Friday, May 14, 2010

சிறுகதை: சூன்யத்தில் நகரும் வீடு

கணினியில் குவிந்து கிடந்த மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றாகத் திறந்து சுதாரித்துக் கொண்டே உடலில் மெல்ல பரவியிருந்த சோம்பலையும் உறக்கத்தையும் சமாளித்தபடியே அறையில் அமர்ந்திருந்தேன். கனகா பக்கத்து அறையில் யாருடனோ தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள். அவள் வெகுநேரம் அரட்டையடித்துக் கொண்டிருப்பது சற்று எரிச்சலாக இருந்தாலும் அவ்வப்போது சூழலைப் பற்றிய தெளிவு கண்களைத் தழுவி நிற்கும் உறக்கத்தால் மறந்து போவதால் எல்லாம் உணர்வுகளும் எங்கோ கனவுலகத்தில் மிதந்து கொண்டு இயங்குவது போல இருந்தன.

“நீங்க படுக்க வரலியா? இன்னும் என்னா பண்றீங்க?”

அறைக் கதவோரமாக அவள்தான் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பொருட்படுத்தவில்லை. கணினியின் வெண் திரையில் பார்வையை ஆழப் பதித்து அந்த வெளிச்சத்தின் மெல்லிய உக்கிரத்தால், அருகாமையைத் தொலைத்திருந்தேன்.

“என்னாங்க இந்த மாதிரி பண்றீங்க?”

“நீ போய் படுத்துக்குயேன். . என்ன யேன் தொந்தரவு பண்றே?”

மீண்டும் பக்கத்து அறையில் தொலைப்பேசி உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. எதையும் கண்கானிக்க விருப்பமில்லாமல் இருந்தேன். மனைவி கனகா கொஞ்ச நாட்களாக விசித்திரமான மனோநிலைக்கு ஆளாகியிருப்பது மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுடைய இயக்கங்கள் பிசகிய காட்சிகள் போல இந்த வீட்டில் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் நிலை தப்பிய தருணங்களில் எனக்கு முன்னே சற்று மாறுதலாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

மீண்டும் அறைக் கதவோரமாய் வந்து செங்குத்தாக நின்றாள். ஏதாவது பேசுவாள் என்று காத்திருந்தேன். சிறிது நேரத்திற்கு அமைதியாகவே அமர்ந்திருந்தேன். அவள் மெல்ல என்னை நெருங்க முயற்சித்தாள். பிறகு ஏனோ அவள் பிம்பம் பின்வாங்குவதைச் சிலாகித்துக் கொண்டேன்.

“உன்னைத்தான் படுக்க சொன்னனே? இல்லனா போய் போன்லெ பேசு. . அதைத்தானே செஞ்சிகிட்டு இருக்கெ”

அவள் அங்கிருந்து அகன்று படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். என்ன செய்ய போகிறாள்? முன்கதவோரமாக நின்று கொண்டு வெளிக்காட்சிகளில் இலயித்திருப்பாள். பார்வையை வெளியே அகோரமாக அலையவிட்டபடி அவளுக்குள் அமிழ்ந்து கிடக்கும் சொற்களை மென்று விழுங்கியபடியே நின்றிருப்பாள். அல்லது கைகளின் நரம்புகளை அறுத்துக் கொண்டு இரத்தம் சொட்ட மூன்றாவது முறையாக மரணிக்க முயற்சிப்பாள்.

“கனகா! கனகா!”

அவளுடைய நிழல் படிக்கட்டுகளில் சரிந்து கரைந்தது.

1

17 நவம்பர் இரவு 8.20

“அறுந்து தொங்கும் கால்களுக்கிடையில் சிக்கிச் சிதைந்து கொண்டிருந்த என் தேகம், மெல்ல மீண்டு ஒரு ஆற்றோரமாக வந்து சேர்கிறது. தண்ணீரில் தலையை நுழைத்து பெரும்வெளியிலிருந்து விலக முயற்சிக்கின்றேன். தொங்கும் கால்களின் விரல்கள் என் முதுகைச் சுரண்டி என்னை மீண்டும் மீட்கின்றன. துண்டிக்கப்பட்ட கழுத்துகள் நடப்பட்டிருக்கும் ஒரு சாலையோரமாக வந்து அமரும்போது மனம் பயங்கரமாக வலிக்கிறது.”

சடாரென்று கண்கள் விழித்து மேலே உற்றத்தை நன்றாக உற்றுக் கவனித்தேன். உடலிலிருந்த போர்வை கட்டிலுக்குக் கீழே விழுந்து கிடந்தது. தலைக்குமேல் தொங்கியபடியே இருந்த கால்கள் இப்பொழுது அங்கு காணாமல் போயிருந்த ஒரு சூன்யம் நிலவியிருந்தது. மூன்றாவதான ஒரு இயக்கத்தைப் பற்றி மீண்டும் உணரத் துவங்கினேன். என் இல்லறத்தில் நிம்மதியும் அமைதியும் மெல்ல விலகி சலனம் சேர்ந்திருப்பதைப் பற்றி மீண்டும் ஆழமாகத் தெரிந்து கொண்டேன்.

அறையிலிருந்து வெளியேறும் போது, வெளியிலுள்ள மேசை இடுக்குகளில், அலமாரி அடியில் படிக்கட்டுகளில் என்று என்னைச் சுற்றியுள்ள இடங்களிலெல்லாம் அறுப்பட்ட தலைகள் ஒளிக்கப்பட்டிருப்பதைப் போல ஒரு திக்பிரமை தழுவியது. மனைவி அறையில் ஓர் ஆங்கிலப் பாடலை முனகியபடியே தலை சீவிக் கொண்டிருந்தாள் போல. “சரக் சரக்” என்று தலை மயிரை அவள் வாறும் ஓசையாகத்தான் அது இருக்க முடியும். அவள் மிகவும் நேர்த்தியாக அவளுக்கென்று ஒரு வீட்டை உருவாக்கியிருந்தாள். அந்த இடைவெளியில் அவளுடைய எல்லாம் இருப்பும் என்னிடமிருந்து தள்ளித்தான் இரண்டாவது வீட்டில் நடப்பது போல மாறிக் கொண்டிருந்தது.

2
12 நவம்பர் இரவு 10.45

படுக்கை விரிப்பைச் சரிசெய்துவிட்டு பக்கத்து அறைக்குள் நுழைந்தவள் உள்ளேயிருக்கும் வானோலியைத் தட்டிவிட்டாள். பழைய தெலுங்கு பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. நான் அவளை நெருங்கிவிடுவேன் என்று அவள் பயந்திருக்க வேண்டும் போல. ஆனால் நான் அவளைப் பார்ப்பதிலிருந்தே பலநாட்களாகத் தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். என் கண்களிலிருந்து அவளுடைய உலகம் தவறி பல மாதங்களாகியிருக்கும் போலும்.

“கனகா! கனகா!. .”

அவள் பெயரை உச்சரித்துப் பார்த்தேன். எனக்குள்ளே சரிந்த அந்தச் சொற்கள் பாதாளத்தின் ஆழத்தில் நெளியும் ஓசையைப் போல மெல்ல காணாமல் போயின. கணினியைத் திறந்து இயக்கிக் கொள்வதைத் தவிர வேறு மாற்று ஆறுதல் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கணினி திரையை அகற்றியதும், அந்தத் திரையில் என் முகம் இருள் படிந்த நிழலாகத் தெரிந்தது. அந்தக் கரும் பிம்பத்திற்கு அப்பால் ஒரு பெண் நின்றிருப்பதும் தெரிந்தது.பின்பக்கமாகத் திரும்பி பார்த்தேன். அந்த இடத்தில் குளியலறையின் கதவு மட்டும் சிறிய இடைவெளியில் திறந்து கிடந்தது. மீண்டும் கணினி திரையைப் பார்க்கும்போது வெறும் சூன்யம் மட்டுமே எஞ்சியிருந்தது. கைகளால் அந்தத் திரையைச் சுத்தப்படுத்திவிட்டு இல்லாத என் முகத்தின் பிம்பத்தையும் தேடிக் கொண்டிருந்தேன்.

“கனகா ! கனகா!”

3
21 நவம்பர் இரவு 11.40

யாரோ கதவைத் தட்டும் ஓசை நெருங்கி வந்து கேட்டது.

“கனகா! கனகா! கதவெ தொற. யாரோ வந்துருக்காங்க போல”

“ஏய் கனகா! சொன்னா கேக்க மாட்டெ? நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். . ரொம்ப திமிருலெ ஆடறே. . புருஷன்னு மரியாதை இருக்கா?”

அவள் அறைக்குள்ளிருந்து எந்தச் சலனமும் கேட்கவில்லை. தொலைப்பேசி உரையாடல் மட்டும் மென்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த உரையாடலுக்கு நடுவே அடிக்கடி “தூக்குல தொங்குடா பரதேசி!” என்று கேட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சொற்களைக் கேட்கும்போதெல்லாம் மெல்ல அதிர்ந்து போனேன்.

உள்ளுக்குள் ஏற்பட்ட ஆத்திரத்திற்கு, அந்த அறைக் கதவை உடைத்து உள்ளே போய் அவள் முகத்தை இரண்டாகக் கிழிக்க வேண்டும் என்று தோன்றியது. எழுந்து சென்று படிக்கட்டுகளில் இறங்கும்போது, அவள் சிரிக்கும் ஓசை கதவுக்கடியிலிருந்து பல ஒலி சரடுகளாகப் பிளந்து பெரும்வெளியில் கலந்து கொண்டிருந்தது. அந்தச் சிரிப்பின் வீச்சு பலமான உக்கிரத்தைக் கிளறிவிட்டது. வெளிவாசலுக்கு வந்து கதவைத் திறந்தேன். வெளியில் அம்மோய் அக்கா நின்றிருந்தாள். என்னை ஒருமாதிரியாக மேலேயும் கீழேயும் உற்றுக் கவனித்தாள்.

“என்னாச்சி? சாப்டியா? யேன் வீட்டுக்கு வராமே இங்கயே இருக்கே? அதுவும் இந்த வீட்டுலே. இப்படிச் செய்யாதெ. . நாங்கலாம் இருக்கோம். . வந்துரு”
அந்த அம்மோய் அக்காவை அதற்கு மேலும் பார்ப்பதற்கு அறுவறுப்பாக இருந்தது. கதவைப் பலம் கொண்டு சாத்திவிட்டு நடந்தேன்.

4
19 நவம்பர் இரவு 10.15

அன்று இரவு முழுவதும் அவளை எப்படி நெருங்குவது என்று யோசித்துக் கொண்டே அறை வாசலில் இருக்கும் சாய்வு நாற்காலியில் உறங்கிவிட்டிருந்தேன். மீண்டும் எழுந்திருக்கும்போது மணி 10.15 ஆகியிருந்தது. அறை சன்னலுக்கு வெளியிலுள்ள கம்பியில் யாரோ ஏற முயற்சிப்பது போல சப்தம் கேட்டது. உள்ளே நுழைந்து சன்னல் துணியை விலக்கி பார்த்தேன். வெறும் இருள் மட்டும்தான் முனகிக் கொண்டிருந்தது. எங்கோ ஒரு தொலைவில் யாரோ என்னை நோக்கிக் கத்தும் ஓசையும் கேட்டது.

“செத்துருடா. . நீ செத்துரு!. . வாழத் தகுதியில்லாத முண்டமே! செத்துரு”

உடல் நடுங்கி அங்கிருந்து விலகி ஓடினேன். கனகாவின் அறை வாசல் பக்கமாகத் தைரியம் தேடி வந்து நின்றேன். அவள் அறையில் வானோலி இயங்கிக் கொண்டிருந்தது. வழக்கத்திற்க்கு எதிராக இன்று வானொலியில் ஒலித்த பாடல்களின் சத்தம் குறைந்தபடியும் நீண்டபடியும் இருந்தது. அவள்தான். கனகாதான் வானொலி ஒலி இயக்கியில் விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்பதை அனுமானிக்க இயன்றது.

“என்னா கனகா? யேன் இப்படிப் பண்றே? என்னால தாங்க முடிலே”

“கனகா! உனக்குப் பிடிக்கலனா நீ என்னை விட்டுட்டுப் போய்டு. . கூடவே இருந்து கழுத்தெ அறுக்காதே! என் கழுத்தெ அறுக்கற மாதிரி நீ என்னமோ பண்றே. கத்தியெ எடுத்து அறுத்துக்கிட்டு சாகனும்னு அடிக்கடி தோணுது”

“ஏய் கனகா! நான் வேறொருத்தியெ வச்சிருக்கேன் வச்சிக்கில்ல. . உனக்கு யேன் அதுலெ அக்கறை? எனக்குக் காசு பிரச்சனை. . அவக்கூட தப்பான உறவு வச்சி. . பெரிய பிரச்சனையா ஆச்சி. . அவளோட அண்ணன் தம்பிலாம் எவ்ளவோ காசெ புடுங்கிட்டானுங்க. . காடி காணாம போச்சி. . எங்கயோ தொலைச்சிட்டேன். . உனக்குத் தெரியாது நான் படறெ கஸ்டம். . என்னெ விட்டு விலகுறதுனா ஒரே மூச்சா பேசிட்டு போயிடு. . இப்படிக் கொடுமெ பண்ணாதே பிளிஸ்”

வானொலியில் ஓடிக் கொண்டிருந்த பாடலின் ஆண் குரல் திடீரென்று பெண் குரலாக மாறிப் பாடத் துவங்கின.

5
24 நவம்பர் இரவு 11.55

சுவரைப் பார்த்து ஏதாவது பேசித் தொலைக்க வேண்டும் என்று தோன்றியது. சுவர் ஒரு கடுமையான வெறுமையைச் சுமந்து எனனைச் சுற்றி விரிந்திருந்தது. சுவரில் மீதமிருந்தது இரண்டே படங்கள். ஒன்று அப்பாவின் புகைப்படம். அவருடைய கண்கள், காது, மூக்கு, வாய், புருவம் என்று எல்லாமே முரடு பிடித்தவாறு இறுக்கமாகத் தெரிந்தன. அடுத்தபடியாக ஒரு பூ சாடியின் படம்.

“கனகா! கனகா!. . உன்கிட்ட பேசனும். . நிறைய பேசனும். எனக்கு வெறுமையா இருக்கு. இந்த வாழ்க்கையெ வாழ பிடிக்கல. . உன்னை ஏமாத்தனும்னு நான் ஒன்னுமே பண்ணலே. . உன்கிட்ட காசு புடுங்கலெ. . எல்லாத்தையும்விட உன் மேலத்தான் ரொம்ப அன்பா இருக்கேன். . நீ இதைப் புரிஞ்சிக்கனும். .”

சுவரைப் பார்த்து சொற்கள் என் வாய்க்குள்ளிருந்து இயந்திரகதியாய் வழிந்து கொண்டிருந்தன. கால்கள் இரண்டும் மறுத்துப் போய், மின்சாரமாய் உடல் முழுவதும் பாய்ந்து கொண்டிருந்தது. எழுந்து நடக்கத் தைரியமும் திராணியும் அற்று குதிகாலிட்டு சுவரை காலால் உதைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். யாரோ என் பின்பக்கமாக வந்து அமர்வது போல இருந்தது. சூன்யம் கொடுக்கும் மனநிலையாக அது இருக்கலாம். சூன்யத்தின் உருவமாகக்கூட இருக்கலாம். மனதைத் திடப்படுத்த முயற்சி செய்து கொண்டே அந்த யாரோ என்கிற பிரமையிடம் பேசத் தொடங்கினேன்.

“நான் சீக்கிரமே செத்துருவேன் போல. . கழுத்தை அறுத்துக்கிட்டோ. . இல்ல, தூக்குப் போட்டுகிட்டோ. . இல்ல, மாடிலேந்து கீழ விழுந்தோ. . சீக்கிரம் என்னை நான் அழிச்சிக்குவேன். . கண்டிப்பா இது நடக்கும். . என்னால தாங்க முடிலே.. ஏதோ ஒன்னு என்னை அழுத்துது. . கட்டாயப்படுத்துது. . என் பொண்டாட்டி என்னெ மதிக்கல. . நான் பாவப்பட்டவனா போய்ட்டேன். .”

அருகில் அமர்ந்திருப்பது போல இருந்த அந்த உருவம் இப்பொழுது மேலும் நெருங்கி வந்து என் முதுகைத் தொட்டது.

6
19 நவம்பர் இரவு 9.05

வீட்டு முன் வாசல் கதவோரமாக முன்பின் தெரியாத ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியிருந்தது. அவர்கள் கைகளில் பாராங் கத்தியும் கட்டையும் வைத்துக் கொண்டு எனக்காகக் காத்திருப்பது போல உணர்ந்தேன். கால்கள் நடுங்க படிக்கட்டுகளில் கண்களை இறுக மூடிக் கொண்டே பிதற்றினேன். பிதற்றுவதால் உள்ளுக்குள் இருந்த மனஅழுத்தம் தளர்வது போல தோன்றியது.

“கனகா! வந்துரு. . என்னைப் பிடிச்சிக்க. எனக்குப் பயமா இருக்கு. . கீழே குதிச்சிருவேன் போல. . கனகா. .”

அவள் அறைக்குள் இருளைப் பரவவிட்டுக் கொண்டு கட்டிலுக்கடியில் நுழைந்து கொண்டாள். இலேசாக முணுமுணுக்கும் அவள் குரல் எனக்குக் கேட்டது. அவள் திமிறு பிடித்தவள். சற்று முன்புதான் தூக்கில் தொங்கும்படி கத்திவிட்டு உள்ளே நுழைந்தவள், பிறகு என் நடவடிக்கைகளைக் கண்காணிக்க கதவின் சந்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களைப் பிடுங்கி எரிய வேண்டும் போல இருந்தது.

“ஏய் கனகா! நீ என்னை மோசமானவன்னு நினைச்சிட்டெ. . வெளில நிக்கறானுங்களே.. அவனுங்க அவளோட அடியாளுங்கத்தான்.. என் காசைலாம் பிடுங்கி சாப்ட்டவனுங்க. . உனக்குத் தெரியுமா?  என் முகத்தெ வச்சி அடிச்சி வெளுத்தானுங்க தெரியுமா? எவ்ள அவமானமுனு தெரியுமா கனகா? செத்துப் பொழைச்சி வந்துருக்கன் கனகா. . ஆ. . உடம்புலாம் அரிக்குது. . எரியுது”


7
26 நவம்பர் இரவு 10.25

இதற்கு மேலும் சூன்யம் தாங்க முடியாத நிலைக்குள் வந்திருந்தேன். மனைவி கனகா கடைசிவரை என்னை அவள் அறைக்குள் அண்ட அனுமதிக்கவே இல்லை. எவ்வளவு முயற்சித்தும் அவள் என்னை வெறுத்திருந்தாள். பலமுறை அழுதும் மிரட்டியும் அவளை அழைத்துப் பார்த்துவிட்டேன். அவள் அந்த அறைக்குள் தனது இரண்டாவது வீட்டில் வாழத் துவங்கிவிட்டாள். அவளுக்கு ஆறுதலாகத் தொலைபேசி உரையாடல் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

“கனகா! கனகா! மனசுலாம் வலிக்குது. . கிட்ட வா கனகா! முடிலெ!”

8
கண்களில் ஊரும் காலம்

“யாருமா. . அந்த வீட்டுலெ? ஒரு பொம்பளே அடிக்கடி வெளில வந்து நின்னுகிட்டு எங்கயோ பாக்குது. . சொந்தமா பேசிக்குது. “
“உனக்கு யேன் அதெல்லாம். . கூடிய சீக்கிரம் அந்தப் பொண்ணெ வந்து தூக்கிட்டுப் போயிருவாங்க. . அதைக் கேட்ட உன்னாலெ தூங்க முடியாதுமா. . அவ்ள பயங்கரம்”

“பரவாலெ சொல்லுமா. . என்னாச்சி? 2 நாளைக்கு முன்னெ யாரோ ரெண்டு பேரு வந்து கூப்டு கூப்டு பார்த்தாங்கெ. . அந்தப் பொண்ணு வெளிலே வரமாட்டுது”

“அந்தப் பொண்ணோடெ புருஷன் இந்த மாசம். . ம்ம்ம்ம்ம். . 10 தேதி நவம்பர்லெ. . அந்த வீட்டுலெதான் தூக்குப் போட்டுச் செத்துட்டான் பிள்ளெ. . அய்யோ அம்மா. . நாக்குலாம் வெளில தள்ளிருச்சி. ..அதுக்கப்பறம் என்னாச்சினு தெரிலெ அவனோடெ பொண்டாட்டிக்கு. . பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிட்டா. . அந்த வீட்டுலயே கெடக்குறா. . வெளில வர்றது இல்ல. .”
“அப்பனா சாப்பாடுலாம்?”

“அதான் தெரில எதுமே வெளங்குல. . அந்தப் பிள்ள வீட்டுலெ உள்ளவங்க கூட்டிட்டுப் போவெ எத்தனையோ தடவெ வந்துட்டாங்க. . வரமாட்டேங்குது. . பேய் பிடிச்ச மாதிரி ஏதேதோ பண்ணுது. . நாளைக்கு வந்து கதவெ உடைச்சி உள்ள போய் பிடிச்சிட்டு போவப் போறாங்க போல. . “

“அது தனியா என்னாமா பேசிக்குது?”

“தெரிலமா. . ஆனா. . அப்பப்பெ அந்தச் செத்து போனானே. . அவனோட குரலு வீட்டு உள்ளெ கேக்குதாம். . பேய் மாதிரி இவளும் கத்துவா. .”

“யேன் அவரு தூக்குப் போட்டுக்கிட்டாரு?”

“எங்கயோ காசு ஏமாந்துட்டான் போல. . அவன் சாவறதுக்கு முன்னாலே மூனு தடவெ அடி வாங்கி வார்ட்டுலெ கெடந்தான் வேற. . எவளயோ வச்சிருந்து நல்லா பட்டுட்டான். . ஒரு பெரிய பயங்கரம் அந்த வீட்டுலெ நடந்துகிட்டு இருக்குமா. . . ”

9
27 நவம்பர் இரவு 10.00

“கனகா! என்னாலெ சூன்யத்தெ தாங்க முடிலெ. .”

கண்ணாடி முன் அவள் அமர்ந்திருந்தாள். அவள் முகம் இரண்டாகப் பிளந்து ஆண் முகத்தைப் பெற்றுக் கொண்டிருந்தது.

(வார்த்தை இதழ்-பிப்ரவரி 2009)

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா