Saturday, March 21, 2009

யார் எழுதினால் என்ன? விவாதத்தை முன் வைத்து

இலக்கிய படைப்புகளும் படைப்பாளிகளும்(எழுத்தாளர்!?) பொது படையாக இருப்பதே நன்று. அதில் பேதம் பார்ப்பது முறையன்று. யார் எழுதினால் என்ன? சிறந்த முறையில் வெளியிடப்படும் கருத்துகளை தான் வாசகன் விருப்பம் கொள்வான். நவீன் அவர்களே. நம் நாட்டில் அதிகமாக தமிழ் வாசிப்பது பள்ளி மாணவர்களாக தான் இருக்க முடியும். இவர்களிடத்தில் கேட்டுப் பாருங்கள் பலரும் இன்னமும் மு.வவை தாண்டிச் சென்றிருக்கவில்லை என்றே அறிகிறேன். பரவலான முறையில் எழுத்தாசிரியர்களை அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. அவர் எந்நாட்டவராக இருப்பினும் சரி.

திரு.பாலா எதற்காக யோனியைக் குறிப்பிட்டு எழுத வேண்டும்? நீங்கள் கூறியுள்ளவை உகந்ததாக இருப்பினும். இது ஆணாதிக்கச் சிந்தனையையே காட்டுகிறது.

விக்னேஸ்வரன், மலேசியா

ஆயிரம நாட்டமைகள் வந்தாலும். . . இங்கு எல்லாம் எப்பொழுதும் போலவே நடக்கும்


'மரபுக்கவிஞர்கள், நவீன படைப்பாளிகளின் கவிதைகளுக்கு விபச்சாரியின் யோனிக்கு கொடுக்கும் மதிப்பைக்கூட தருவதில்லை.' இந்த ஒரு வரியை மௌனத்தில் சேர்த்ததற்காக, இன்று பல எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. எதிர்வினையாற்ற வந்தவர்கள், நல்ல விவாதத்தில் ஈடுபடாமல் புத்திமதி சொல்வதும், தனிமனித அவதூறில் ஈடுபட முனைவதையும் கடுமையாகச் சாடுகிறேன்.

ஒரு படைப்பாளனின் கருத்தை முன்வைத்து விவாதம் செய்யும்போது அவனின் தனிப்பட்ட அடையாளத்தின் மீதும் தனிபட்ட விஷயத்தின் மீதும் இழிவான சொற்களைப் பயன்படுத்தி அவதூறு செய்வதென்பது பிற்படுத்தப்பட்ட மனநிலையையே காட்டுகிறது. வானத்தைப் பார்த்துக் காரி உமிழ்ந்து கொள்வது போல, தமது சுயநலத்திற்காக இலக்கியத்தைக் கையில் எடுத்துக் கொள்வதற்கு சமம்.மேலும் ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லும்போது தமது ஆளுமையை வெளிப்படுத்துவதற்காக நாட்டாமையைப் போல தமது தீர்வே இறுதியானது போலவும் பாவனை செய்கிறார்கள்.சக எழுத்தாளனுக்கு மாற்றுக் கருத்து உள்ள விஷயத்தை எப்படி உணர்த்த வேண்டும் என்கிற அடிப்படை மனித சிந்தனைக்கூட இல்லாமல், தான் எந்தவித தவறும் குறைபாடுகளும் இல்லாத பரிபூரண மனிதன் போல புத்திமதி சொல்ல இறங்கிவிடுகிறார்கள். கூடவே கடுமையான வார்த்தைகளையும் பிரயோகித்து தனது சொல் விளையாட்டைக் காட்டிவிட்டு, இவர் இப்படியும் சொல்வார் அவர் இப்படியும் பேசுவார் என்று எல்லோருக்கும் சேர்த்து இவர்களே முடிவெடுத்துக் கொள்கிறார்கள்.இது எந்தவகை நியாயம்?

ஒரு படைப்பாளனுக்கு தமது மொழியைக் கொண்டு ஒரு கருத்தை முன் வைக்க எல்லாம் வகையான உரிமைகளும் உண்டு. அதே போல முன்வைக்கப்பட்ட அந்தக் கருத்திற்கு மாற்று கருத்துச் சொல்லவும் வாசகர்களுக்கும் பிற படைப்பாளனுக்கும் உரிமைகள் உண்டு. இங்கு யார் சொல்வதும் இறுதி தீர்வாக முடியாது. இது படைப்பு சுதந்திரம். இதில் கை வைக்க எந்தக் கொம்பனுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த படைப்பாளனும் அனுமதி வழங்கவில்லை.விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதும் ஏற்காததும் அந்தப் படைப்பாளனுக்கே சேரும். யாருடைய நாட்டாமைத்தனமும் இங்கு வேலைக்கு ஆகாது. அந்த வகையில் மௌனத்தில் நான் வைத்த கருத்துக்கு என் சார்ந்த புரிதல்களும் காரணங்களும் உண்டு. அது நுண் அரசியலோ முரண்பாட்டு அரசியலோ, அல்லது எந்த இசமோ, நான் என் புரிதலுக்குட்பட்ட காரணங்களை முன் வைத்துவிட்டேன். அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் சுதந்திரம். நானும் ஒரு நாட்டாமையாக கிளம்ப விருப்பப்படவில்லை.ஏற்கனவே பல நாட்டாமைகள் தாங்கள் கூறுவதுதான் சரி என்கிற போதையில் இருக்கிறார்கள். அது அவர்களுக்கே உரிய மனநிலை. அதற்கெல்லாம் சட்டை செய்து கொண்டு இருக்க முடியாது.

நவீனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் நான் முன்வைத்த அந்த வரியைத் தொட்டே இருந்தது. மீண்டும் என் நிலைபாடுகளிலிருந்து நான் விலகிக் கொள்ளப்போவதில்லை என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்."நான் அறிந்த வரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மரபுக்கவிஞர்கள் நவீன கவிதை எழுதுபவர்களை வசை பாடியது கிடையாது." மஹாத்மன் கூறியது. அவர் அறியாத இடங்களில் இன்றும் அது நடந்து கொண்டுத்தான் இருக்கிறது.உங்கள் கண்களுக்கு அது தென்படாததால் அது இல்லை என்று ஆகிவிடுமா? அல்லது நாளிதழில் இது பற்றி விவாதங்கள் வராததால் மஹாதமன் இறுதி தீர்ப்பாக தலைநகர் நாட்டாமையாக இதைத் தீர்மானித்துவிட்டார் போல.

அன்மையில்கூட ஒரு நிகழ்வில் நவீன் அவர்கள் மு.வாவை மோசமாக விமர்சித்துவிட்டார் என்பதற்காக, (எப்பொழுது செய்தார் என்று தெரியவில்லை) இன்றும் அதைப் பற்றி பேசி மிகவும் இழிவாக மதிப்பிட்டுக் கொண்டிருக்கிரார்கள். நானே கேட்டேன். மேலும் இரண்டு மரபுக்கவிஞர்கள் விபச்சாரியைப் பற்றி மிகவும் மோசமான தமது சொற்களால் தொனியால் விமர்சித்துக் கிண்டலடித்ததை நான் நேரில் கண்டு, அதன்பால் அவர்கள் மேற்கொண்டு பேசிய சில வார்த்தைகளையும் கேட்டேன்.அதையொட்டி நவீன படைப்பாளிகளையும் கிண்டல் அடித்தத்தையும் கேட்டேன். அத்தகையதோர் இழிவான கிண்டல்களை அவர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

அந்த வார்த்தையை இங்கு முன்வைக்க நான் விருப்பப்படவில்லை. தேவையென்றால் எனக்குத் தொடர்புக் கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள்.இதையெல்லாம் கேட்டதால், அனுபவித்ததால்தான் அப்படியொரு கருத்தை முன்வைக்க நேர்ந்தது. இது சால்ஜாப்பு அல்ல. என் அனுபவம். அனுபவத்தின் அப்பாலிலிருந்து பார்க்கும் போது அல்லது அந்த அனுபவம் நேராதவர்களின் பார்வையும் புரிதலும் வேறு மாதிரிதான் இருக்கும்.அதற்காக என் அனுபவமும் அதன் பால் உருவான சில மதிப்பீடுகளும் தவறானவை என்று தீர்மானிக்க யாருக்கும் நான் உரிமையைக் கொடுக்கவில்லை. வேண்டுமென்றால் விமர்சியுங்கள், உங்கள் பார்வையைப் புரிதலைப் பதிவு செய்யுங்கள். அது உங்கள் சுதந்திரம். ஈழத்து வலியை ஈழத்து மண்ணில் நடக்கும் கொடுமையை ஒரு ஈழப் போராளி சொல்வதற்கும், பார்வையாளன் சொல்வதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அவனது புரிதலுக்குள் எல்லோரும் வரவேண்டும் என்கிற தீர்மானத்தில் அவன் படைக்கவில்லை, அவன் வலியை அனுபவத்தை அவன் பதிவு செய்கிறான். அப்படித்தான்.

இந்தச் சமூகத்திலே பிறந்து இந்தச் சமூகத்திலே வளர்ந்து இந்தச் சமூகம் கற்றுக் கொடுத்த ஒழுக்கங்களைப் புரிந்து கொண்ட எனக்கு, இந்தச் சமூகத்தின் பின்னனியை வைத்துக் கொண்டு உலக பார்வையில் விரிந்து கிடக்கும் பற்பல கலாச்சாரங்களையும் வாழ்வுமுறையையும் அறிந்து கொள்வதும், அதன் பால் தன் சமூகத்தை விமர்சிப்பதும் மதிப்பீடுவதும் எனது உரிமையே. அதே போலத்தான் இந்தத் தமிழ் சமூகத்தில் விபச்சாரி என்பவள் ஒழுக்கம் கெட்டவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். அதுவும் இப்பொழுதெல்லாம் நவீன கவிஞர்கள் ஆபாசமாகப் பேசுகிறார்கள், துகிலுத்துக் காட்டுகிறார்கள். தமது மொழியை இலக்கியத்தை விபச்சாரம் செய்கிரார்கள் என்றெல்லாம் ஒரு நவீன படைப்பாளியையும் விபச்சாரியையும் இணைத்து இந்தச் சமூகம் கட்டமைத்த விபச்சாரியின் ஒழுக்க விளிம்புகளை நவீன எழுத்தாளன் படைப்புடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.இது மலேசியாவில்தான் நடந்து கொண்டுருக்கிறது. உங்கள் காதுகளில் எட்டவில்லை என்பதற்காக எல்லாம் பொய்யாகிடுமா?

ஆகையால் இந்தத் தமிழ் சமூகத்தின் பின்னனியிலிருந்து, மரபு கவிஞர்கள் ஒரு விபச்சாரியின் யோனிக்குக் கொடுக்கம் மதிப்பைக்கூட. . அவர்கள் பொருத்தவரை விபச்சாரியின் யோனி இழிவானது. . காரணம் இந்தச் சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப்பிலிருந்து விபச்சாரி என்பவள் அங்கிக்கரிக்கப்படாமல் போய்விட்டாள். இங்கே நவீன எழுத்தாளனின் படைப்பும் அதைவிட ஏறக்குறைய அதே அளவில்தான் வைத்து மதிப்பீடபடுகின்றன. நான் எனது வரியில் சொல்ல வந்த ஒப்பீடும் இதேதான். இந்த வரியைச் சொல்வதற்காக என் சமூகத்தின் பின்னனியைக் கொண்டிருப்பதோ அல்லது இக்ளு நாட்டின் கலாச்சார புரிதலைக் கொண்டிருப்பதும் என் சுதந்திரம்.நடப்பதைச் சொல்லியாக வேண்டும். அதற்கு நமக்கு சில நுண் அரசியல் முரண் அரசியல் என்ன வேண்டுமானாலும் கையாள்வது நமது உரிமை. நுண் அரசியல் இல்லை சொல்லாடல்கள் இல்லையென்று மஹாத்மன் மீண்டும் இலக்கிய ஜாம்பவனாக மூக்கை நுழைத்துப் பார்க்கிறார். பாவம் அவர், கட்டற்ற மொழியின்பால், சிக்கலான வரிகளின்பால் சொன்னால்தான் இந்த மாதிரியான சொல்லாடல்கள் வரும் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். எளிமையான சொற்களிலும் ஒப்பீடுகளிலும்கூட அந்த மாதிரியான சொல்வகைகளை புகுத்திப் பார்க்கலாம் என்று தெரியாமல் இருக்கிறார் போல. அது அவருடைய சுதந்திரம்.

மேலும் "நான் குறிபிட்ட" ஒழுக்கம் பற்றி மஹாத்மன் தவறான புரிதலுக்குள் உட்பட்டுவிட்டார் போல. அதாவது நான் குறிபிட்ட ஒழுக்கம். தன் சார்ந்த சமூகம் தமது மக்கள் கலாச்சார சிதைவில் சிக்கி சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக எல்லோரையும் பொதுவான ஒரு நேர்கோட்டில் இணைப்பதற்காகச் செய்த ஒருங்கிணைப்பே ஒழுக்கம்- ஒஷோ சொல்லியிருக்கிறார்.இந்த ஒழுக்க கட்டமைப்பை மீறுவதும் விமர்சிப்பதும் மறு கட்டமைப்பு செய்வதும் அந்தச் சமூகத்தைச் சார்ந்தவரின் தனிமனித சுதந்திரம். ஒழுக்கம் இருப்பதால் ஒரு சமூகம் பின்னடைந்துவிடும் என்று நான் சொல்லவரவில்லை. அந்த ஒழுக்கத்தின் பால் உருவான மதிப்பீடுகள்தான் விபச்சாரிகளைக் கீழாக எண்ணவும் சில வரையறைகளைக் கடக்க முடியாமல் சிக்கிக் கிடப்பதையும் உணர்த்தினேன். அதிலிருந்து மீண்டு வரக்கூடாது கடைசிவரை அந்தச் சமூகத்தின் பால் உருவான ஒழுக்கக் கட்டமைப்பிலே நாம் வளர வேண்டும் என்று போதிப்பதுதான் முழு ஆக்கிரமிப்பாலான கள்ளப் போதனை.

படைப்பிலக்கியத்தில் புதிய உத்திகள் கையாளப்படுவது வரவேற்கதக்கது.பலரும் தமது படைப்பிலக்கியத்தில் பல புதிய நுண் உத்திகளைக் கையாண்டுள்ளார்கள். சில படைப்புகள் வெற்றியடைந்தும் உள்ளன. அதே போலத்தான் விமர்சனங்களிலும் சில சொல்வகை உத்திகளையும் சொல் அரசியலையும் எதிர் அரசியலையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதைப் பயன்படுத்துவது அவரவர் சுதந்திரம். தமது படைப்பை எப்படி எந்த மொழியில் செதுக்க வேண்டும் என்பது அந்தந்த படைப்பாளர்களின் உரிமை, சுதந்திரம். அவர் படைப்பது சொல் விளையாட்டு, அவர் படைப்பது படைப்பிலக்கியம் இல்லை என்றெல்லாம் கூவிக் கொண்டிருந்தால் வாய்தான் வலிக்கும். இருந்தாலும் அப்படிக் கூவிக் கொள்வதும் அவரவர் சுதந்திரம். தனது வாசகனுக்கு எவ்வித விளையாட்டை அளிக்க வேண்டும், எவ்வித அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் எவ்வித புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அந்தப் படைப்பாளிக்கும் படைப்புக்கும் உள்ள சுயம். அதை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு. அது அப்படி அமையக்கூடாது அது தவறு என்று தீர்மானிப்பதால் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடாது.

விவாதங்களை முன் வைத்து நகர்ந்தால் சிறப்பு ஆனால் இங்கு தனிமனிதனை அவதூறு செய்து பேசத் துணிந்துவிட்டார்கள். புத்திமதி சொல்வதும் ஏற்படுகிறது. ஆகையால் நான் சொன்ன எல்லாம் கருத்துகளுக்கும் பல்வகைபட்ட புரிதல் ஏற்படலாம். அதுவும் ஆரோக்கியமே. இங்கு எல்லாமும் சுதந்திரம்.

ஆதியில் அநங்கத்திலிருந்து ஒன்று விலகிச் சென்றது இப்பொழுது பாதியில் ஒன்று விலகிக் கொண்டது, மீதியில் அநங்கம் மேலும் செழிப்புடன் வளரும். வளந்து கொண்டே போகும் தமக்கே உரிய நிலைபாடுகளுடன் ஆயிரம் புறம் பேசிகள் குறுக்கிட்டாலும்.

அன்புடன்
கே.பாலமுருகன்