Thursday, December 2, 2010

கேலி சித்திரங்களும் கல்வி உலகமும்: கார்ட்டூனிஸ்ட் காஷிம்

2006 ஆம் ஆண்டு சிறந்த கார்ட்டூனிஸ்டாகத் தேர்வாகி, 1998 ஆம் ஆண்டு சிறந்த தேசிய தினத்திற்கான சின்னம் வரைந்ததற்கான விருதும் கிடைத்த காஷிம், 1970இல் பேரா மாநிலத்திலுள்ள தாப்பா எனும் இடத்தில் பிறந்தவர் ஆகும். நாட்டிலுள்ள பல இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் கார்ட்டூன் வரைபவராகப் பணியாற்றி ஆழமான அனுபவம் திறமையும் உடையவர் இவர்.

உத்துசான் மெலாயு எனும் மலாய்ப் பத்திரிக்கையின் கல்வி பிரிவில் கார்ட்டூனிஸ்டாகப் பணிப்புரிந்து வரும் இவர், தனது “usik usik” எனும் வாசகத்தின் மூலம் உத்துசான் நாளிதழில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். கல்வியும் பள்ளிச்சூழல் சார்ந்தும் வேடிக்கையான கார்ட்டூன்கள் வரைந்து கடுமையான பிரச்சனைகளைக்கூட நகைச்சுவையாக்கி சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தவர்.

கல்வி அமைச்சு புதியதாக அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எப்படி ஆசிரியர்களையும் கற்றல் சூழலையும் பாதிக்கிறது என்பதன் இன்னொரு பகுதியைத் துணிச்சலாகத் தன் கேலி சித்திரங்கள் மூலம் பொதுமக்கள் பார்வைக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். குறிப்பாக அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் போதிக்க வேண்டும் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு எப்படி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பெரும் தடுமாற்றங்களை அடைகிறார்கள் என்பதை அதிகமாகத் தன் சித்திரங்களில் மூலம் விமர்சனம் செய்திருக்கிறார். (அவர் குறிப்பிட்ட மொழி தடுமாற்றம் நம் சமூகத்து கல்வியாளர்களின் ஒருவகையான போதமை எனவே குறிப்பிடலாம்)

தமிழில் ஓவியர் சந்துருவின் சித்திரங்கள் முக்கியமானவையாகும். கோடுகளின் வழியாகவே கோட்டோவியங்களைப் படைத்து தனக்கென தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். ஒரு சிறுகதையின்/கவிதையின் ஆழ்மனதைத் தொடக்கூடிய சாத்தியப்பாடுகளை தன் ஓவியங்களின் மூலம் உருவாக்கிக் காட்டியவர் சந்துரு. சித்திரங்களில் ஒரு நகைச்சுவை பாங்கை இடைப்பகுதியாகக் கொடுத்து மையப்பிரச்சனையையும் தொட்டுவிடச் செய்தார். குறிப்பாக செம்மொழி மாநாடு குறித்தான கார்ட்டூன்கள் இரசிக்க வைத்தன. கார்ட்டூனிஸ்ட் என்பவர்கள் வெறும் நகைச்சுவை சித்திரங்களை வரைந்துகொண்டு ஊடகத்தோடு தன்னைச் சுருக்கிக் கொண்டவர்கள் அல்லர் என்பதை காஷிம் சந்துரு போன்றவர்களின் துணிச்சலான செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு சொல்ல முடிகிறது. சமூக நிகழ்வுகளின் மீதான தனது பரிச்சியத்தை வளர்த்துக்கொண்டு அதனைச் சார்ந்த புதிய கருத்தாக்கங்களையும் உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து தன் ஓவியத்தின் நகைச்சுவைக்குள் தனது கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கத் தெரிந்த ஆற்றலுடையவர்கள் சமீபத்திய ஓவியவர்கள்.

கீழ்க்காணும் காஷிம் அவர்களின் கார்ட்டூன் ஓவியங்களை மாதிரிக்காக அளித்துள்ளேன். இதுவரைக்கும் 1000க்கும் மேற்பட்ட கேளிக்கை சித்திரங்களை வரைந்துள்ளார்.

படம் 1:
சோதனையை முன்வைத்து இங்கு உருவாகியிருக்கும் போராட்டம் என்கிற உணர்வை வெளிப்படுத்துவதாக இந்தக் கேலி சித்திரம் அமைந்துள்ளது. சோதனையை எழுதுவதற்கு மண்டபத்தினுள் செல்லும் மாணவர்களைப் பார்த்து, “சிறப்பாகப் போராடுங்கள்” என ஆசிரியர் சொல்வது போல சோதனை மாணவர்களுக்குப் பெரும் சோதனைக் கொடுக்கக்கூடியதாகவே முன்வைக்கப்படுவதை காஷிம் இதில் வரையறுக்கிறார். சோதனையாலும் சோதனைகளின் முடிவாலும் மாணவர்களின் சிரிப்பும் மகிழ்ச்சியும் பிடுங்கப்பட்டு, அவர்களின் உளவியல் பெரும் மாற்றத்திற்குள்ளாகுவதைத்தான் இங்கு நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 

படம் 2:
முதலாம் ஆண்டிற்குப் பல கற்பனைகளுடன் நுழையும் மாணவர்களின் எண்ணங்கள் பிறகொரு சமயத்தில் அவர்களின் மீது சுமத்தப்படும் பலவகையிலான சுமையால் சிதைந்து போவதை இந்தச் சித்திரத்தின் வழி விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார் ஓவியர். முதலில் இந்தச் சுமையின் வடிவம் புத்தகப்பையின் மூலமாகவே அவர்களுக்குள் ஆழ்ந்து படிகிறது. அவர்களின் உயரத்திற்கும் உடல் அளவிற்கும் சற்றும் பொருந்தாத பெரிய புத்தகப்பையை முதுகில் சுமந்துகொண்டு சிரமப்பட்டுப் பள்ளிக்கு வந்து சேர்வதைப் பார்த்த என் அனுபவத்தைத் தொடக்கூடியதாக இந்த ஓவியம் அமைந்துள்ளது.

படம் 3:
முன்பொரு சமயத்தில் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்ட கணினி கட்டிடங்கள் சரிவு சார்ந்த தன் விமர்சனத்தையும் கேலியையும் இந்தச் சித்திரத்தின் மூலம் மீட்டுக்கொண்டு வருகிறார் காஷிம். மாணவர்கள் எல்லோரும் தலையில் பாதுகாப்பு தொப்பியை அணிந்துகொண்டு கணினி வகுப்பிற்குள் நுழைகிறார்கள். ஆசிரியர் ‘கணினி கூடம் தயாராகிவிட்டது, கணினிகளும் கிடைத்துவிட்டன், பிறகேன் தொப்பி அணிந்துள்ளீர்கள்?”எனக் கேட்க, அதற்கு மாணவர்கள் வேடிக்கையாக, “ இடிந்துவிழும் கிருமியிலிருந்து எங்களைத் தற்காத்துக்கொள்ள’ எனப் பதிலளிக்கிறார்கள்.
இப்படி மேலும் கல்வி உலகில் நிகழும் பல சர்ச்சைகள்/பிரச்சனைகள்/ குறைபாடுகள் என அனைத்தையும் தொட்டுப் பேசக்கூடிய கேலி சித்திரங்களை ஓவியர் காஷிம் தொடர்ந்து படைத்துக் கொண்டு வருவது ஆரோக்கியமான விசயமாகும்.

குறிப்பு: மேற்கண்ட காஷிம் அவர்களின் கேலி சித்திரங்கள் ஏற்கனவே வெவ்வேறு காலக்கட்டங்களில் உத்துசான் நாளிதழில் பிரசுரமானவையாகும். கூடிய விரைவில் கார்ட்டூனிஸ்ட் காஷிம் அவர்களை வல்லின இணைய இதழுக்காக ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்துள்ளேன். விரைவில்.

நன்றி: உத்துசான் நாளிதழ்
ஓவியர் காஷிம்
கே.பாலமுருகன்
மலேசியா