Friday, April 9, 2010

அங்காடித் தெரு – இரண்டாம் ஆட்டமும் வேறொரு புரிதலும்

எழுத்தாளர் சாரு அவரது வலைத்தலத்தில் “அங்காடித் தெரு” படத்திற்கான விமர்சனத்தை எழுதியிருந்தார். எனது விமர்சனத்திற்கும் அவரது விமர்சனத்திற்கும் நிரம்ப முரண் இருந்ததை உணர முடிந்தது. ஒருவரின் முரணை உடைப்பது நமது சுயநலம். நாம் உடன்படும் எல்லாவற்றிக்கும் எல்லோரும் உடன்பட வேண்டுமென நிர்பந்திப்பதும் ஒருவகை வன்முறையே. அவை ஆரோக்கியமானதாக இருந்தாலும்கூட. அங்காடித் தெரு குறித்து அவரது கருத்தியலின் முரணிலிருந்து எனக்குள் நிரம்பும் ஒருவகை புரிதலை முன்வைக்கும் ஒரு தர்க்கம் மட்டுமே இது.

ஏழை என்றால் நல்லவன்; பணக்காரன் என்றால் கெட்டவன் என்று இரட்டை எதிர்மறையாகப் பார்க்கும் பழைய காலத்து மார்க்சீயப் பார்வையெல்லாம் காலாவதி ஆகி ஒரு நூற்றாண்டு ஆகிறது. ஆனால் வசந்த பாலன் அப்படித்தான் வாழ்க்கையைப் பார்க்கிறார். படத்தில் வரும் அத்தனை ஏழைகளும் நல்லவர்களாகவும், பணக்காரர்கள் அத்தனை பேரும் கடைந்தெடுத்த அயோக்கியர்களாகவும் இருக்கிறார்கள். - சாரு

சில பணக்காரர்களின் அடையாளம் இப்பொழுது புதிய அரசியலில் நிறுவப்படுவது குறித்தும் மேலும் விரிவாகப் பேச இடமுண்டு. பணமிருப்பவன் சமூகத்தில் செல்வாக்கைப் பெறுவதற்காக ஏழைகளுக்குப் பணம் கொடுத்து விளம்பரத்தைத் தேடிக் கொள்வது முதல், அரசு உதவி செய்யும் என்கிற நம்பிக்கையில் வெறுமனே இருக்கும் சில ஏழைகளின் சோம்பேறித்தனங்கள் தொடங்கி மார்க்சிய பார்வை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. வரவும் வேண்டும். அது ஒரு மார்க்சியமாக இல்லாவிட்டாலும்.

பணம் இருப்பவனிடம்தான் அதிகாரம் வலுவான குரலாக அடிமையாகக் கிடக்கிறது. ஒரு பணக்காரன் தேவையில்லை என்று புறக்கணித்தாலும் அதிகாரத்தின் சிறு சிறு துண்டுகள் அவனிடமே கடைசியாக வந்து மண்டியிட்டுக் கிடக்கின்றன. அவன் அதைக் கையில் எடுப்பதும் அல்லது முதலாளியின் காலுக்கடியில் வெறுமனே அமர்ந்திருக்கும் ஒரு நாயைப் போல வைத்திருப்பதும் அவனது உரிமை.

இந்த ஒரு அடையாளத்தை முன்வைத்து மதிப்பீட்டால், விளிம்புநிலை சமூகமே அரசாங்கத்தால் அல்லது பணக்காரர்களின் உதவியால் தனது வாழ்வு மீட்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்புடனே போராடி வருகிறது. அவர்களுக்கு வேண்டியது உழைப்பதற்குரிய நேர்மையான களமும் அதற்குரிய ஊதியமும். கம்யூனிச கோட்பாடுகளையும் அதற்குப் பிந்தைய மார்க்சிய பார்வையையும் பழையவை என கொஞ்சம் நகர்த்தி வைத்துவிட்டாலும், இந்தப் பிரச்சனை வேறு எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்படுமா? அல்லது இதற்கு மாற்றான புதிய சிந்தனையோ மதிப்பீடோ “புத்திஜீவிகள்” எனக் கூறிக் கொள்பவர்கள் அளித்துள்ளார்களா? அல்லது அதையும் முதலாளி வர்க்கத்தின் அடிவருடிகளே ஏழைகளுக்காகப் பரிந்துரை செய்ய வேண்டுமா? கோட்பாட்டையெல்லாம் ஒதுக்கிவிடுவோம், உழைப்பாளிக்கு நிகழும் சுரண்டலை இதுவரை வந்த எந்தக் கோட்பாடுகளும் நிவர்த்திக்காத சூழலில் இன்னமும் மாறாமல் முதலாளிகளால் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் அவர்களின் வாழ்வை மீண்டும் சொல்வதில் என்ன பழமைவாதம் இருக்கப் போகிறது? இதை ஒரு மறுவாசிப்பைப் போல முன்வைக்கும் அங்காடித் தெருவை ஒரு மார்க்சிய கோட்பாட்டை முன்வைத்து புறக்கணிக்க முயல்வதால் அவர்களின் மறுவாழ்விற்கு ஏதேனும் பரிந்துரைகள் அல்லது தீர்வுகள் கிடைத்துவிடுமா? காட்டப்படுவதால் தீராத அதன் உக்கிரம் மீள்பதிவு எனும் முறையில் ஒரு படமாகவாவது இருக்கும் அல்லவா?

அவர்களின் வாழ்வு, பரிதாபத்திற்குரியது எனும் மட்டும் அடையாளப்படுத்தும் கலை அபத்தம் அல்ல, அதையும் கடந்து பணக்காரர்களின் சமூக கட்டமைப்பிற்கு எதிராக வாழ்வுரிமைக்காகப் போராடும் ஒரு உணர்வை அல்லது தந்திரத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆவணமாக மாற்றப்பட வேண்டும் என அடுத்தக்கட்ட விவாதத்தை முன்வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அங்காடித் தெருவில் அவர்கள் முதலாளியின் பிடியிலிருந்து தப்பி அதற்கு எதிராக இன்னொரு சிறு முதலாளியிடம் அடைக்கலம் பெற்று அதே தெருவில் உழைக்கத் துவங்குகிறார்கள்.

அவர்கள் முதலாளி வர்க்கத்தின் முழுமையான பிடியிலிருந்து விடுப்படுதல் என்பது சாத்தியமாகாத பட்சத்தில் அதன் நிதர்சனம் சார்ந்து நேர்மையான ஒரு முதலாளியான, (அதே தெருவில் சுயமாகக் கடை வைத்து உழைக்கும் ஒரு பார்வையற்றவர்) அவரிடம் சரணடைகிறார்கள். வசந்தபாலன் ஒரு சமூகப் போராளியைப் போல அவர்களை முழுவதுமாக முதலாளி வர்க்கத்திடமிருந்து விடுதலையளிக்கும் கதைநாயகனாக மாறாமல் சமூகத்தின் நிதர்சனத்தைத்தான் நம்பிக்கயளிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார்.

பணக்காரர்கள் அனைவரும் அயோக்கியவர்களாகவும் ஏழைகள் அனைவரும் நல்லவர்களாகவும் காட்டப்பட்டிருப்பதாகச் சொல்லும் சாருவிடம், என்னகொரு பதில் இருக்கிறது, “அங்காடித் தெருவில் லிங்குவும் கனியும் சந்திக்கும் பணக்காரர்களும் மட்டுமே கெட்டவர்களாக இருக்கிறார்கள். அல்லது அங்காடித் தெருவில் ஒரு பக்கத்தில் வாழும் பணக்காரர்கள் மட்டுமே அயோக்கியர்களாக இருக்கிறார்கள்”.

அங்காடித் தெருவின் மொத்த வாழ்க்கையையும் வசந்தபாலன் காட்டியிருப்பதாக எந்தப் பதிவும் இல்லாததால் சாருக்கு மேற்படி விளக்கமளிக்க அவசியமில்லை. ரங்கநாதன் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது ஏன் எல்லோரும் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் ஏன் எல்லோரும் மூச்சி விடுகிறார்கள் எனக் கேட்க முடியுமா?


“நான் தான் கடவுளை வேண்டிக் கொண்டேன், குழந்தை குள்ளமாகப் பிறக்க வேண்டும் என்று. குழந்தை குள்ளமாக இல்லாவிட்டால் நான் யாருடனோ படுத்து குழந்தை பெற்றுக் கொண்டதாகச் சொல்வார்கள் அல்லவா? இப்போது பாருங்கள் பாய், யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள்.” - சாரு

இதுவொரு ஆபாசமான காட்சியாகவும், இப்படியொரு மனநோய் பீடித்த சமூகத்தில் வாழ்வதற்கு வெட்கப்படுவதாகவும் சாரு குறிப்பிட்டிருந்தார். இது மனநோய் பிடித்த சமூகம் என்கிற உண்மையை அங்காடித் தெரு படத்தை பார்த்துதான் மிகவும் தாமதமாக அவர் புரிந்து கொண்டதன் இயலாமையை நினைத்து வருந்துகிறேன். அடுத்தவன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அவனைப் பார்த்து மன உலைச்சலுக்கு ஆளாகும் மனநோய் பீடித்தவர்கள் பல நூற்றாண்டுகளாக இருக்கிறார்களே.

அந்தப் பாலியல் தொழிலாளி பேசும் அந்த வசனத்தை ஆபாசமாகப் பார்க்கும் அவர், அவள் அப்படிப் பேசுவதற்குரிய அத்துனை ஒட்டுக்குமுறைகளையும் அவமானங்களையும் அந்தச் சமூகம் அளித்ததன் உக்கிரத்தை வசனத்திற்கு அப்பாற்பட்டு வெளிப்படும் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வின் மீதான ஆபாசங்களைப் பார்க்கத் தவறிவிட்டார். அங்காடித் தெருவில் கொஞ்சம் நேரம் மட்டுமே வந்து போகும் இந்தக் காட்சியும் இந்த வசனமும், போலித்தனமான முறையில் அறங்களை உற்பத்தி செய்து அதற்கு எதிராக வாழவும் எளிமையானவர்களை அதே அறங்களை முன்வைத்து சிதைக்கும் முனையும் ஒரு சமூகத்தை ஓங்கி அறையும் முயலும் அபாரத்தை உணர்த்துகிறது. குழந்தை ஊனமாகப் பிறந்ததைக்கூட பொருட்படுத்தாமல் இந்தச் சமூகத்தின் கேவலமான மதிப்பீட்டிலிருந்து தான் தப்பிவிட்டதாக ஆறுதல் அடையும் ஒரு பாலியல் தொழிலாளியின் சொற்கள், கணம் கொண்டு அவர்களை வெறும் விபச்சாரப் பிண்டமாகப் பார்க்கும் காமுகர்களின் முகத்தைக் கிழிக்கும் விரல்கள். வசனத்தின் பின்னாலுள்ள இன்னொரு பரிணாமத்தை அல்லது விளைவைக் கண்டடைய இயலாததால்தான் இத்தகையதொரு விமர்சனமா?

வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்தால் இந்த உலகம் இந்தக் கணமே அழிந்து போய் விடும். இவ்வளவு அவலங்களுக்கு இடையிலும் உலகம் ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் இந்த இருளின் இடையிலும் ஏதோ ஒரு ஒளிக்கீற்று கசிந்து கொண்டிருக்கிறது என்பதனால்தான். - சாரு

இதைத்தான் வசந்தபாலனும் படத்தின் இறுதி காட்சியில் நிறுவியிருக்கிறார். மீண்டும் வாழ்வின் மீதான நம்பிக்கையாலும் அதன் மீதான பிடிமானத்தாலும்தான் இருவரும் அதே தெருவில் மீண்டும் அவர்களின் வாழ்வைத் துவங்குகிறார்கள். இந்தப் புள்ளியிலிருந்து மீண்டும் படத்தை எதிர்க் கொண்டால் எல்லாம் வரட்சியும் துயரமும் கரைந்து போகக்கூடிய புதிய ஆற்றல் பிறக்கும். ஒரு பார்வையாளனாக படத்தில் நாம் சலிப்படைந்த எரிச்சலடைந்த எல்லாம் காட்சிகளிலிருந்து விடைப்பெற்று ஒரு நம்பிக்கையின் பால் பிடிமானம் கொள்வோம். மேலும் சாருவின் ஒரு சில கருத்துகள் மிகவும் ஏற்புடையதே. தமிழ் சினிமாவிற்குரிய மிகையான பதிவுகள் இந்தப் படத்திலும் காட்டியிருப்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

சாருவின் கருத்துகளுக்கு எதிர்கருத்து தெரிவிக்க வேண்டும் என்கிற முனைப்பில் எழுதிய விமர்சனம் கிடையாது. எனது புரிதலை முன்வைத்து இந்தப் படத்தை நியாயப்படுத்தவும் முயற்சிக்கவில்லை. எனது புரிதலை மட்டும் சொல்லியிருக்கிறேன். மேலும் உலக சினிமாக்களை முன்வைத்து தமிழ் சினிமாவை விமர்சிப்பதால் இனி எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய சினிமாவின் சந்தையை வெறும் வர்த்தகமும் வியாபாரமும் மட்டுமே பிடித்து வைத்திருக்கிறது. எல்லாரையும் ஒரு நுகர்வாளனாகவே உற்பத்திக்கும் இந்திய சினிமா சந்தையின் முன் எப்பொழுதாவது வெளிவரும் அங்காடித் தெருவைப் போன்ற படத்தின் சில பலவீனங்களையும் சகித்துக் கொள்ளும் பக்குவம் புதிய சினிமாவுக்கான தேடல் நிரம்பியவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா