Saturday, January 8, 2011

மலேசியத் தமிழிலக்கியத் துறையில் சிறுகதை – எழுத்தாளர் சீ.முத்துசாமி

இன்று (08.01.2011) சனிக்கிழமை கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் தமிழிழக்கிய கருத்தரங்கம் சுங்கைப்பட்டாணியில் நடைப்பெற்றது. சிறுகதை சார்ந்து மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமியும், கவிதை துறை சார்ந்து மூத்தக் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களும், எ.ம்.இளஞ்செல்வன் அவர்களின் இலக்கிய பார்வை என்கிற தலைப்பில் கோலாலம்பூர் எழுத்தாளர் மு.அன்பு செல்வனும் கருத்தரங்கத்தை வழிநடத்தினார்கள். காலை 9.00 மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாகவும் விவாத அரங்கமும் என மாலை மணி 4.30 வரை நீடித்து முடிவுற்றது.

எழுத்தாளர் சீ.முத்துசாமி தன் உரையில் இலக்கிய பிரக்ஞை இல்லாமல் போய்விட்ட தமிழாசிரியர்கள் குறித்து தனது எதிர்வினையைக் கடுமையாக முன்வைத்தார். பல நூறு தமிழாசிரியர்கள் உள்ள கடாரத்தில், இன்றைய நிகழ்விற்கு 3 பேர் கூட வராதது பெரிய தேக்கமாகவும், இலக்கியத்தில் ஆர்வமில்லாமல் போய்விட்ட ஆசிரியர்களை அடையாளம் காட்டுகிறது எனவும் கூறினார். மேலும் தற்போதைய சில இளம் படைப்பாளர்களுக்கு வரலாறு சார்ந்த ஆர்வமும் பிரக்ஞையும் குறைவாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் இந்த இலக்கியம் பற்றியும் இலக்கிய வரலாறு பற்றியும் தகவல்களும் ஆர்வமும் குறைவாக இருப்பதற்கு முக்கியக்காரணமாக சீ.முத்துசாமி முன்வைத்தது, கல்விதுறையில் தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் இல்லை, மேலும் இலக்கியத்தைப் பற்றிய அறிமுகமும் இருப்பதில்லை எனச் சாடினார். மொழி சார்ந்து அடிப்படை அறிவைப் பெற வேண்டுமென்றால் அந்த மொழி சார்ந்து மண்ணில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும் என அழுத்தமாகக் கூறினார்.