையிலிருந்து மாறுப்பட்டு சிந்திக்க இளைஞர்களின் வருகை மிக அவசியமானது. இலக்கியம் சார்ந்து தன் இயங்குத்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்வதோடு அதனை எந்த அதிகார சக்தியிடமும் ஒப்படைக்காமல் தனித்துவமாக செயல்படுவதும் முக்கியமானவையாகும். அதனைப் பற்றியே தொடர்ந்து முன்வைக்கவும்படுகிறது.

கவிஞர் பொன்வாசுதேவன் மூலம் எனக்கு அறிமுகமானவர் நித்தியா வீரரகு. முகநூலில் என்னுடன் கவிதைகள் தொடர்பாக உரையாடத் துவங்கினார். அதன் பின் சிவா, நவீன் என அவருடைய அறிமுகம் விசாலமடைந்ததும் வல்லினத்தைக் கண்டடைந்தார். வல்லினத்தின் மூலம் தன் இலக்கிய வாசிப்பை மேலும் கூர்மைப்படுத்திக்கொண்டவர், வல்லினத்தில் இயக்கவூட்ட சினிமா தொடர்பான தொடரையும் எழுதிக் கொண்டிருக்கிறார். அண்மையில் வல்லினம் நடத்திய சந்திப்பில் டாக்டர் சண்முகசிவா நித்தியாவின் மொழிவளத்தைப் பாராட்டியிருந்தார். நித்தியா மிக முக்கியமான கவிஞராக மீட்டெடுக்கப்படுவார் என்றே கருதுகிறேன்.