Wednesday, June 24, 2009

தமிழன் புத்தி எப்படி போது பாருங்க

இரண்டு மணிநேரத்திற்கு முன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பெரிய சாலையில் பயங்கர சத்தம் கேட்டது. இரண்டு கார்கள் மோதி கொண்டதற்கான சத்தமாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டே சத்தம் கேட்ட திசைக்கு ஓடினேன். ஓடினோம். பக்கத்து வீட்டுக்காரர்களும் என்னுடன் ஓடி வந்தார்கள். அதற்கு முன்பதாக அங்கு பெரிய கூட்டமே கூடியிருந்தது. என்ன ஆச்சர்யம்? எப்பொழுதும் அந்தச் சாலை இருண்டும் ஆள் நடமாட்டம் அற்றும் கிடக்கும். இப்பொழுது கொஞ்ச நேரத்தில் இப்படியொரு கூட்டம் எங்கிருந்து முளைத்திருக்கும் என்று திகைப்பாக இருந்தது.

இரண்டு கார்களும் மிக மோசமாக நசுங்கி போயிருந்தன. அதில் இரண்டு குழந்தைகள் வீரீட்டு அழும் குரல் மனதை என்னமோ செய்தது. காரில் சிக்கிக் கொண்டிருந்த அவர்களை வெளியே எடுப்பதற்காக மலாய்க்காரர்களும் சீனர்கள் சிலரும் கதவை உடைத்துக் கொண்டிருந்தார்கள். நானும் கூட்டத்துடன் இனைந்து கொண்டு கால்களால் கதவின் கீழ் பகுதிக்கு முட்டுக் கொடுத்துவிட்டு கதவைப் பலம் கொண்டு இழுத்தேன். உள்ளுக்குள்ளிருந்து உயிருக்காகப் போராடும் அந்தக் குழந்தையின் அழுகையை மிக அருகாமையில் கேட்கும்போது எனக்குள் பயங்கர தடுமாற்றம். கண்களில் கொஞ்சம் தண்ணீரும் வந்திருக்கும் போல. ஒரு விபத்தை இப்படி நேரில் சந்திப்பது இதுவே முதல் தடவை என்பதால் இருக்கலாம்.

அவர்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது இரண்டு தமிழ் குரலை நன்றாக கேட்க முடிந்தது. காருக்குப் பின்புறமாக நின்று கொண்டு இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“காடி நம்பரு என்னானு பாரு. . அந்தக் காடியோட நம்பர பாரு. அதான் துரோவா(மோசமா) அடிப்பட்டிருக்கு”

எல்லோரும் உள்ளுக்குள்ள உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் உயிர்களீன் மீது கவனமாக இரூக்கும்போது அந்த இரு குரல்கள் மட்டும் ஏன் காரின் எண்களின் மீது அக்கறை கொள்கிறது என்று கேட்கிறீர்களா? வேறெதற்கும் இல்லை, நாளை நம்பர் எடுக்கத்தான். விபத்தில் சிக்கிய காரின் எண்களை வைத்து சூது விளையாட மட்டுமே நம்மவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. என்ன ஒரு ஆபத்தான சுயநலம் இது.

அதுவே நம்முடைய பாசத்திற்குரிய உறவுகள் விபத்தில் சிக்கி சாலையில் துடித்துக் கொண்டிருக்கும் போது யாரும் அறியாத கணத்தில் அந்தக் காரின் எண்களை எழுத மனம் விடுமா? சூது பழக்கம் மனித நேயத்தைத் தின்று கொண்டிருக்கிறது. தமிழன் மட்டுமா இதைச் செய்கிறான்? என்ற கேள்வியின் மூல நியாயப்படுத்த முயலலாம். எனக்குத் தெரிந்து தமிழன் அதைச் செய்யும் போதுதான் நான் பார்த்திருக்கிறேன்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா