Sunday, May 17, 2009

ஆசிரியர் தினமும் தன்னை நிறுவிக் கொள்ளும் மாணவர்களும்



இன்று எனது பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம் நிகழ்ந்தது. ஆசிரியர் தினம் ஆசிரியர்களை விட மாணவர்களுக்கு அதிகபடியான கொண்டாட்டத்தைக் கொடுக்கக்கூடியதாக அமைந்துவிடுகிறது. ஆசிரியர்களை மகிழ்வுப்படுத்த வேண்டும் என்கிற உள/வெளி போராட்டத்தில் அன்று முழுவதும் ஈடுபடும் மாணவர்களைக் காண முடியும்.

காலையில் பள்ளிக்கு வந்ததும் எத்தனை ஆசிரியர்களுக்கு முதலில் நான் கை கொடுத்து வாழ்த்துச் சொல்லப் போகிறேன் என்கிற திட்டமிடுதல் தொடங்கி ஆசிரியர் கவனத்தைப் பெற்று அதைப் பிற மாணவர்களிடம் பெருமைப்படும் படியாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிய அன்றைய நாள் முழுக்க அவர்களுக்கான நாட்கள்தான்.

இன்று எனக்கு ஒரு மாணவன் அவன் ஏற்கனவே பயன்படுத்திய பெண்சில் ஒன்றை வெள்ளைத்தாளில் சுற்றி பரிசாகத் தந்திருந்தான். இதற்கு முன் என்னிடம் அதிகமாக பயப்படும் மாணவன் அவன். பலமுறை அவனை திட்டியும் இருக்கிறேன். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னனியிலிருந்து வந்திருப்பதால் எப்பொழுதும் மெலிந்தும் சோர்ந்தும்தான் காணப்படுவான். அவனைக் கவனித்து சீர்திருத்த எப்பொழுதும் தனி அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளேன். இருந்தாலும் 5 நாள் பள்ளி நாட்களில் 2 நாட்கள் அவன் பள்ளிக்கு வருவதே அபூர்வமாக இருந்ததால் என் பார்வையிலிருந்து நழுவியபடியே இருந்தான்.

அந்தப் பெண்சில் அவன் ஏற்கனவே பயன்படுத்தி, உடல் முழுவதும் கீறலையும் வெட்டுக் குத்துகளையும் வாங்கியிருந்தது. ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு ஏதாவது ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என்பதையே தனது குறிக்கோளாக வைத்துக் கொண்டு ஆடம்பரமான பரிசுகள் முதல் எளிமையான பரிசுகள் வரை அவர்கள் கையில் சுமந்து கொண்டு ஒவ்வொரு ஆசிரியராக சென்று அதைக் கொடுத்து அன்றைய தினத்தைக் கொண்டாடிக் கொள்கிறார்கள்.

அவனிடம் அந்தப் பெண்சிலை வாங்கிக் கொண்டு கை கொடுத்த போது, அதைக் கண்டு அவன் உற்சாகமடைந்தான். அருகில் இருக்கும் மாணவனைப் பார்த்து ஒரு சிரிப்பும் சிரித்துக் கொண்டான். இங்கிருந்துதான் அவன் அவனுக்கான அங்கீகாரத்தைத் தேடிக் கொள்கிறான். சிறிது நேர எனது பாராட்டலுக்கே அவன் இப்படியொரு மாற்றத்தை அடைகிறான் என்றால், வாழ்நாள் முழுவதும் அவனை அவனது செயலை தாராளமாக அங்கீகரிக்க மனிதர்கள் இருந்தால், அவன் வாழ்வு எங்காவது முழுமைப்பெறக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆசிரியர்களின் சேவையை கௌளரவப்படுத்தும் தினமாகக் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை ஆசிரியருக்கும் அப்பாற்பட்டு அவர்களை மகிழ்விக்க அவர்களின் கவனத்தைப் பெறும் சாகசத்தில் ஈடுபட காத்திருக்கும் மாணவர்களுக்கான தினமாகவே அதைக் கருதுகிறேன். அன்றைய தினத்தில் ஆசிரியர் சிரித்துக் கொண்டிருப்பார், அன்றைய தினத்தில் ஆசிரியருக்கு சுமைகள் இருக்காது, அன்றைய தினத்தில் ஆசிரியருக்கு ‘file works” கணக்காது. ஆகையால் தன்னையும் தனது ஆசிரியர் மீதான அன்பையும் நிருபித்துக் கொள்ள இதுவே சரியான கணமாக மாணவர்கள் பாவித்துக் கொள்கிறார்கள். ஆகையால் ஆசிரியர் தினத்தைக் கட்டமைப்பதே மாணவர்கள்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இருக்கறதே ஆசிரியருக்கு அந்த ஒரு நாள்தான், அதையும் உருவிட்டியா பாவி. . யாரோ திட்டுவது கேட்கிறது.
கே.பாலமுருகன்