Friday, February 19, 2010

சிறுகதை: ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுபடும் ஆற்றல்

“என்ன வரையப் போறேனு தெரியுமா?”

“தெரியலையே. இன்னும் வரையவே இல்லெ, அதுக்குள்ள எப்படித் தெரியும்?”

“இதோ என்னா ஒரு குச்சி மனுசன் நடந்துகிட்டு இருக்கான், என்னா கண்ணு உங்களுக்கு?”

ஒரே ஒரு சிறு கோடு. இன்னும் கைகள்கூட முளைக்கவில்லை. ஆனால் அந்தக் கோடு அதன் நேர்கோட்டிலிருந்து தற்செயலான ஒரு நேர்த்தியின்மையைக் கொண்டிருந்தததால், அது நடக்கத் துவங்கியிருக்கலாம்.

“இப்பவாச்சம் என்னானு தெரியுதா?”

“இல்லையே!”

“இதுக்கூடத் தெரியலே?”

பவித்திரா ஓவியம் தீட்டத் துவங்கினாள். அவளுக்கு ஓவியப் பயிற்சி கிடையாது. வர்ணங்கள் விரல்களிலிருந்து உதிரக்கூடியவை எனும் நம்பிக்கை அவளிடமிருந்திருக்கக்கூடும். முதலில் ஒரு வர்ணம், பிறகு அதன் மீது மாற்று வர்ணம். பிறகு அதனருகில் முந்தைய வர்ணத்திற்கு சிறிதும் ஒவ்வாத மற்றொரு வர்ணம். பென்சிலைச் சட்டென்று கையில் எடுத்தவள் தாளின் நான்கு முனையிலிருந்தும் வெறுமனே கிறுக்கத் துவங்கினாள். அது பரவிக் கிடந்த ஒழுங்கற்ற வர்ணங்களின் மையத்தை அடைந்தது.

“இதுதான் புள்ளி” என்றாள்.

கூர்ந்து கவனித்தேன். அங்கொரு மையம் உருவாகியிருந்தது. ஒன்றுக்கு ஒன்று சிதறியிருந்த முரண்பாட்டு வர்ணங்களுக்குக்கூட ஒரு மையம் ஒரு மாயையைப் போல இருப்பதை ஒழுங்குகளின் நகலில் பயிற்சிப்பெற்ற ஜடக் கண்கள் அறியவில்லை. மீண்டும் இரு வர்ணங்களை எடுத்து அவசர அவசரமாகத் தாளின் மேற்பரப்பில் தூவினாள். அது ஏற்கனவே அங்கிருந்த வர்ணக் கலவையில் தெறித்து மேலும் ஒழுங்கற்று சிதைந்தது.

“இது என்னானு தெரியுமா?”

“பாபுஜி அங்கிள் தலை மாதிரி இருக்கு, இதெல்லாம் ஓவியமா?”

“உங்களுக்கு எதுமே தெரியமாட்டுது. இப்பெல்லாம் இப்படித்தான் வரையறாங்க”

அவள் ஏதோ மந்திரத்தைச் செய்து முன்பிருந்த மையத்தை ஓவியத்திலிருந்து தொலைத்துவிட்டிருந்தாள். எவ்வளவோ முயன்று தேடினேன். கலவைக்கு பிடிப்புக் கொடுத்திருந்த மையம் அகன்று மீண்டும் அது ஒரு கலவையாகியிருந்தது.

“இங்கிருந்த புள்ளி எங்க பிள்ளெ? அது கொஞ்சம் நல்லாருந்துச்சே”

“நீங்க பாக்கலயா? அது இப்பத்தான் பறந்து போனுச்சி”

“ஆங்ங்ங் பறக்கும். . உங்க ஊருல பறக்கும்”

“பாப்பாத்தில்லாம் கலர் கலரா பறக்குது, ஏன் இங்க உள்ள ஒரு கலரு பாப்பாத்தியா ஆயிருக்காதா? உங்களுக்கு ஒன்னுமே தெரியில. இப்படி ஓவியத்துலேந்து பறந்து பறந்துதான் பாப்பாத்தியே வந்துச்சாம்”

“உங்க ஊருல சொன்னாங்களா?”

மீண்டும் வெள்ளை வர்ணத்தை எடுத்து ஆங்காங்கே பூசினாள். திட்டு திட்டாக ஓவியத்தில் ஒரு ஒளி உருவாகியிருந்தது. பிரமிப்பும் ஆச்சரியமும் அவளது ஒழுங்கற்ற முயற்சிகளை நோக்கி படர்ந்தன.

“இப்பெ எப்படி இருக்கு? கொக்குங்க வந்துருச்சி”

“இது கொக்கா?”

“ஆமாம், இது எலிஸ் அண்ட் வண்டர்லைன்ல வரும் கொக்கு, நீங்க கார்ட்டூன் பார்த்துருக்க மாட்டிங்க”

அவள் பயன்படுத்தும் பிரஸ் வாய் பிளந்து கசங்கியிருந்தது. அதைக் கொண்டு அவள் உருவாக்கும் ஒரு ஒழுங்கற்ற ஓவியம் மேலும் வலுவடைந்திருந்தது. ஓவியம் எப்பொழுது முழுமைப்பெறும், அது முடிவுறும்போது, அவளது ஓவியம் என்னவாக இருக்கும் என்கிற பதற்றம் பரவியிருந்தது. ஒருவேளை அது வெறும் அர்த்தங்களற்ற கலவையாகத் தேங்கிவிட்டால், இனி அந்தச் சிறுமி ஓவியம் வரைய முயற்சிப்பாளா என்கிற சந்தேகமும் தோன்றியது. அவளின் அடுத்தக்கட்ட முயற்சிகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்குவதன் மூலம் அவளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த நினைத்தேன்.

“என்னா பாக்கறீங்க? அடுத்து என்ன வரையப் போறேனா? இப்பெ ஒரு மானம் இங்கெ முளைக்கப் போது, தெரியுமா?”

“மானம் இல்லெ வானம். யேன் வானம்?”

“இங்கப் பாத்திங்களா மழை பேஞ்சிருக்கு, அப்ப மானம் இருக்கனுமெ”

அவளுக்கருகில் இருந்த பிரசை நிற்க வைப்பதற்காக அவள் பயன்படுத்திய குவளையிலிருந்து தண்ணீர் தாளின் ஒரு முனையில் ஒழுகியிருந்தது. நீல வர்ணத்தின் குப்பியிலிருந்து வர்ணத்தை அள்ளிய பவித்திரா அதை ஓவியத்தின் மேல்பரப்பில் அகலமாக உதறினாள். குட்டி குட்டி வானங்கள் அங்குத் தோன்றியிருக்கக்கூடும். இதற்கு மேல் பொறுமையில்லாதவனாக அங்கிருந்து எழுந்துவிட்டேன்.

“எங்க ஓடறீங்க? பயமா இருக்கா?”

முன்கதவைத் திறந்துவிட்டு வெளிச்சம் உள்நுழைவதற்குள் வேகமாக வெளியேறினேன். எனக்கான வெளி எப்பொழுது வேண்டுமானாலும் சிதையும் அபாயம் அந்தச் சிறுமியின் கைவசம் இருந்ததை உணரும் ஒரு மையத்தை அடைய எவ்வளவோ சிரமப்பட வாய்த்திருந்தது. அநேகமாக பவித்திராவின் நீர்க்குவளையிருந்து மேலும் ஒரு புயல் காற்றோ அல்லது இலையுதிர் காலமோ வழியக்கூடும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா