Monday, August 10, 2009

நீங்களும் உங்கள் வீடும் ஆபத்தில் உள்ளீர்கள்

சிறு பகிர்வு மட்டுமே. அறிவுரையென்று எடுத்துக் கொள்ள வேண்டாம். ADT என்ற முழுநேர கண்கானிப்பு பாதுகாப்பு திட்டத்தினை வீடு வீடாகச் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த சில சீன இளைஞர்களைப் பார்க்க நேர்ந்தது. கையில் ஒரு கோப்பையும் சில விவரங்கள் அடங்கிய அட்டைகளையும் வைத்துக் கொண்டு, “உங்கள் வீடும் நீங்களும் ஆபத்தில் உள்ளீர்கள்” உடனே இந்தப் பாதுகாப்பு வளையத்தை உங்கள் வீட்டில் பொருத்துங்கள். இதுவே தற்காலத்து ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று ஏதேதோ வசனங்களை அடுக்கிக் கொண்டே போனார்.

அவர் எடுத்துக்காட்டாக சொன்ன சில விஷயங்கள் இங்கே:


1. உங்கள் வீட்டில் அலாரம் உள்ளதா?
-இல்லையென்றால், அலாராம் இல்லாத வீட்டைத்தான் கொள்ளையர்கள் கண்டறிந்து உள்ளே நுழைகிறார்கள்
-இருக்கிறது என்றால் அந்த அலாராத்தை உடனே செயலிழக்கச் செய்துவிட்டு / செயலிழக்கச் செய்யச் சொல்லி வற்புறுத்தி உள்ளே நுழைகிறார்கள்

2. சாதரண அலாரம் என்னச் செய்யும்? (லோ லோ என்று கத்தும்/ புலம்பும் - இது வேறு அலாரங்கள்-பிறகு பார்த்துக் கொள்ளலாம்)

- சத்தமாக ஒலிக்குமே தவிர அதைப் பொருட்படுத்தாதவர்களின் காதுகளில் ஒலிக்கப் போவதில்லை அல்லது உங்கள் வீடு ஆபத்தில் உள்ளதைக் காவல் துறைக்குச் சொல்ல யாராவது நல்லுள்ளங்கள் முன்வந்தால் ஒழிய, உங்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியாது.

- அல்லது அந்த அலாரம் 20-30 வினாடிகள் கழித்தே ஒழிக்கத் துவங்கும், அதற்குள் அதனை அடைத்துவிட கொள்ளையர்கள் திடீர் நடவடிக்கைகளில் இறங்கலாம்

3. ADT அலாரம் என்னச் செய்யும்?

- எல்லாம் வசதிகளும் சேவைகளையும் உள்ளடக்கிய கருவித் தரப்படும். அந்தக் கருவியிலேயே கொள்ளையர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாலோ அல்லது முன்வாசல் கதவை அறுக்க முயன்றாலோ, சன்னலை உடைக்க முயன்றாலோ, அதன் அதிர்வுகள் உடனே “கொள்ளை நடந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியை அங்கீகரித்து” சத்தம் எழுப்பத் துவங்கிவிடும். ஒரு நிமிடத்திற்குள்ளேயே இந்தத் தகவல் மையக் கண்கானிப்பு நிறுவனத்திற்குச் சென்றவுடன், அருகிலுள்ள ரோந்து காவல் துறையினரிடம் இது குறித்து உடனே அவசர தகவலும் முகவரியும் அனுப்பப்படும்.

- அல்லது இந்தக் கருவியைக் கண்ட கொள்ளையர்கள் அதை உடனே செயலிழக்க வறுபுறுத்தும்போது, அந்தக் கருவியை அடைப்பதற்கான இரண்டு கடவுசொல் கொடுக்கப்பட்டிருக்கும், அதில் இரண்டாவது கடவுசொல்லின் இரகசிய எண்களை அழுத்தும்போது, அந்தக் கருவி செயலிழந்துவிடும் ஆனால் நீங்கள் ஆபத்தில் இருப்பதற்கான தகவல் உடனே கண்கானிப்பு மையத்திற்குச் சென்றுவிடும். (இதுதான் இந்த அலாரக் கருவியின் வித்தியாசம் என்று அந்த இளைஞர் கூறினார்).

- ஆகையால் உங்களைக் கொள்ளையடிக்கும் வந்திருக்கும் நபர்கள் அலாரம் அடைந்துவிட்டதாக எண்ணி எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியே வரும்போது காவலாளிகள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துவிடுவார்களாம்.

சரி இப்பொழுது சில காமெடிகளைப் பார்ப்போம்:

அந்த அதிநவீன பாதுகாப்பு கருவியை அறிமுகப்படுத்தி பேசியவர் சொன்னதிலிருந்து

1. தகவல் உடனே (சிங்கப்பூரில் இயங்கிக் கொண்டிருக்கும் மைய நிறுவனம்) அவர்களைச் சென்றடைந்ததும், அவர்கள் மலேசிய ரோந்து காவல் துறையினரிடம் தகவல் சொல்லிவிடுவார்காளாம், அவர்களும் உடனே விரைந்துவிடுவார்களாம். இது எவ்வளவு உறுதி என்று கேட்டேன், காரணம் அன்மையில் ஓர் இடத்தில் கொள்ளை நடப்பதாக அறிவித்து 4 மணி நேரம் கழித்தே “பாதுகாப்பு வழங்க” வேண்டியவர்கள் அங்கே சென்றுள்ளார்கள்.

2. அதற்கு அந்த இளைஞர் கூறியது: “இல்லை, எங்கள் நிறுவனம் அவர்களுக்கு 30% பணம் தருகிறது, அதாவது இந்தப் பாதுகாப்பு சேவையை வீட்டில் பயன்படுத்துபவர்களுக்கு, அவர்கள் விஷேச பாதுகாப்பும் கண்கானிப்பும் வழங்குவார்கள். -அப்படியென்றால் 30% பணத்திற்காக மட்டுமே உடனே ஓடி வந்து சேவை செய்வார்களாம் அந்தப் “பாதுகாப்பு சேவை” பணியாளர்கள்.- பணம் இல்லாதவர்களின் வீட்டில் கொலை நடந்தாலும் தாமதித்து வந்து பிணங்களை அள்ளிச் செல்ல முனைவார்கள் போல.

3. உள்ளே நுழைந்துவிட்ட கொள்ளையர்கள், (அவர்கள் உள்ளே நுழைந்த தகவல் உடனேயே கண்கானிப்பு மையத்திற்குச் சென்றுவிட்டது) வெளியே வரும்போது அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையிட்ட உடைமைகள் மீட்கப்படும் என்று சொன்னார். – உடைமைகளாக இருந்தால் மீட்கலாம், போனது உயிராக இருந்தால்?

4. எனக்குத் தெரிந்த ஒரு விரிவுரையாளர் இப்படித்தான் வீட்டில் இருக்கும்போது திடீரென்று உள்ளே நுழைந்தவர்கள், உடனே தரையில் படுத்திருந்த அவரின் 3 வயது குழந்தையின் கழுத்தில் பாராங்கை வைத்தபோது, அவரால் தன்னிடமிருந்த பணங்களைக் கொடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லையாம்.

எப்படிக் கொள்ளையர்கள் சாமர்த்தியமாக இயங்குகிறார்கள்?

1. தொடர்ந்து உங்களின் நடவடிக்கைகளைக் கண்கானிக்கிறார்கள்.
- (நீங்கள் வெளியே செல்லும் நேரம், வீட்டில் எத்தனை பேர் உள்ளீர்கள், எத்தனை
மணிக்கு வீடு திரும்புகிறீர்கள்)
-சமயம் பார்த்து, எல்லாம் தகவல்களும் சேமிக்கப்பட்டு, வீட்டில் நுழைவதற்கான
சாத்தியங்களை உறுதிப்படுத்திவிட்டு, கொள்ளைக்குத் தயாராகுகிறார்கள்.

2. வீட்டிற்கு வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் குப்பை நெகிழியை
வீசுவதற்கு வெளியே வரும்போது, உங்களை வழிப்பறி செய்யவும் வாய்ப்புண்டு.
(முகத்தில் ஓங்கி குத்திவிட்டு சங்கிலியை அபக்கறித்துப் போன சம்பவங்கள் உண்டு)
3. வேலை முடிந்து வீடு திரும்பும்போது, காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைய
முனையும் தருணத்தில் கொள்ளையர்கள் சடாரென்று உங்களுடன் உள்ளே
நுழையக்கூடும்.

5. வீட்டு முன் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் உங்கள் காரின் பின்பக்கம்
ஒளிந்துகொண்டு நீங்கள் வீட்டின் முன் கதவைத் திறக்கும்வரைக் காத்திருந்து
உங்கள் கழுத்தில் பாராங் வைக்கப்படலாம்.

6. பொருட்கள் விற்பனைக்கு வருபவரின் தோற்றத்தில், உங்களுக்குத் தெரிந்த நபரைப் போல உரிமையுடன் “அக்கா, அக்கா” என்ற அழைப்புடன், கோவில் திருவிழா வசூலுக்காக வந்திருப்பது போன்ற அறிமுகத்துடன், இப்படிப் பல வேடங்களில் உங்கள் வீட்டின் முன் வந்து நிற்பவர்களுக்கு உடனே கதவைத் திறந்துவிடக்கூடாது.

7. வழக்கமாக வீட்டிற்கு நடந்து செல்பவராக நீங்கள் இருந்தால், சந்தேகம்படும்படி ஏதாவது ஒரு கார் உங்களைப் பின் தொடரலாம். இதில் கவனமாக இருக்க வேண்டும். (மோட்டார் சைக்கிளோட்டிகள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை, நடந்து செல்பவர்களின் கழுத்திலுள்ள சங்கிலியை அறுத்துவிட்டோ அல்லது அவரைத் தரதரவென்று இழுத்து சேதப்படுத்தி அவரைக் கொள்ளையடிக்கக்கூடிய நபர்கள் மோட்டாரிலும் உலவுகிறார்கள்.

8. இப்படி உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிர்பந்தமும் அபாயமும் உருவாகியுள்ளன. அதற்காக மனிதர்களிடமிருந்து விலகி வாழ வேண்டும் என்று முடிவெடுத்து விட வேண்டாம். நல்ல மனிதர்களும் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள். அடையாளங்காணல் என்பதில் நாம் தீவிரமாக இருக்க வேண்டும்.

குறிப்பு: கொடூரமான கொள்ளை சம்பவங்கள் நடந்த வீட்டில் அந்த வீட்டு மனிதர்களின் மனம் உளவியல் ரீதியில் வீழ்ச்சியடைந்து சோர்வுற்றிருக்கும். முக்கியமாக அந்த வீட்டில் அந்தக் கொடூரமான கொள்ளையர்களை எதிர்நோக்கிய குழந்தைகள்/சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு பெரியவர்கள் உறுதியாக இருப்பதும் அவசியம். அன்மையில் ஒரு சீனர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டின் சிறுமி ஒருத்தி அடிக்கடி இரவில் எழுந்து அலறுகிறாள், அழுது அடம் பிடிப்பதாகக் கேள்வியுற்றேன்.

நட்புடன்
கே.பாலமுருகன்