Monday, April 27, 2009

சக உயிரின் மரணம் - 2003இல் ஒரு பதிவு

என் கைகளில்

பாவத்தின் அறிகுறியும்

ஜோனியின் மரணவாடையும்

நிலைத்த சூன்யமாய் . . . . .

கைகள் இரண்டையும்

உதறிப் பார்க்கிறேன்

ஜோனி நன்றியுணர்வுடன்

என் கைகளைப் பற்றிக் கொண்டு

நின்று கொண்டிருக்கிறது.

ஜோனியின்

வாழ்க்கையின் அரைகுறைகள்

என் முதுகிலிருந்து

பாவ அடையாளங்களாய்

விரிந்துகொண்டிருக்கின்றன.

இழந்த சக உயிருக்காக

6 வருடம் கழித்தும்

நினைவு கூர்கிறேன்.

நாய் வளர்ப்பது என்பது நமது பால்ய காலத்தின் மிகப்பெரிய கனவு எனலாம். நாம் வளர்த்த செல்ல பிராணிகளின் வழி நமது பால்யத்தை மீட்டுணரலாம். அதிலும் நாய்கள் காட்டும் நன்றியும் அன்பும் , மனிதர்களோடு ஏன் இந்த இனம் மட்டும் இவ்வளவு நெருக்கமான உறவை வெளிப்ப்படுத்திக் கொள்கிறது என்ற வினாவும் எழுகிறது.

சிறுவயது முதல் ஏதாவது ஒரு நாயின் மரணம் நம் வாழ்வின் நீங்க மறுக்கும் பதிவுகளாக பின் தொடர்ந்து வந்திருக்கும். நினைக்கும்போது அது வெறும் நாய்களின் பெயர்கள் அல்ல, அதையும் கடந்த நமது அன்பைப் பகிர்ந்து கொண்ட இன்னொரு உயிரின் அடையாளமாகவே நீள்கிறது.

அன்புடன்

கே.பாலமுருகன்

“நெளிந்தோடும் பால்யத்தின் மீதான வார்த்தைகள்”




தேட தேட
முடிவில்லா நதியைப் போல
சப்தங்களை இரைச்சல்களை
விழுங்கியபடி
நெளிந்தோடுகிறது
பால்யம்”




பால்யம் தொட்டு, பல கவிஞர்கள் தமது பதிவை கவிதைகளாக கதைகளாக, பத்திகளாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எழுத எழுத மீண்டும் மீண்டும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பது பால்யம் மட்டுமே எனக்கூட தோன்றுகிறது. இயக்குனர் சத்ய ஜித்ரே அவர்களின் “பாதேர் பஞ்சாலி” படம், மிக நீள் துயரத்தின் படிமங்களில் மூழ்கி படைப்பின் மிக துல்லிய தருணத்தில் உலகை எட்டிப் பார்க்கும் ஒரு பால்யத்தின் நெடுங்கதைதான்.




அந்தப் பால்ய நதியின் கரைகளில் இன்றும் நமது மூப்பின் பிம்பங்கள் வளர்ந்து விரைத்து, உடைந்து, சிதைந்து, மீண்டு, வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் பால்யத்தின் தரிசனங்களை எவ்வித சலனமுமின்றி நீர் குமிழின் சிறு பிளவுகளைப் போல கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன. அந்தத் தரிசனங்களுக்கு மத்தியில் ஒரு கானல் நீரைப் பார்ப்பது போன்ற மனோபவத்துடன் வாழ்வு தந்திருக்கும் எல்லாம் சம நெருக்கடிகளையும் போராட்டங்களையும் சமாளித்துக் கொண்டு பால்யத்தை ஒரு கனவு போல எதிர்கொண்டவர்களாய் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




“மிக சுமாரான
ஓர் உறக்கத்தில்
தொலைந்திருந்தபோது
சடாரென துள்ளிக்குதித்து
மிதக்கின்றன பால்யத்தின்
முகங்கள்”

பால்யத்தைக் கவிதைகளில் கையாளும் ஒரு சில எழுத்தாளர்கள், அதன் குறியீடாக பொம்மைகளைக் கொண்டு வருகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கட்டிலுக்கடியில் கிடக்கும் தலை அறுந்த பொம்மைகளைப் பால்யத்தின் நினைவுகளென சொல்கிறார். அந்த மாதிரி எல்லாரின் வீட்டிலும் தமது பால்யத்தை ஏதோ ஒரு பொருளைச் சேமித்து வைத்திருப்பதன் மூலம் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நான் எனது 6ஆவது வயதில் பயன்படுத்திய பெங்குயின் பொம்மை விளையாட்டு இயந்திரத்தை அப்படியே வைத்திருக்கிறேன். பெங்குயின் பொம்மைகள் அந்த இயந்திரத்தின் மின்சக்தியால் படிகளில் ஏறி சொந்தமாக சறுக்கி விளையாடும். ஸ்காப்ரோ 2-இல் இருக்கும் போது அப்பா வாங்கி வந்து கொடுத்தது.




இப்பொழுது அந்தப் பெங்குயின் பொம்மைகள் சறுக்கி விளையாடும் சக்தியை இழந்து பழுதுபோன பொருளாக கிடக்கின்றன. ஆனால் என்னவோ அந்தப் பொம்மைகளைப் பார்க்கும் போது மனம் தானாக பால்யம் என்கிற படிகளின் வழியாக இறங்கி வந்து என் 5 ஆவது வயதை எட்டிப் பார்க்கத் தூண்டுகிறது.




“பெங்குயின் பொம்மைகள்
போல
இருந்துவிட்டால்
சறுக்காமல் இருந்திருக்கும்
பால்யம்”

இப்படியாகக் கவிஞன் தனது கவிதை மொழியின் வாயிலாக இழந்த பால்யத்தின் கொண்டாட்ட பொழுதுகளை, தோழர்களின் கதறல்களை, தூக்கி வீசி விளையாடிய பொம்மைகளை என்று எல்லாவற்றையும் தமது நிகழ் உலகத்திற்குள் படிமங்களாகக் கொண்டு வந்து மீள் உருவாக்கம் செய்ய முற்படுகின்றான். அவனது பால்யத்தை தமது வார்த்தைகளால் தனக்குள் சேமித்துக் கொள்கிறான். அந்தவேளையில் அவன் முகம் சிறுத்து, கை கால்கள் சுருங்கி, தொலைத்த பால்ய பொம்மையைத் தேடி ஓடுகிறான். ஒவ்வொருவரும் தமது பால்யத்தை நினைவுகூறும் பொழுதெல்லாம் தமக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளை மிகவும் சுதந்திரமாக எல்லார் முன்னிலையும் ஒரு குழந்தையைப் போல பகிர்ந்து கொள்கிறார் என்றே தோன்றுகிறது.

“குளுகுளு நான்சுவர் அறையில்
காட்சிக்கு வைக்கப்பட்ட
பொம்மைப் போல
படுத்திருக்கும் என்னை
வாநீர் ஒழுக
வீட்டின் வாசல்படியில்
படுத்துறங்கிய
நாட்களுக்குள்
கொண்டு செல்வது
இந்தப் பால்யத்தின்
மீத நினைவுகளே”

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி