Thursday, March 3, 2011

மலேசிய - சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பால மாநாட்டில் நான் ஆற்றிய உரை


மேடை சடங்குகளில் எங்களுக்கு எப்பொழுதும் உடன்பாடில்லை. அதில் சிக்கிக்கொள்ளும் நம் தமிழ் நிகழ்வுகள் இன்னமும் அலங்காரங்களையே தற்காத்து வைத்திருக்கின்றன. மாற்றுச்சிந்தனையாளர்களுக்கு இம்மாதிரியான மேடை ஒவ்வாத ஒன்றுதான். சமீபத்தில் இத்தனை தமிழ் மக்களைத் தமிழ் சார்ந்து ஒன்றாக இணைத்துச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தனை ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களுக்கு இங்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்த வாசுதேவன் அவர்களுக்கும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கியத்தின் தேவை என்ன? நம் சமூகம் கொண்டிருக்கும் இலக்கியம் என்பதன் அர்த்தம் என்ன? எனும் கேள்வி எப்பொழுதும் எனக்கு எழுவதுண்டு. எதற்காக இலக்கியம் தொடர்ந்து படைக்கப்படுகிறது? காலம் காலமாக இலக்கியத்தின் அவசியத்திற்கு நம் சமூகம் கொண்டிருக்கும் விளக்கம், இலக்கியம் பண்பாட்டு ரீதியில் மனிதனைச் செம்மைப்படுத்துகிறது, அவனுடைய மனதையும் செயலையும் ஒழுக்க ரீதியில் கட்டமைக்கிறது, சிதறுண்டு கிடக்கும் நம் சமூகத்தைச் சீர்ப்படுத்துகிறது என நீண்டு கொண்டே போகின்றன.