Friday, September 11, 2009

கடவுளின் சட்டையும் மாணவர்களும்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வியாழக்கிழமையும் சபையில் தேசிய பாடல் ஒலிக்க துவங்கியதும் மாணவர்கள் உடல் உற்சாகம் பெரும். உடலை நிமிர்த்தி நேர்க்கோட்டில் வைத்து வானொலியில் பாடல் ஒலித்ததும் அதனுடன் சேர்ந்து வாயை அசைப்பார்கள். அருகில் செல்ல நேரும்போது அவர்கள் பாடலை இராகம் தப்பியும் வரிகள் விட்டும் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்க முடியும்.

சில ஆசிரியர்கள் பாடலை உடனேயே நிறுத்திவிட்டு மாணவர்கள் தவறவிட்ட சொற்களை அல்லது வரிகளைச் சீர்ப்படுத்தி மீண்டும் பாடலை ஒலிக்கச் செய்து பாட வைப்பார்கள். அப்படியும்கூட இன்னமும் ஒரு சில மாணவர்கள் வாயை மட்டும் அசைத்துக் கொண்டு முகப்பாவனைகளால் ஏமாற்றுவதை அறிய முடிகிறது. நாம் மாணவர்களுக்கு நாட்டுப் பற்றை உணர்த்துவதில் காட்டும் அக்கறையைக்கூட சில சமயங்களில் தேசிய பாடல் அல்லது நாட்டுப் பற்று பாடலைக் கற்றுக் கொடுப்பதில் அவ்வளவாகக் கவனம் செலுத்துவது கிடையாது. பள்ளியின் முதல்நாளில் எல்லோருக்கும் பாடல் வரிகள் அடங்கிய தாளைப் பிரதியெடுத்து வழங்கி அவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப் பழக்குவோம். வாசிக்கத் தெரியாத மாணவர்களின் கைகளிலுள்ள பாடல் வரிகள் பூச்சாண்டியைப் போல அவர்களைப் பயமுறுத்துமே தவிர அது அவர்களுக்குப் பரிச்சியமாகப் போவதில்லை.

பள்ளிக்குப் புதியதாகக் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் சில மாதங்களுக்குத் தேசிய பாடல் வாயில் நுழைய சிரமப்பட்டு மறுத்துக் கொண்டிருக்கும். அவர்களைப் பாடச் சொல்லி கேட்கும்போது அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் மழலைத்தன்மை அடைந்து ஒரு குழந்தைத் தவழ்ந்து வருவது போல இருக்கும்.

அப்படியொருமுறை ஒர் ஒன்றாம் ஆண்டு மாணவனைப் பாடச் சொல்லிக் கேட்கும் அனுபவம் கிடைத்தது. மிகவும் உற்சாகமாக உடலை நிமிர்த்தி கைகளைப் பக்கவாட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு பாடத் துவங்கினான்.

“tuhan baju. .”

என்கிற ஒரு வரி பாடலின் இடையில் சிக்கியிருந்தது. மீண்டும் பாட சொன்ன போது அதே வரி மீண்டும் ஒலித்தது. அந்த மாணவனை மீண்டும் அந்த வரியை உச்சரிக்கச் சொல்லி அதைத் திருத்தினேன். “tuhan kurniakan. “ மீண்டும் அவன் அந்த வரியை விடமுடியாமல் அதையும் இழுத்துக் கொண்டே பாடலைப் பாடிய போது சிரிப்பு வந்தது.

“டே. . கடவுளோட சட்டையா? அப்படி இல்லடா. . இப்படி. . என்ன சொல்லுவியா ஒழுங்கா? நீ என்ன கடவுளோட சட்டைய பத்தில்லாம் பேசறெ?”

“tuhan baju. . “

“தம்பி. .யப்பா. . கடவுள் என்ன சட்டை போட்டிருப்பார்னு தெரியுமா?”

“தெரியும் சார். . சுக்குல் சட்டை போட்டுருப்பாரு”
தனது சட்டையைக் காட்டி அதைக் கூறினான். அப்பொழுதுதான் அவனுடைய சட்டையில் இரண்டு பட்டன்கள் இல்லாமல் அதில் ஊக்கு சொருகி குத்தியிருப்பது தெரிந்தது. சட்டை பாக்கெட்டில் பள்ளியின் சின்னம் இருக்க வேண்டிய இடத்தில் வெளிறிய வேறு ஒரு பள்ளியின் சின்னம் உருகுலைந்து இருப்பதைப் பார்க்க முடிந்தது.

“யாரோட சட்டெ இது?”

“எங்க அண்ணனோட சட்டெ சார்”

“உனக்குன்னு சட்டெ இல்லையா?”

“அப்பா அடுத்த வாரம் பாசார் மாலாம்லெ வாங்கி தரேனு சொல்லிருக்காரு சார்”

“சரி நீ வகுப்புக்குப் போ. . உனக்கு புது பள்ளிச் சின்னம் தரச் சொல்லி உங்க வாத்தியார்கிட்ட சொல்றேன்” என்றதும் கடவுளின் சட்டையைச் சரிசெய்துவிட்டு அவன் நகர்ந்தான். அவன் உடலில் தொங்கிக் கொண்டிருப்பது கடவுளின் சட்டையாகத்தான் இருக்க முடியும்.

நமது அன்றாட அவசர அலுவல்களுக்கு நடுவில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் சீறுடைகளைக் கொஞ்சம் கவனிக்க நேர்ந்தால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக உடுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சில மாணவர்களின் சட்டையில் பட்டன்களுக்குப் பதிலாக சிறியதும் பெரியதுமான ஊக்குகள்தான் பல்லிழித்துக் கொண்டிருக்கும். அவர்கள் அதை மறைப்பதற்காகச் செய்யும் சாகசங்கள் மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கும். வகுப்பில் பிற மாணவர்களை எதிர்க்கொள்ள துணிவில்லாமல் எப்பொழுதும் சட்டையை மேசையின் விளிம்பில் வைத்து மறைத்துக் கொண்டு அமர்ந்தே இருக்கத்தான் முயற்சி செய்வார்கள்.

“சட்டெ யேண்டா கிழிஞ்சிருக்கு? தைக்க முடியாதா?”

“சட்டெ யேன் இப்படி வெளுத்துப் போச்சி? உங்க வீட்டுல ஒரு சட்டை வாங்கித் தர மாட்டாங்களா உனக்கு?”

“நாளைக்கு சட்டையில பள்ளிச் சின்னம் இருக்கனும், இல்லைனா அப்பறம் அவ்ளத்தான் நீ”

மாணவர்களின் சட்டைகளில் தென்படும் கிழசல்களையும் நேர்த்தியின்மைகளையும் நாம் அணுகும் விதமே ஒரு மிரட்டலாகவும் தண்டனை கொடுக்கக்கூடிய ஒரு நாட்டாமையாகவும்தான் இருக்கிறதே தவிர அதன் பின்னனியை அறிந்து அந்தக் கடவுள்களின் சட்டையைச் சரிசெய்ய ஏதாவது ஒரு முயற்சியை எடுக்கும் சிந்தனைகள் மிகக்குறைவாகத்தான் இருக்கின்றன போல. குறைந்தது அந்தச் சட்டையுடன் அவனைப் பிறமாணவர்களுக்கு நிகராக நடத்துவதற்காகவாது நாம் முயற்சிக்க வேண்டும்.

“சார் பாக்கெட்டு கிழ்ஞ்சி தொங்குது பாருங்க”

சில சமயங்களில் நமது சக்திக்கேற்ப எல்லாம் மாணவர்களுக்கும் உதவ முடியாமல் போகும்போது, நம்மிடம் இருப்பது அவர்களுக்கான ஆதரவும் அல்லது அவர்களின் நிலையைச் சரிப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக் கண்டறியும் அக்கறையும்தான். இன்றும் பேருந்தில் கண்ணாடியோர சன்னலைத் தேடிப் பிடித்து தனது புத்தகப்பையால் தனது சட்டையை மறைத்துக் கொண்டு ஏதும் அறியாத பாவனையில் பள்ளிக்கு வந்திறங்கும் மாணவர்கள் அணிந்திருக்கும் கடவுளின் சட்டையை நீங்கள் பார்த்ததுண்டா?

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி