Wednesday, December 14, 2011

இந்தியப் பயணம் – பரப்பரப்பும் அமைதியும் (2)


3 மணிநேரம் 30 நிமிடத்திற்குப் பிறகு சென்னை விமான நிலையம் வந்திறங்கியப் போது பயணக் களைப்பை உணர முடியவில்லை. உடலுக்கு ஒரு தயாரிப்பு நிலை இருக்கிறது. நம்முடைய உடல் மீதான பலவகை கற்பிதங்களையும் கடந்து உடல் தன்னை உற்பத்தி செய்து கொள்கிறது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைகளும் பாதுகாப்பும் கொஞ்சம் கெடுபிடியாகவே இருந்தது. நான் அங்கு வந்து இறங்கியத் தினம் கனிமொழி விடுதலையாகி அநேகமாக இங்கு வரக்கூடும் என ஷோபா சக்தி சொல்லியிருந்தார். அந்தப் பரப்பரப்பை அதனுடன் தொடர்புப்படுத்திப் புரிந்துகொண்டேன். ஆனால் கடைசி வரை கனிமொழியைப் பார்க்க முடியவில்லை.


ஷோபா சக்தி விடைப்பெற்றுச் சென்றதும் சிறிது நேரத்தில் கவிஞர் ஐயப்பன் மாதவன் அங்கு வந்து சேர்ந்தார். அவரை அங்கு வரச்சொல்லி ஏற்கனவே நான் சொல்லியிருந்ததால் செல்மாவின் அழைப்புக்குப் பிறகு சட்டென அங்கு வந்து சேர்ந்தார். முகத்தில் கொஞ்சம் சோர்வும் அமைதியும் தெரிந்தது. ஏதோ பக்கத்துக் கடைக்குப் பால் வாங்க வந்ததுபோல மிகவும் யதார்த்தமாகக் காணப்பட்டார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை அங்குப் பார்த்தேன். அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார். அவர் இருந்த கலவரத்தில் அவரிடம் சென்று பேசத் தயக்கமாக இருந்தது. ஆகையால் வெறுமனே கவனித்துக்கொண்டிருந்தேன்.

உயிர்மை நூறாவது இதழ் பற்றியும், அந்த இதழுக்காக நூறு எழுத்தாளர்களின் கேள்வி – பதில் பகுதியை வடிவமைத்ததைப் பற்றியும் ஐய்யப்பன் பேசிக்கொண்டிருந்தார். தற்சமயம் ஐய்யப்பன் உயிர்மை இதழின் ஒரு சில பகுதிகளை வடிவமைப்பதைக் கவனித்து வருகிறார். ஐய்யப்பனின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். அதில் ஒரு ஏகாந்த நிலையும் வாழ்வின் பிரச்சனைகளை அலட்சியமாகப் பார்க்கும் மனநிலையும் பதிந்திருக்கும். நவீன கவிஞர்களில் ஐய்யப்பன் முக்கியமானவர். மேலும் சிங்கப்பூர் நண்பரான கவிஞர் பாண்டித்துரையின் மூலம் கடந்த ஆண்டுகளிலேயே ஐய்யப்ப மாதவன் எனக்குப் பழக்கம். சிறிது நேரத்திற்குப் பிறகு அவரும் விடைப்பெற்றுச் சென்றார். சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு 2மணிக்குப் புறப்பட வேண்டும். ஜெட் விமானச் சேவையின் வழி அங்குச் செல்வதற்காகக் காத்திருந்தபோது செல்மா தொலைப்பேசியில் அழைத்தார். மதுரையில் எனக்காக செல்மாவும் யவனிக்காவும் காத்திருப்பதாகச் சொன்னார்கள்.

மதுரைக்குச் செல்லும் விமானத்திற்குக் காத்திருக்கும் இடத்திற்குச் செல்லப் புறப்பட்டேன். அங்கு வைத்துக் கடுமையான பரிசோதனைக்குள்ளானேன். என்னுடைய பையை வாங்கி அதனுள் இருக்கும் புத்தகங்கள் பொருட்கள் என எல்லாவற்றையும் எடுத்து வெளியே கொட்டினார்கள். அநேகமாக அது மலேசியாவாக இருந்திருந்தால் அப்படிக் கடுமையாக நடந்துகொண்டவனின் முகத்தில் குத்தியிருப்பேன். பரிசோதனை செய்வது வழக்கமானது. ஆனால் ஒரு தீவிரவாதியை எதிர்க்கொள்வது போல சந்தேகித்துக் கடுமையான முறையில் பரிசோதனை செய்வது கண்டனத்திற்குரியது. அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதைக் காட்ட என் பொருள்களின் மீது கடுமையைக் காட்ட வேண்டுமா என்ன? என் பையிலிருக்கும் பேட்டரிகளைப் பிடுங்கிக் கொண்டவன் மீண்டும் பையை என்னிடம் நீட்டினான். உடல் முழுக்க வியர்த்திருந்தது. பெரும் பதற்றம். ஒரு முறை அவனை முறைத்துப் பார்த்தேன். அதுவே அப்போதைக்கான வெளிப்பாடாக இருந்தது.

தொடரும்
கே.பாலமுருகன்

No comments: