Saturday, July 14, 2012

பில்லா 2 – அறத்திற்கு வெளியே



அஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஓர் அடையாளத்தைத் தேடிக்கொண்ட நடிகர் அஜித். சினிமா துறையில் எந்தச் சிபாரிசும் இன்றி பின்னணியும் இன்றி கதாநாயகத்துவத்தை உருவாக்கிக்கொண்டவர். பில்லா படமும் அவருடைய கதாநாயகத்துவத்தை வழிப்படும் ஒரு படைப்புத்தான். கமல் எப்படித் தன் ஆற்றலை, தன் அறிவை தானே கொண்டாடிக்கொள்ள படம் எடுப்பாரோ அதே போல பில்லாவும் அஜித்தின் பிம்பத்தை உயர்த்திக் காட்டப்படும் தருணங்களாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பில்லா படத்தின் நேர்மை மிக முக்கியமான விவாதிக்க வேண்டிய விசயமாகும். எந்த இடத்திலும் ‘பில்லா’ தான் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ நியாயப்படுத்தவில்லை.
தான் ஒரு லும்பனாகவோ அல்லது அடியாளாகவோ ஆனதைப் பற்றி பின்னணியும் வரலாறும்கூட கதையில் அழுத்தமாக விவாதிக்கப்படவில்லை. ஆக, பில்லா தான் செய்யும் எந்தக் கர்மத்திற்குமான பின்விளைவுகளைப் பற்றி கவலைபடவில்லை, இதன் மூலம் மதம்/அறிவியல் சார்ந்த கர்மவினை எனும் எல்லைக்குள்ளிருந்து மீறி வருகிறான். தனிதனியாக மதங்கள் போதிக்கும் அறம் சார்ந்த எவ்வித கவலையும் அவனுக்கில்லை. 

அரசியல்வாதிகளுக்கு அடியாளாகத் தொடங்கும் ஒரு ரௌடியின் வாழ்க்கை, போதைப்பொருள்/ஆயுதம் கடத்தல் தொழிலுக்குள் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்தே அவன் எதிரிகளை மோப்பம் பிடிக்கும் நாயாக மாறுகிறான். பிறகு தான் வாழ பிறரைக் கொல்வதன் மூலம் எந்தக் குற்ற உணர்ச்சிக்கும் அவனை ஆளாக்கவில்லை. அவன் தொடர்ந்து சலனமின்றி வாழ்வதற்கான இலாபத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறான். மேலும் கதையின் தொடக்கத்திலேயே ஒரு சில நிமிடங்களில் பில்லாவின் வாழ்க்கை பின்னணி சுருக்கமாகக் காட்டப்படுகின்றது. அதுவே கதையின் பாதி பகுதியாக மாறி சோர்வை ஏற்ப்படுத்தாமல் கச்சிதமாகக் கையாண்டிருப்பது சிறப்பு. கதைக்கு அந்த வரலாறும் பின்னணியும் வலு சேர்ப்பதாக இருந்தால் மட்டுமே அதனை முதன்மைப்படுத்த வேண்டும். உலகில் தோன்றியிருக்கும் அனைத்துப் பில்லாவும் போர், இழப்பு, வறுமை, அங்கீகாரமின்மை என்ற காரணத்தினால் மட்டுமே அப்படி ஆவதில்லை.

இப்படத்தில் வரக்கூடிய டேவிட் பில்லா, போர் காலத்தில் குடும்பத்தைப் பறிக்கொடுத்தவன். இளம் வயதிலேயே குற்றவாளியாக்கப்பட்டவன். அவனுடைய வாழ்வின் வெளியும் மனநிலையும் அவனை ஒரு பில்லாவாக மாற்றியமைக்கிறது. அப்படி அவன் மாறுவதற்கும் அவனுடைய வாழ்க்கையை அவனே வடிவமைத்துக் கொள்வதற்கும் அவனுக்கு எந்த மதக் கற்பிதங்களோ அல்லது சமூக அறப்போதனைகளோ முரணாகவோ அல்லது உந்து சக்தியாகவோ இருக்கவில்லை. அவன் சமூகத்திடமிருந்து கற்றுக்கொண்ட இயக்கத்திலிருந்து ஒரு பொறியாக வெளிப்படுகின்றான். இயந்திரத்தனமான வாழ்வு, வாழ்வை முன்னகர்த்தும் ஆக்கிரமிப்பு, அதிகாரத்தின் சுரண்டல், கொலை கொடூரங்கள் என நாம் மதத்திற்க்குள்ளிருந்தும் நாமே உருவாக்கிக்கொண்ட போலி கலாச்சார வெளிக்குள்ளிருந்தும் பார்க்கும் உலகத்திலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட நிதர்சனமான சூழலிலிருந்துதான் பில்லா உருவாகின்றான். 

அவனுடைய உருவாக்கும் அடிமைத்தனத்தைப் பலவகைகளில் ஏற்றுக்கொண்டு கிடைத்த இடத்தில் மிச்சமான வாழ்வை வாழ்ந்து கழிக்கும் எவருக்கும் நேரடியான பரிச்சயத்தைக் கொடுக்கப் போவதில்லை. அதிகாரங்களுக்கு உழைத்துக் கொடுக்கும் முதலாலிய நாடுகளின் விசுவாசிகளாக வாழ்பவர்களுக்கும், அரசியல்வாதிகளின் நிழலில் வாழ்ந்துகொள்ளும் சமூகவாதிகளுக்கும் பில்லாவின் வாழ்வு ஓர் எச்சமாகத் தெரிய வாய்ப்பிருக்கிறது. மதங்களுக்குள் தத்துவங்களையும் கற்பிதங்களையும் வியாபாரமாக்கிக்கொண்டு வாழ்பவர்களுக்கும், பிறருடைய அல்லது யாரோ கொடுத்த கொள்கைகளைப் பிரக்ஞையின்றி பின்பற்றி போலியாக வாழ்பவர்களுக்கும் பில்லாவின் செயல்கள் அறமற்றதாகத் தெரியும்.

ஆனால், பில்லா செய்யும் அனைத்துக் கொலைகளுமே நல்லது கெட்டது எனும் அமைப்புக்கு அப்பாற்பட்டதாக ஒருவன் வாழ ஒருவனை அழிக்கின்றான் எனும் உலகப் பொதுமைக்கான நியாயத்தை நோக்கியதாக இருக்கிறது. இது எந்தமாதிரியான அறம் என்பதாகவே நம்முடைய கேள்விகள் இருக்கின்றன? பில்லாவின் கொலைகளை நோக்கி நாம் எறியும் கடைசி கேள்வியாக இருப்பது அறம் சார்ந்ததாகும். ஆனால், ஒரு பிற்படுத்தப்பட்ட மத அமைப்பைப் போற்றும் பின்னணியில் இருந்துகொண்டு நாம் பில்லாவைப் பார்த்தோமானால்,அவன் கொலைகள் நியாயமாகத் தெரிய வாய்ப்புண்டு. அவன் கொலை செய்து குவிப்பவர்களில் யாருமே நல்லவர்கள் எனக் கருதப்படுபவர்கள் இல்லை. அனைவருமே குண்டர் கும்பலையும், போதைப்பொருள் கடத்தல் செய்பவர்களையும்தான் பில்லா சுட்டுக் கொல்கின்றான். 

வசதியான ஒரு கலாச்சார சூழலுக்குள் வாழ விரும்பவர்களும் கர்மவினை எனும் வட்டத்திற்குள் தன் அறிவையும் ஆன்மாவையும் செலவிட்டு வாழ்பவர்களும் மறைமுகமாக பில்லாவை நியாயப்படுத்தவே முனைவார்கள். அவர்கள் பொறுத்தவரை மாசுப்பட்டிருக்கும் இந்த உலகம் சுத்தப்படுத்த வேண்டும். அவர்கள் நிம்மதியாக வாழ உலகம் சுத்தமாக வேண்டும். அவ்வளவே. அதற்காக அவர்கள் எந்த வினையையும் செய்யப்போவதில்லை. கெட்டவர்கள் அழிக்கப்படும்போது மறைமுகமாக இவர்கள் ஆதரிக்கிறார்கள். இது போன்ற கோழைத்தனமிக்க நல்லவர்களுக்குப் பில்லா நம்பிக்கை அளிக்கின்றான். இந்தச் சமூகத்தை நான் நெருங்கவில்லை, ஆனால் சமூக அமைப்புக்கு வெளியே, நீங்கள் நம்பும் அறங்களுக்கு வெளியே, நீங்கள் நினைக்கும் கலாச்சாரத்துக்கு வெளியே என்னை என் விருப்பத்திற்கு வாழவிடுங்கள் என்பதாகவே பில்லாவின் குரல் ஒலிக்கிறது. என்னால் இயன்றவரை என்னை நான் முன்னெடுப்பதற்கு நீங்கள் ‘கெட்டவர்கள்’ எனும் நம்பும் பலரை நான் அழிக்கின்றேன். அவர்களை அழித்து நான் என்னை அதில் நிரப்புகின்றேன். இதுதான் என் வாழ்வு. என் நியாயம் எனப் பில்லா சமூகத்திடம் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொள்கிறான்.

படத்தின் ஒளிப்பதிவு கவனத்திற்குரியவை. எடிட்டிங் மிகச் சிறப்பாக வந்துள்ளது. ஒரு ‘gangster’ படத்திற்குரிய ஒளியும், கச்சிதமான வசனங்களும், காட்சி அமைப்புகளும் பில்லா 1-ஐ விட இதில் மேலும் தனித்துவமாகக் கவனிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளன. மனதைப் பதற வைக்கும் வன்முறை காட்சிகள் என விமர்சனமும் பில்லாவிற்குக் கிடைத்துள்ளது. censor certificate அளித்து இதைக் குறிப்பிட்ட வயதை உடையவர்களே பார்க்கக்கூடிய படம் என்ற அனுமதியையும் வழங்கியுள்ளது. மேலும் ‘பில்லா’ ஒரு முழு ‘gangster’ படம் ஆகும். அதில் எந்தப் பம்மாத்தும் இல்லை. வழித்தவறி கலாச்சாரத்திற்கும் சமூகத்திற்கும் மிரட்டலாகிவிடும் லும்பர்களை நியாயப்படுத்தும் சினிமாவும் இல்லை. பில்லா மிக மேலோட்டமான ஒரு கமர்சியல் படம். ஆனால் அப்படத்தை நாம் விவாதிக்க முடியும். மற்றப்படி இது ‘தலை படம்’ ‘கால் படம், ‘வால் படம்’ எனச் சொல்லி கதாநாயகத்துவ வழிபாடு செய்பவர்களை நாம் பொருட்படுத்தவே தேவையில்லை..

கே.பாலமுருகன்

3 comments:

Doha Talkies said...

விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது நண்பரே.

Philosophy Prabhakaran said...

யப்பா யப்பா யப்பா யப்பா யப்பா... யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா...

Tamilvanan said...

//மாசுப்பட்டிருக்கும் இந்த உலகம் சுத்தப்படுத்த வேண்டும். அவர்கள் நிம்மதியாக வாழ உலகம் சுத்தமாக வேண்டும். அவ்வளவே. அதற்காக அவர்கள் எந்த வினையையும் செய்யப்போவதில்லை//