Wednesday, February 9, 2011

சிறுகதை: காட்சிகளின் இரண்டுவகையான சத்தங்கள்

1

கைத்தொலைப்பேசியின் நேற்றைய இரவு வந்து சேர்ந்திருந்த குரல் பதிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பனி மூட்டம் அடர்ந்திருந்த கேமரன்மலை பிரதேசத்தில் காரணமே இல்லாமல் ஒருவன் தூங்கி வழிவது மிகவும் நிதர்சனம். அதுவும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் தொல்லைகளை நிராகரிக்க அதனை முடக்கிவிட்டு அரைமயக்கத்தில் தொலைவது மேலும் வசதி.

“கடன் அட்டை பாக்கி கட்டனும் மறந்திறாதீங்க” தம்பியின் குரல்.

“மாமா. . .அவுங்கலாம் வெளிலயே நிக்கறாங்க. யாரு அவுங்கலாம்?” குமரனின் குரல். நேற்று அதிகாலை 2 மணி போல அழைப்பு வந்திருக்கிறது. சற்று நிதானித்துவிட்டு மீண்டும் அவனுடைய குரல் பதிவைக் கேட்டேன்.

“மாமா. . அம்மா ரூம்புலேந்து எதோ சத்தம் கேக்குது” மீண்டும் அவனுடைய குரல்தான். 3.05க்கு அழைப்பு வந்திருக்கிறது. அவன் குரலில் ஏன் இப்படியொரு நடுக்கம்? பதற்றம் அதிகரித்தது.மீண்டும் அவன் குரல் ஒலித்தது.

“நீங்க யேன் இங்க வந்தீங்க? மாமா. . இவங்களாம் யேன் இங்க வந்தாங்க. மாமா உடனெ வாங்க. . இல்லன்னா. . .சுகுமாறன் வந்திருக்கான் தெரியுமா?” சட்டென ஒரு குழந்தையின் சத்தம் வளர்கிறது, நீடிக்கிறது. மீண்டும் அந்த அழுகை துண்டிக்கப்படுகிறது. அதன் பிறகு எந்தக் குரல் பதிவும் இல்லை. கேமரனிலிருந்து இப்பொழுது புறப்பட்டாலும் அங்குப் போய்ச்சேர எப்படியும் 5 மணி நேரம் ஆகும். என்ன செய்வதென தெரியாமல் உடனேயே குமரனின் வீட்டுத் தொலைப்பேசிக்கு அழைப்புக் கொடுத்தேன். முதல் இரண்டுமுறைக்கு எந்தப் பதிலும் இல்லை. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தேன். சந்தேகமும் பயமும் அடர்ந்து என்னை வலுவிழக்கச் செய்தன.

கேமரனிலிருந்து அடிவாரத்திற்கு இறங்கும்போது மணி மதியம் 1 ஆகியிருந்தது. கார் கண்ணாடியிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்த வெயிலின் தகிப்பு மேலும் பதற்றத்தைக் கூட்டியது. 10 நிமிடத்திற்குப் பிறகு மாரிமுத்து அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. காரை ஓர் ஒரமாக நிறுத்திவிட்டு கைத்தொலைப்பேசியை எடுத்தேன். அவருக்கும் குரலில் பதற்றம் இருந்தது.

“தம்பி! குமரன் வீட்டுலெ என்னமோ நடந்துருக்கு. அவுங்க அம்மா, ரெண்டு அக்காங்களும், அஞ்சலை, ஜோனி, பெரிய தாத்தா. . எல்லாம் செத்துட்டாங்க. குமரனுக்கு என்னமோ ஆச்சு. ஒன்னும் பேச மாட்டறான். ஆஸ்பித்திரிலெ சேர்த்துருக்காங்க. உடனே வாங்க தம்பி!”

அருகாமையைக் கடந்து போன எல்லாம் வாகனங்களிலிருந்தும் ஒரு துயர ஓசை கேட்பது போல இருந்தது. அந்த ஒலி காதுக்குள் புகுந்து சடசடவென அதிர்வை உண்டாக்கியது. சோகங்களைவிட அதிர்ச்சி அசைக்க முடியாத ஒரு காலத்தை நமக்கு முன்னே விரித்துக் காட்டுகிறது. அதில் அசையாத ஒரு புகைப்படம் போல மனம் சிக்கிகொள்கிறது. கைகள் பலவீனமடைந்தது போல இருந்தது. காரை சத்தேதுமின்றி செலுத்தத்தொடங்கினேன். 5 மணி நேரம் ஓட்டம் 7 மணி நேரமாக நீண்டது.


2
குமரனின் வீடு- 2010

கேமரா 1( வீட்டின் வாசல்)
அதிகாலை 1.35

கதவுக்கு வெளியில் விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்த குண்டு விளக்கு தவிர எந்த அசைவும் இல்லை. குண்டு விளக்கிலிருந்து வெளியிலுள்ள எல்லாம் பொருள்களிலும் தவறி தவறி விழுந்த ஒளி, எல்லாவற்றையும் அசைப்பது போல இருக்கிறது. கதவிலிருந்து 4 அடி தூரத்தில் அடர்ந்திருக்கும் மூங்கில் தண்டுகளின் பாதி உருவம் மட்டும் தெரிகிறது. வேகமான காற்று. மூங்கில் செடி குலுங்கி ஓய்ந்தது. மீண்டும் வேகமான காற்று. காற்றின் ஓசை ஒரு குழந்தையின் அலறல் போலவும் ஒலிக்கிறது.