Tuesday, October 13, 2009

பணியிடத்து அதிகாரக்குரல்கள்



       கடந்த பத்தியில் தமிழாசிரியர்கள் பற்றி குறிப்பிடிருந்தபோது, ஆசிரியர்கள் சுதந்திரமாக தனக்குரிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாமல் தலைமை ஆசிரியர்களால் வழிநடத்தபடுவது போலவும், பள்ளியில் முழுநேரமாக அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் கருத்துகள் சொல்லப்பட்டிருந்தது. இந்தச் சூழல் எல்லாம் பள்ளிகளிலும் இல்லை. தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இப்படியொரு அதிகாரக் குரலை வெளிப்படுத்துவதில்லை. நட்புடன் அன்பாகப் பழகக்கூடிய நல்ல தலைமை ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதே சமயம் கண்டிக்கத்தக்க தனது பதவியின் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அதிகாரத் தொனியுடன் ஆசிரியர்களை வழிநடத்தும் தலைமை ஆசிரியர்களும் பலர் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.


             ஒரு சில பள்ளிகள் அந்தந்த தலைமை ஆசிரியரின் விருப்பப்படி அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் நடத்தப்படுவது மறுக்க முடியாத உண்மை. தலைமைத்துவ அமைப்பை தன் சுய விருப்பபடி அமைத்துக் கொண்டு அவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் ஆசிரியர்களை அதிகாரம் பண்ணி அதிகநேர வேலை வாங்குதல், தொடர்பில்லாத சந்திப்புகளுக்கு அனுப்புதல், அவர்களின் பணி உயர்வில் மெத்தென போக்கைக் காட்டுதல் போன்றவற்றைச் செய்வதுண்டு. இதையும் கடந்து ஆசிரியர்களுடன் அணுக்கமாகப் பழக மறுத்து, நல்ல உறவை வளர்த்துக் கொள்ள தயங்குபவர்களும் உண்டு. காரணம் அதிகாரமும் ஆக்கிரமிப்பும் ஒரு பரவசமான இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறது. அந்த இடைவெளி அவசியமானதாகக் கருதப்பட்டு கொண்டாடவும் படுகிறது.

                   ஒரு சிலர் தனது பதவியின் காரணமாக தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் புரிந்துணர்வுடன் செயல்பட விரும்பமாட்டார்கள். எல்லோரையும் “தனக்குக் கீழ்” வேலை செய்பவர்களே என்கிற அடையாளத்தினுள் வைத்திருப்பதாலும், அவர்கள் மீது அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஆதிக்கத்தைச் செலுத்த தனக்கு உரிமை இருப்பது போலவும் உடன்பட்டுப் போகாமல் எப்பொழுதும் ஊழியர்களுடன் பகைமை உணர்வையே வெளிப்படுத்துபவர்களும் உண்டு. இங்கே பழி வாங்கல்கள் தாராளமயமாக்கப்பட்டிருக்கும். இதனால் ஊழியர்கள் அதிகாரக்குரல்களால் நசுக்கப்படும் மீதங்களாக ஓர் இயந்திரம் போல உழைப்பைக் கொடுத்துவிட்டு திரும்பும் ஜடங்களாக மாற்றப்பட்டிருப்பார்கள். இதற்கும் இயந்திரத்தை இயக்கி வேலை செய்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடிய வாய்ப்புண்டு.

                     பள்ளியில் ஆசிரியர்களுக்கு அவர்கள் மீது காண்பிக்கப்படும் அதிகாரத்தின் கொடுமைகளை அவர்கள் தாராளமாகத் தட்டிக் கேட்கும் உரிமை உண்டு. ஆட்டு மந்தையைப் போல தலை ஆட்டிக் கொண்டு கூட்டத்துடன் கூட்டமாக அதிகாரத் தொனிகளுக்கு முன் மண்டியிட வேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு வரக்கூடாது. ஆசிரியம் அறிவுசார்ந்த துறை என்பதால் வலிமையான சிந்தனையால் தன்னை கோலோட்சி பண்ணும் அதிகாரத்திலிருந்து மீட்டுக் கொள்ளும் திறனை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். பணியிடத்தின் அதிகாரத்துவ மனோநிலைகள் தவிர்க்கப்பட்டு, “தன்னுடன் பணியாற்றும்” என்கிற புரிதலுக்கு ஆட்பட்டு, எல்லாம் உரிமையும் கொண்ட சக மனிதர்களாக எல்லோரையும் வழிநடத்தக்கூடிய தலைமைத்துவ போக்கு உருவாக வேண்டும். உலக அளவில் பார்த்தோமானால், பல நாடுகளின் அரசின் வீழ்ச்சிக்கும், அப்பாவி மக்களின் இனப்படுகொலைகளுக்கும் அதிகாரக் குரல்களே காரணமாக இருப்பதை, இந்தப் போக்கு எவ்வளவு வன்முறையானது என்பதை உணர முடியும்.

கே.பாலமுருகன்