Friday, July 31, 2009

தமிழுக்குள் ஏற்பட்டிருக்கும் நவீன மாற்றங்களும் பேச்சு மொழியும்

//பாமரனும் புரிந்து கொள்ளும் ஒரு நவீன மொழியில் பாலியல் பேசினால் அது பாவமா?.//

நவீன மொழி என்று சொல்லும்போது இது ஒரு சாராரோ அல்லது ஒரு கலாச்சாரத்தைப் பின்பற்றியவர்கள் பயன்படுத்திய மொழியோ என்றெல்லாம் கிடையாது. பொதுபுத்தி சார்ந்து சிந்திப்பவர்களுக்கு எளிமையாக இதன் அர்த்தம் புரிந்துவிடும்.


முதல் உலக நாடுகளின் வளர்ச்சியும் மேம்பாடுகளும் இரண்டாம் மூன்றாம் நாடுகளில் இறக்குமதி பொருளென வந்திறங்கி அதை ஒரு நுகர்வு பொருளாக சந்தைக்குள் விற்று, அதை ஒரு வசதியாக கருதி பயன்படுத்துவது நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் நவீனம். நமது மரபு வாழ்வில் உள்புகும் நவீனமென்று இதைக் குறிப்பிடலாம். இன்று எல்லாம் தமிழர்களின் வீட்டிலும் அதிநவீன வசதி கொண்ட ஏதாவது ஒர் இறக்குமதி பொருள் இயங்கிக் கொண்டிருக்கும்.

எனக்குத் தெரிந்து இன்னமும் தோட்டப்புற சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பர்வர்களின் வீட்டில்கூட “ஆஸ்ட்ரோ – அரைக்கும் இயந்திரம்” என்று வந்துவிட்டன.

நவீன கருவிகள் என்று சொன்னால் அது என்ன துணி துவைக்கும் பொருளை மட்டுமா குறிப்பது? மொத்த அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் அந்த “நவீன கருவிகள்” என்பதில் அடங்கிவிடும்.

“நவீன மொழி” என்பது அது தமிழாகவும் எடுத்துக் கொள்ளலாம், அல்லது மலாய்மொழியாகவும் எடுத்துக் கொள்ளலாம், காரணம் காலத்திற்குக் காலம் எல்லாம் மொழிகளிலும் நவீனம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பது நிதர்சனம். மொழியில் மட்டுமில்லாது எல்லாம்வகையான துறைகளிலும் வாழ்விலும் இந்த நவீன மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதைத் தடுப்பவர்களும் ஏற்காதவர்களும் நிராகரிப்பவர்களும் இருக்கவே செய்தாலும் அந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

“நவீன மொழி” என்று சொல்லும்போது அது மாற்றங்கள் அடைகிற மாற்றங்கள் அடைந்து தனக்கென ஒரு புதிய வடிவத்தை உருவாக்கிக் கொண்டு சமக்காலத்து பயன்பாட்டில் உள்ள மொழி என்றும் பொருள் கொள்ளலாம். நவீன கருவி என்றதும் அது யார் பயன்படுத்திய கருவி, அவர்கள் எங்கு வாழ்ந்தார்கள் என்றெல்லாம் கேட்பது அறியாமை.

தமிழில் – தமிழிலக்கியத்தில் ஏற்படாத மாற்றங்களா? பாரதி உரைநடையை அறிமுகப்படுத்தும்போது பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இப்பொழுது அது வழக்கத்தில் உள்ளன. இதுவும் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கே இப்பொழுது இலக்கணங்கள் வரையறுக்கப்பட்டுவிட்டன. மேலும் சிறுகதை- நாவல் போன்ற வடிவங்கள் தமிழுக்குள் புதிய வடிவத்தில் நுழைந்தவை. அதையும் காலம் ஏற்றுக் கொண்டு இப்பொழுது உலக அளவில் எழுதுகிறார்கள், பயன்படுத்துகிறார்கள்.

புதுக்கவிதை உருவாகியபோதும் பல எதிர்ப்புகள் கிளம்பின. மரபு கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் சண்டைகள் நடந்தன. ஆனால் இன்றோ புதுக்கவிதைகள் தொகுப்புகள் அச்சிட்டு வெளியீடு செய்யும் அளவிற்கும் மேலும் நாளிதழ்களில் புதுக்கவிதை பிரசுரம் பெறும் அளவிற்கும் அங்கீகாரங்கள் பெற்றுவிட்டன. ஆகையால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மொழியில் (எந்த மொழியாக இருந்தாலும்) மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுத்தான் இருக்கின்றன.

குடும்ப உரையாடல்களைக் கூர்ந்து அவதானித்தால், எல்லோரும் அல்லது பெரும்பான்மையானவர்கள் தமிழைச் சிதைத்துத்தான் பேசுகிறார்கள். பேச்சு மொழி அல்லது வட்டார மொழியென புரிந்துகொள்ளப்படும் அவை, ஒவ்வொரு குடும்பங்களிலும் வட்டாரங்களுக்கும் மாறுபட்டே பேசப்படுகின்றன. தோட்டப்ப்ய்ற சமூகம் ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழியைச் சிதைத்து வட்டார மொழியென சூழல் அரசியலுக்கேற்ப புரிந்துகொண்டு அதன் பிரக்ஞையுடன் பேசினார்கள். மேலும் அதை வெறுமனே சிதைந்துவிட்ட மொழி என்றும் குறிப்பிட முடியுமா என்பதும் கேள்வியே. ஆனால் இன்று நகரத்திற்குப் புலர்பெயர்ந்துவிட்ட தமிழர்களின் பேச்சு மொழி வேறு மாதிரியாக மாற்றம்கொண்டு விட்டது.

மாணவர்களுக்குப் போதிக்கப்படும் படைப்பிலக்கியத்தின் ஒரு வடிவமான சிறுகதைகளில் உரையாடல்களின்போது பேச்சு மொழிகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வின் பிரிவு சி-யில் படைப்பிலக்கிய பகுதியில் வரும் சிறுகதைகளில் பிறமொழி பயன்பாடுகளும் பேச்சு மொழியும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் பேச்சு மொழியை வெறும் சிதைந்த மொழி என்றால் ஏன் சோதனைகளிலும் பாடங்களிலும் அதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பாவிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றன? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இது தமிழில் நிகழ்ந்த மாற்றமென்றால் வட்டார வழக்கின் பயன்பாட்டையும் அங்கீகரிக்க முயல்வதற்கான ஒரு முயற்சிகள்தான் இது.

மேலும் இதையெல்லாம் அல்லது இப்படிச் சிதைந்துவிட்ட மொழியை “நவீன மொழி” என்று அடையாளப்படுத்த முடியாது. சிதைதல் என்பதிலிருந்து நவீனம் உருவாகவில்லை, மாற்றம் என்பதிலிருந்துதான் அதன் நுண்பயன்பாடுகள் பெறப்படுகின்றன.

//தமிழில் இரண்டே மொழித்தான் உண்டு, பேச்சு மொழி செந்தமிழ்// என்பது தவறான கூற்று. அப்படியென்றால் சமக்காலத்து பேச்சு மொழி எல்லாம் தமிழைச் சிதைத்துதான் பேசுகிறார்கள். மேலேயுள்ள கூற்றுபடி பார்த்தால், தமிழில் இரண்டு வகைத்தான் உண்டு ஒன்று செந்தமிழ் மற்றொன்று சிதைந்த மொழி (பேச்சு மொழி). இப்படிச் சொல்வதால் பேச்சு மொழியையும் (சிதைந்த மொழியையும்) அங்கீகரித்து தமிழில் ஒருவகையென சேர்ப்பது போலல்லவா உள்ளது சிலரின் வாதம்/கூற்று.

தற்பொழுது எழுதுபவர்கள், தூயத்தமிழில் அல்லது மனிதர்கள் உரையாடும் காட்சிகளில் வழக்குத் தமிழில் அல்லது புதிய சொற்பிரயோகங்களுடனும் அதன் கட்டமைப்புகளுடனும் எழுதப்படும் தமிழில் என்று வகைப்படும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.. இது தமிழில் ஏற்பட்ட மாற்றம். கண்களை இறுக மூடிக் கொண்டு இது இல்லை என்றால் தர்க்கமாகாது. இது தமிழில் ஏற்பட்ட மாற்றம் என்கிற நிதர்சனத்திலிருந்து விவாதத்தைத் தொடங்கினால் நலம்.

மேலும் துறை சார்ந்த சொல்லாடல்கள் தமிழுக்குள் நுழைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சுஜாதா கணினி சார்ந்த சொல்லாடல்களைக் கதைகளின் மூலமும் கட்டுரைகளின் மூலமும் தமிழுக்குள் கொண்டு வந்தார். அறிவியல் விவாதங்களை முன்னெடுத்துச் செல்ல பல தமிழ் சொற்கள் கண்டறியப்பட்டு பயன்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. உயிரியல் கூறுகளை விளக்கும் பல தமிழ் சொற்கள் தமிழ் எழுத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவெல்லாமும் தமிழில் நிகழ்ந்த நவீன மாற்றங்கள். இன்று இணையம் அல்லது கணினி என்று சொல்லும் நாம் சங்க இலக்கியங்களில் இதுபோன்ற வார்த்தைகள் உள்ளனவா என்று பார்த்துச் சொல்லவும். ஒரு மொழி எப்படியெல்லாம் மாற்றமடைகிறது என்பதற்குப் பல விளக்கங்கள் சான்றுகளுடன் சமக்காலத்து வளர்ச்சிகளை முன்னிறுத்தி சுட்டிக் காட்டலாம். சுட்டிக்காட்டியும் எழுதப்பட்டுள்ளன.

குறிப்பு: பாலியல் சொல்லாடல்களை அல்லது பாலியல் உறுப்புகளை எழுதிவிட்டால் காமம் கிளர்ந்துவிடும் பாலியல் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும் என்று சொல்பவர்களுக்குத்தான் மனோத்துவ அணுகுமுறைகளும் உளவியல் பயிற்சிகளும் மிக அவசியமாகத் தேவைபடுகின்றன.

இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களும் அவரின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஜெயந்தி சங்கர்: இவ்வாறான கேள்விகளுக்கு விடையென்று சொல்வதென்றால் பக்கம் பக்கமாக ஆய்ந்து எழுதலாம்/சொல்லாம். இருப்பினும், இப்போதைக்கு சுருக்கமாகவும் எளிமையாகவும் விடைகாண முயல்வோம்.


நவீனம் என்றால் புதுமை என்று சொல்லவே தேவையில்லை. குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்த எவரும் நவீன தமிழைப் பேசவில்லை; எழுதவில்லை; உருவாக்கவுமில்லை. தமிழ் மொழிக்கு என்றில்லாமல் எந்தவொரு மொழிக்கும் நிகழ்வது தான் இந்த நவீனமடைதல். சமீபமாக எழுதப்படும் தமிழ் மற்றும் வேற்று மொழிப் படைப்புகளைப் பரிச்சயம் கொள்ளாதிருப்போர், தாம் அவ்வாறு பரிச்சயமற்று இருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல் இருக்கும் போது இவ்வாறெல்லாம் கேட்பது இயல்பு தான். பிரக்ஞையோடு இருந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறான கேள்விகள் கேட்பவர்களை நாம் கணக்கிலெடுக்கத் தேவையில்லை.


பேச்சு மொழியும் எழுத்து மொழியும் முற்காலம் தொட்டு இக்காலம் வரை ஒரே மாதிரியாகவா இருந்து வருகிறது? கண்டிப்பாக இல்லை. பேச்சு மொழி மற்றும் எழுத்து மொழி என்றறியப்படும் செந்தமிழ் ஆகிய இரண்டையும் சொல்லும் போது நாம் ஒன்றைக் கவனித்தல் வேண்டும். லிபி என்றறியப்படும் எழுத்து முறையிலேயே பல மாற்றங்கள் காலந்தோறும் நிகழ்ந்து வந்துள்ளது ஒருபுறமிருக்க அந்தச் சங்ககாலத் தமிழைப் பதம் பிரித்துப் புரிந்து கொள்பவர்கள் கூட அம்மொழியில் தானா எழுதுகிறார்கள்? ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழர்கள் பேசிய மொழியை நாம் இன்று பேசுகிறோமா? அதே போல சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நாம் எழுதிய மொழியிலா இன்றும் நாம் எழுதுகிறோம்? எதில் எதுவுமே இல்லையே. சங்க காலத் தமிழைப் புரிந்து கொள்ள நம்மில் பெரும்பாலோர் பொழிப்புரையை இன்றைய தமிழில் தானே படிக்கிறோம்.


கலாசாரம் மாற்றமடைந்தோறும் தமிழென்று இல்லை, வேறு எந்தவொரு மொழியுமே மாறுகிறது. சமூகம், வாழ்வு, கலாசாரம் எல்லாம் தொடர்ச்சியாக ஒரு நிறுத்தலற்ற மாற்றங்கள்/வளர்ச்சிகள் கண்டு நவீனமடையும் போது புழக்கத்திலிருக்கும் எந்தவொரு மொழியும் மாற்றங்களடைந்து நவீனம் கொள்வது இயல்பு தான். தவிர்க்கவியலாததும் கூட. சிலர் அஞ்சுவது போல மொழிக்கு இதொன்றும் கெடுதலுமில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். முற்காலத்தில் 'நாற்றம்' என்றால் நறுமணம். இன்றோ நாற்றம் என்றால் மனதிற்கிசைவற்ற ஒரு மணம். எப்படி மாறியது இது? இன்றைக்கு நறுமணத்தைக் குறிக்க நாற்றம் என்ற சொல்லையா பாவிக்கிறார்கள்? கணிப்பொறியையும் கணினி என்ற சொல்லை எற்றுக் கொள்வில்லையா நாம்? அதுபோலத் தான் காலமாற்றத்துக்கேற்ப புதிய சொற்களும் பிரயோகங்களும் மாறிக் கொண்டே வருகின்றன.


எடுத்தாளப்படும் கருப்பொருளைப் பொருத்தும் பல வேளைகளில் மொழியானது தன்னியல்பில் நவீனம் கொள்ளும். தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு புனைவுகளின் மொழி மிகத் தெளிவாகவும் வேகமாகவும் மாற்றமடைந்தது என்றே சொல்ல வேண்டும். தமிழின் முதல் நாவல் என்றறியப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்திற்கும் க.நா.சுவின் 'பொய்த்தேவு'க்கும் மொழியிலுள்ள வேறுபாட்டையும் பிறகு வந்த சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், லா.ச.ரா போன்றவர்களைத் தொடர்ந்து எளிய எதார்த்த நடையில் பேசிய ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்றோரைச் சொல்லலாம். அடுத்த கட்ட நவீன மொழியைக் கையாண்ட சுந்தரராமசாமி, கோணங்கி மற்றும் பலரைச் சொல்ல முடியும். மொழியில் இவ்வாறு நிகழ்ந்த தொடர் மாற்றங்களை பரவலாக வாசித்தவர்களால் அனுமானிக்க முடியும். கவிதை என்றெடுத்துக் கொண்டாலும் வானம்பாடி காலந்தொட்டும் இன்றைய நவீன கவிதை காலகட்டம் வரை படிப்படியான மாற்றங்களை உணரலாம்.



ஆகவே, புதுமைப்பித்தன் காலத்துக்கு நவீன மொழி இன்றைக்கு பழைய மொழி. இன்றைய நவீன மொழி நாளைக்குப் பழையதாகத் தெரியும். இதான் நிதர்சனம். மு.வவை மட்டுமே வாசித்தவர்கள் புதுமைப்பித்தனை நவீனம் என்றே தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆகவே, அடுத்த அடுத்த கட்ட எழுத்துக்களைப் பரிச்சயப்படுத்திக் கொண்டு தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு மட்டுமே மொழி கொள்ளும் நவீனம் குறித்து புரிந்து கொள்ள முடியும். சொல்லும் விஷயங்களிலும் சொல்லும் முறையிலும் தற்காலத்துக்கேற்ப எழுதுபவர்களில் சிலருக்கு தாம் நவீனமாக எழுதுவதே கூட அறியாமலிருக்கிறது. அவர்கள் அறியவில்லை என்பதால் அவர்கள் படைப்புகள் நவீனமில்லை என்றாகிவிடாது. சமீபத்திய போக்குகளை நன்றாகவே அவதானித்து வருவோரில் எல்லோருமே நவீனமாக எழுதுவார்களா என்றால் இல்லை.


பொதுவாகவே படைப்பாளி எல்லோருக்கும் புரியும் மொழியில் எழுதினால் நல்லதென்று நினைக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். பாத்திரங்களை இலட்சியவாதம் பேச வைத்தல், கதாப்பாத்திரங்களை விதந்தோதுதல், உணர்ச்சிகள் மற்றும் வர்ணனைகளை மிகைப்படுத்துதல், திரும்பத் திரும்ப கேட்டும் படித்தும் பழக்கப்பட்ட உவமைகள், சொல்லாடல்கள் போன்றவற்றையும் இவ்வகையான சராசரி வாசகன் எளிதில் ஏற்கிறான். கதாநாயகன் எதிர்மறையாகப் பேசினாலோ நடந்தாலோ அல்லது கதாசிரியர் கதை சொல்லலில் வெளிப்படையாக இருந்தாலோ ஏற்கும் பக்குவம் எல்லா வாசகனுக்கும் இருந்து விடுவதில்லை. அவரவர் வளர்ந்த சூழல் பார்க்கும் பார்வை போன்றவையும் ஒருவரது வாசகப் பார்வையைத் தீர்மானிக்கும் தான். எனினும், பலருக்கு தொடர்ந்த வாசிப்பின் வழி அந்தப் பக்குவம் வரக் கூடும். அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை வாசிக்கும் இவ்வாசகர்கள் மனம் குழம்புகிறது. இவ்வளவு வெளிப்படை அவசியந்தானா என்று? அவ்வாறானவற்றில் மொழிக்கும் சொற்களுக்கும் அதைத் தாண்டிய வேலையுமிருக்காது. பாலியல் மற்றும் பாலியல் சொற்களூடாக நல்லதொரு படைப்பாளி சொல்ல வருவது என்னென்ன என்று யோசிக்கும் முன்னரே பெரும்பான்மையான வாசகர்கள் அதிர்ச்சியோ கிளர்ச்சியோ அடைந்து விடுகிறார்கள். அதான் இங்கு பிரச்சனையே. பிரதியை வாசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. வகைப்படுத்தவும் தான். –ஜெயந்தி சங்கர்


ஆக்கம்
கே.பாலமுருகன்

Monday, July 27, 2009

யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை - அழகியலும் தீவிரமும் (1958 - 2009)



"யஸ்மின் அமாட் இறக்கவில்லை.
எங்கோ அவரின் நகைச்சுவை உடல்மொழியுடனும் தீராத தனது மலேசிய சமூகத்தின்
மீதான காதலுடனும் வாழ்ந்துகொண்டிருப்பார். "
-கே.பாலமுருகன்

மலேசிய திரைப்பட கலையைக் கலாச்சார தளத்திலும் மதமற்ற மனித பண்பாட்டுத் தளத்திலும் வைத்து நுட்பமான வெளிப்பாடுகளாக ஆக்கப்படுத்தியுள்ளார் யஸ்மின் அமாட் என்கிற துணிகர மலேசிய சினிமாவின் மிகச் சிறந்த அடையாளம்.2003-இல் ராபுன் என்கிற திரைப்படத்துடன் மலேசிய சினிமா வெளியில் தீவிர பார்வையுடன் வந்தவர் யஸ்மின் அமாட். பிறகு சேபேட் என்கிற படத்தை 2004-இல் எழுதி இயக்கினார்.

கடந்த மாதம்(ஜூன்)-இல் இந்தியாவிலிருந்து வரும் தீவிர இலக்கிய இதழான தீராநதியில் யஸ்மின் அமாட் அவர்களைப் பற்றியும் அவரின் அன்மைய திரைப்படமான டேலண்ட் டைம், முஷ்கின் படங்களின் விமர்சனங்களையும் எழுதியிருந்தேன். 2 வருடங்களுக்கு முன்பிருந்தே அவரின் திரைப்படங்களைப் பார்த்து வந்தும் இந்த வருடன் ஜூன் மாதம்தான் அவரைப் பற்றி தமிழில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அவர் இறந்த செய்தியைக் கேட்டது மனம் பதறிப் போனது. மீண்டும் அவரைப் பற்றிய அந்தக் கட்டுரையைக் கொஞ்சம் விரிவுப்படுத்தியிருக்கிறேன்.


அவரது திரைப்படங்கள் மலேசிய சமூகத்தின் மத்தியில் அவரின் இரண்டாவது படத்திலேயே பாதிப்பை உண்டாக்கியிருந்தது. தனது தொலைக்காட்சி நிகழ்வுகளின் மூலம் நகைச்சுவையாற்றலும், அன்பும், முற்போக்குச் சிந்தனையையும் கொண்ட மனிதராக அறியப்பட்டவர் யஸ்மின். ஜொகூரிலுள்ள முவார் கம்போங் திரேவில் 1 ஜூலை1958இல் பிறந்த யஸ்மின் அமாட், உளவியல் துறையிலும் அரசியல் துறையிலும் தனது மேற்படிப்பைத் தொடர்ந்து ஒரு கலை சார்ந்த பட்டதாரியாக இங்கிலாந்திலிருந்து மீண்டும் மலேசியாவிற்குத் திரும்பினார்.

யஸ்மின் அமாட் அவர்களின் திரைப்படங்கள் அனைத்தும் பலவகையான உலக விருதுகளையும் உலக சினிமா நிறுவனங்களின் கவனத்தையும் பெற்றுள்ளன. பெர்லீன் திரைப்பட விழாவிலும் சான் பிரான்ஸிஸ்க்கோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட ஒரே மலேசிய சினிமாவென்றால் அது யஸ்மின் அமாட் அவர்களின் சினிமாதான். அவரின் சினிமா வாழ்வின் நிதர்சனங்களுடன் தர்க்கங்களுடனும் மிக நெருக்கமானது என்றே சொல்லலாம்.

ஒரு சமூகத்தில் எழும் பெரும்பான்மை/சிறுபாண்மை இனத்தின் மதப் பண்பாட்டு இறுக்கங்கள் என்பது மதத்தின்பால் மதப் போதகர்களால் சமய பாரம்பரியத்தின் வரையறைகளையும் வேத பரிந்துரைகளையும் முன்னிறுத்தி உருவான ஒரு சார்பான நிருவுதல் என்று கருதலாம். ஈரான் போன்ற நாடுகளில் மத கோட்பாட்டு இறுக்கங்களின் காரணமாக பெண் என்பவள் நுகர்வின் பொருளாகவும் வீடு என்கிற எல்லையே அவளின் சுதந்திரத்தை வரையறுக்கக்கூடிய குறியீடாகவும் பாவிக்கப்பட்டுருக்கின்றன.

“ஓசாமா” என்ற ஈரான் படம் முழுக்க போருக்கு அப்பால் ஆண் சமூகத்தால் வன்கொடுமைக்கு உள்ளான ஈரான் பெண்களின் ஒடுங்கிய வாழ்வே முன்னிறுத்துப்படுகின்றன. கதையின் முக்கிய பாத்திரத்தில் வரும் பெண்ணைச் சுற்றி அலையும் திரை, இறுதியாக அவள் 8 மனைவிகளுக்குக் கணவனான ஒரு வயோதிக வணிகனுக்கு 9ஆவது மனைவியாக விற்றுவிடப்படுவதைக் காட்சிப்படுத்தி திவீரமடைகிறது.. அவளை ஒரு அறையில்(ஏற்கனவே மனைவிகளாலும் குழந்தைகளாலும் நிரம்பிய அறை) வைத்து பூட்டிவிட்டு தனது இச்சையைத் தீர்த்துக் கொண்டு சுடு நீரில் தன் உடலைக் கழுவிக் கொள்வதுடன் முடிவடையும் சினிமா, இறுக்கமான மதக் கற்பிதங்களைக் கொண்டு பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வரலாற்று வண்முறைகளைக் காட்டுகின்றன.

ஒவ்வொரு இனமும் சமூகமும் மதப்பிரச்சாரங்களால் மத போதனைகளால் கட்டமைக்கப்பட்டு, அதன்பால் உருவாகும் பற்பல மூட நம்பிக்கைகளையும் பின்பற்றுதல்களையும் சடங்குகளையும் கொண்டுருக்கின்றன. மதப்பின்பற்றுதல்களும் சமய போதனைகளும் ஒரு தனி மனிதனையும் நாட்டின் இறையாண்மையையும், குடும்பத்தையும் எப்படி உருவாக்கியிருக்கின்றன என்கிற வெளிப்பாடுகளை மிகக் கவனமாக அவதானிக்க வேண்டிய காலக்கட்டத்தில்தான் இருக்கிறோம். இதைக் கலாச்சாரங்களைக் கடந்த தொடர் மதிப்பீடுகள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நவீன சிந்தனையின் அளவுகோள்களைக் கொண்டு அல்லது மாற்றுச் சிந்தனையின் பின்புலத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமயத்தை அல்லது மதத்தை மீள்பார்வை செய்வது என்றும் சொல்லலாம்.

அப்படிப்பட்ட ஒரு மதிப்பீட்டின் ஊடே ஒரு இனத்தின் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சினிமாதான் மலேசிய மலாய் இயக்குனரான யாஸ்மின் அமாட் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் “முஷ்கின்” மற்றும் “டேலண்ட் டைம்”. முஷ்கின் படத்தின் மூலம் யதார்த்தவாத குடும்ப உறவுகளினூடே மதத்தின் பின்னனியால் உருவாக்கப்பட்ட புனித எல்லைகளையும் பழக்கமாக்கப்பட்ட பல இறுக்கங்களையும் உடைத்து மிகவும் முற்போக்குத்தனமாக வெளிப்படுத்தியிருப்பது யஸ்மின் அமாட் அவர்களின் துணிவையும் மலேசிய சினிமா கலையை அவர் முன்னகர்த்தும் ஆளுமையும் வெளிப்படுகிறது.

முஷ்கின் படம் மலாய்க்கார கம்பத்தில் இரு பால்ய நண்பர்களின் இடையில் ஏற்படும் உறவை, பிறகு இளம் பருவத்தில் காதலாக மாறும் நுட்பத்தை அழகியலுடன் காட்சிப்படுத்தும் படம். மனித மனத்தின் உளவியல் மாற்றங்களையும் வாழ்வின் பரிணாமங்களின் உச்சங்களையும் அலசலாக மத கற்பிதங்களையும் கடந்து கலாச்சார சூழலில் நிகழும் ஒரு காதல் காவியம் போல எல்லாம் மனிதர்களுக்கும் தனது பால்ய காதலை நினைவுறுத்தும் படமாகவே யஸ்மின் அமாட் படைத்திருக்கிறார்.

ஒரு தேசிய பள்ளியின் ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் திறமைக்கான நேரம் என்ற நிகழ்வை முன் வைத்து நகர்த்தப்படும் “டேலண்ட் டைம்” மலேசிய சினிமா என்று விமர்சிக்கக்கூடிய புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மலேசிய நாட்டின் மூன்று முக்கிய இனங்களையும் கதையோட்டத்தில் இணைத்து, மலேசியா யாரையும் புறக்கணிக்காத ஒரு தேசிய அடையாளமாக மலர வேண்டும் என்கிற பிரச்சாரமற்ற எதிர்ப்பார்ப்புகளையும் பரிந்துரைக்கின்றன. அந்தத் தேசிய பள்ளியில் இருக்கக்கூடிய ஆசிரியர்களின் யதார்த்தமான நகைச்சுவை உணர்வுகள், அந்தப் பள்ளியில் பயிலக்கூடிய பிர இனத்து மாணவர்களும் அவர்களின் நட்பும், அதில் வெளிப்படும் மனநிலைகளும் என்று அழகியல் சார்ந்து விரிகிறது படம்.

மேலும் தற்காலத்திலய மலேசிய சமூகத்தில் சிறுபாண்மை இனமான தமிழர்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாக அவர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக பயங்கர எதிர்வினைகள் கிளம்பின. அதன் மொத்த விழிப்புணர் வெளிப்பாடுகளாக நவம்பர் 25 2007-இல் இண்ட்ராப் பேரணியும் அதன்பின் கைதான இரத்துச் செய்யப்பட்ட இண்ட்ராப் இயக்கத்தின் தலைவர்களும் செயலவையினர்களுமான 5 பேரின் இசா சட்ட நிபந்தனைக்குக் கீழ் கைதும் பெரும் புரட்சியை நிகழ்த்தியன. அதன் காரணிகளாக முன் வைக்கப்படும் ஒரு பிரச்சனையான இந்து கோவில் உடைப்புகளை யஸ்மின் அமாட் மிகவும் நியாயமான சமூகத்தின் குரலாக படத்தின் மூலம் முன் வைத்துள்ளார். அந்த இந்திய இளைஞனின் அம்மாவின் தம்பியை அவர் திருமணத்திற்கு முந்தைய நாளில் கோவில் தொடர்பான பிரச்சனையில் அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மலாய்க்காரர்களின் மீது கடுமையான ஆவேசத்தைக் கொண்டிருக்கும் அவரின் குரலைப் பயன்படுத்தி, தன் சொந்த இனத்தின் பலவீனங்களை ஆராயும் விதமாக கேள்வியெழுப்புகிறார் இயக்குனர் யஸ்மின்.

கடந்த 23ஆம் திகதி மலேசிய பாடகி சித்தி நூராலீசாவுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது திடீரென்று பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 25 ஆம் திகதி சனிக்கிழமை இரவு மணி 11.25க்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவின் உக்கிரத்தால் யஸ்மின் அமாட் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தார்.

கடைசிவரை தனது சினிமாவின் மூலம் இன ஒற்றுமையை வெளிப்படுத்திய மலேசிய சமூகத்தின் ஆளுமை யஸ்மின் அவர்கள். அவரின் நினைவாக மலேசிய நிலப்பரப்பின் சினிமா பெற்ற உலக விருதுகளும் உலக கவனமும் அங்கீகாரமும் என்றும் இந்த மண்ணின் ஆளுமையை அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும். அவரின் படத்தின் மீது அதிக நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட என் போன்ற எத்தனையோ இரசிகர்கள் யஸ்மின் 6 படங்களோடு தன் வாழ்நாளின் சாதனைகளை முடித்துக் கொண்டதை நினைத்து வருத்தம் மேலிடுகிறது. என்றும் அவர் நினைவாக. . .


கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: தீராநதி இதழ்(இந்தியா) ஜூன்

Saturday, July 25, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது


சுவாரஸ்ய வலைப்பதிவு விருது நண்பர் கிருஷ்ண பிரபு,சென்னை.
மூலமாக எனக்கு கிடைத்துள்ளது.


சில சமயங்களில் என் நட்பு வட்டத்தைத் தவிர வேறு சிலரின் பதிவுகளை படிக்க நேரும். அந்தப் பதிவர்களுக்கே நான் விருது கொடுக்க நினைக்கிறேன்.

1.பால முருகன்
"இவர் மலேசியப் பதிவர். இவருடைய பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆசிரியராக பணிபுரிகிறார் என்று நினைக்கிறேன். "மதிப்பீடுகள்-நவீனத்துவம்-படைப்பிலக்கியம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார். சுவாரஸ்யமான பல பதிவுகளை இவருடைய வலைப்பூவில் காணலாம். இவருடன் எனக்கு முற்றிலும் தொடர்பு இல்லை"
- கிருஷ்ண பிரபு

Wednesday, July 22, 2009

ஒரு தமிழாசிரியரின் நாட்குறிப்புகள்-1 (பள்ளிக்கூடம் என்கிற மலர்வனம்)



குறிப்பு: மக்கள் ஓசை நாளிதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர் கட்டுரையின் முதல் பாகம் இது.

கல்லூரி படிப்பு முடிந்ததும் கெடா மாநிலத்திலேயே ஒரு தமிழ்ப்பள்ளியில் பணி அமர்வு கிடைத்தது. எங்கிருந்து பார்த்தாலும் கடப்பவர்களின் கண்களுக்குத் தெரியாமல் ஒரு செம்பனை காட்டின் நடுப்பகுதியில் சிக்கிய ஒரு தமிழ்ப்பள்ளிக்கு முதல்நாள் வேலைக்குச் சென்றபோது நகர பிராந்தியத்திலிருந்து துண்டிக்கப்பட்ட அதிருப்தியுடன் மனம் இறுகியபடியே இருந்தது. பெரிய சாலையிலிருந்து 1 கிலோ மீட்டர் பிரிந்து செம்பனை நடுவுகளின் இருளைக் கடந்து உள்ளே சென்றால் பள்ளியின் வாசல் வரவேற்றுக் கொண்டிருக்கும். எப்பொழுது வேண்டுமென்றாலும் பாதையின் குறுக்கே ஒரு நீளமான பாம்பு வெளிவரலாம், அல்லது செம்பனை காட்டுப் பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் தேடி வந்து முட்டி வைக்கலாம். எல்லாம்விதமான தயார்நிலைகளுடனும் பாதுகாப்புடனும் நடக்க பழகும் குழந்தையைப் போல பள்ளிக்குச் சென்று வருகிறேன்.

கொஞ்ச நாட்களில் உட்புற பள்ளியின் சூழலையும் வாழ்வையும் பழகிக் கொண்டேன். மனிதனின் மகத்தான சாமர்த்தியம், எல்லாம் சூழல்களையும் பழகிக் கொள்ளும் ஒரு சமரசம்தானே. முதல்நாள் பள்ளியின் சுற்றுப்புறத்தை அவதானித்தபோது, எங்கும் அடர்த்தியான கிளைகளைத் தொங்கபோட்டுக் கொண்டு நிற்கும் செம்பனை மரங்களும் தூரத்தில் தெரியும் ஒரு முனியாண்டி சாமி கோவிலும், தவிர 2 கிலோ மீட்டருக்கு அப்பால் எங்கோ இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலையின் சத்தமும் அந்தச் சுற்றுச்சூழலை நிரப்பியிருந்ததை உணர முடிந்தது.

காலையில் பள்ளிக்குச் சென்றதும் முதல் பேருந்துக்குப் பள்ளி வந்து சேர்ந்துவிடும் மாணவர்கள் சிலர் அங்கும் இங்குமாக நடமாடிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் பள்ளியின் வாசலை வந்தடைந்ததும், யார் முதலில் காலை வணக்கம் சொல்லப் போகிறார்கள் என்கிற போட்டி உருவாகிவிடும். மோட்டாரிலிருந்து இறங்குவதற்கு முன்பே வரிசைக்கட்டிக் கொண்டு எங்கிருந்தோ என்னிடம் ஓடி வருவார்கள். காலை பனி அங்குள்ள பொருட்களிலெல்லாம் ஒழுகி கரைந்து கொண்டிருக்கும் தருணத்தின் முதல் தரிசனமே மாணவர்களின் அந்த, காலை வணக்கம் என்கிற மாபெரும் அதிசியம்தான்.

“காலை வணக்கம் ஐயா! ஏய் நாந்தான் முதல்லே சொன்னென். .”

“காலை வணக்கம் சார், காலை வணக்கம் சார். . நான் ரெண்டு வாட்டி சொல்லிட்டனே! இப்பெ என்னா பண்ணுவ?”

“சார். . நாளைக்கு நான் சொல்றெ வணக்கத்தைத்தான் நீங்க கேக்கனும் சொல்லிட்டேன்”

வாசலில் எனக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் இருக்கும் ஒரு பள்ளிக்குப் போவதென்பது கடவுளின் வீட்டிற்கு விருந்தாடியாகச் செல்வது போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தும். அவர்களின் குதுகலத்தில் பங்குபெறும் எனது முதல் காலை பொழுதுகள் அன்று முழுவதும் என்னை இயக்கிக் கொண்டிருக்கும். மாணவர்கள் அவ்வளவு உரிமையுடன் உதிர்த்துவிடும் வணக்கங்கள் என்னை நெருங்கத் துடிக்கும் அவர்களின் போராட்டங்களை அல்லது பிரயத்தனங்களை அடையாளப்படுத்துகிறது என்றே சொல்லலாம். அந்த இடத்தில் வணக்கமோ அல்லது காலை பொழுதோ அவசியம் இல்லை, அதைச் சொல்லத்துடிக்கும் அவர்களின் நெருக்கங்களைத்தான் ஒவ்வொரு ஆசிரியர்களும் கொண்டாடியாக வேண்டும்.

மறுநாள் எனக்காக அவர்கள் ஒரு மாபெரும் வணக்கத்தை மனதில் வைத்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பனி கொட்டும் ஒரு காட்டில் காத்திருப்பார்கள். செம்பனை மரங்களிருந்து ஒழுகி சாலையில் இறங்கிக் கொண்டிருக்கும் கூட்டம் கூட்டமான பனி பொழுதை உடைத்துக் கொண்டு வரும் என் மோட்டார் வெளிச்சத்தில், மாணவர்களின் முதல் காலை பல நம்பிக்கைகளுடன் பிறக்கிறது. “வணக்கம் சார்” என்று தூரத்திலிருந்தே எனக்கான அவர்களின் நேசத்தை தூக்கி எறியும் போது, அதை மிக கவனமாகப் பிடித்துக் கொண்டு சிரித்து மகிழ்வதைத் தவிர வேறென்றும் எனக்குத் தெரியவில்லை.

அன்று முழுவதும் என்னைப் பார்க்கும் இடங்களில்லெல்லாம் ஒரு நட்பு பாராட்டும் சினேகம் மாணவர்களின் சொற்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு உட்புற பள்ளி எனக்கு முதலில் கற்றுக் கொடுத்த விஷயம் மாணவர்களுடன் எப்படி அன்பாகப் பழகுவது என்பதைப் பற்றித்தான். எல்லாம் நேரங்களிம் இறுக்கமான தோற்றத்துடனும் பரபரக்கும் ஆவேசத்துடனும் கோபத்தை மாணவர்களிடத்தில் வெளிப்படுத்தும் ஒரு ஆசிரியர் முதலில் தொலைப்பது மாணவர்களின் அன்பையும் நெருக்கத்தையும்தான். மாணவர்கள் அது போன்ற ஆசிரியரை அணுகுவது கிடையாது, அவர்கள் பயந்து நடுங்கி அந்த மாதிரியான ஆசிரியர்களின் பார்வையிலிருந்து விலகியிருக்கவே நினைக்கிறார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களைப் பயமுறுத்தும் பூச்சாண்டிகள் போல மாறிவிடக்கூடாது. அல்லது குழந்தைகளைக் கடத்தும் ஒற்றைக் கண் வில்லன் போல நடந்துகொள்ளக்கூடாது. மாணவர்கள் நம்மை வெறுப்பதோடு நாம் கற்பிக்கும் அந்தப் பாடத்தையும் வெறுத்துவிடுவார்கள் என்கிற நிதர்சனத்தையும் ஒப்பிட்டு அளவில் அந்தப் பள்ளியிலிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.

“சார். . சாப்டீங்களா?”

“ஐயா. . எப்படி இருக்கீங்க?”

“ஐயா. . சார். . “ இப்படி ஒவ்வொரு சந்திப்பிலும் சிறுபள்ளியாக இருந்தபோதும் மாணவர்களின் அக்கறையான வார்த்தைகளில் சிக்கிக் கொள்கிறேன். அவர்களுடனான சினேகம் மாணவர்களை நம் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளவும் அவர்களை அணுக்கமாக நெருங்கி அவர்களைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. பள்ளிக்கூடம் என்பது காட்டுப் பகுதியில் அல்லது நகர் பகுதியில் அமைவது குறித்து ஆச்சர்யப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றுமில்லை, நமக்காகக் காலையில் பள்ளியின் வாசலில் ஒரு ”வணக்கத்திற்காகக்” காத்திருக்கும் மாணவர்களின் அன்பும் அவர்களின் நெருக்கமுதான் உண்மையான திருப்தி என்பதை ஒவ்வொருநாளும் அனுபவிக்கிறேன். அந்த மலர்வனத்தில் ஒவ்வொரு காலை பனியிலும் பல பூக்கள் முளைத்து செம்பனை காடுகளின் இருளைத் தோற்கடிக்கிறது என்றே மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
-நாட்குறிப்புகள் தொடரும்-

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
நன்றி: மக்கள் ஓசை நாளிதழ் (11.07.2009)

Monday, July 20, 2009

தமிழ் மொழியின் சிதைவும் சிறு சிறு சமரசங்களும் அதனுள் ஒளிந்திருக்கும் துரோகங்களும்

செய்திகள் வாசிப்பது நவீன படைப்பாளி என்கிற பைத்தியக்காரன்.

வணக்கம். அன்மைய காலமாக தமிழுக்கு கேடு தமிழுக்கு கேடு என்று அலறுகின்ற ஒருசிலர் அவர்களை அறியாமலேயே சிறு சிறு சமரசங்களின் மூலம் தமிழுக்குச் சிதைவைக் கொண்டு வருவதாக “தமிழ் நெறி மையக் பூலோக குழுமத்தின் தலைமைகத்திலிருந்து” இரு புகார்கள் வந்திருக்கின்றன.

புகார் 1: அல்லது சிறு சமரசம் 1
தமிழ் மரபிலக்கணத்தைப் பற்றி ஆழமாக விவாதிக்கும் சிலர், தமிழின் தொன்மத்தை ஏன் சிதைக்கிறாய் என கேட்கும் சிலர், தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்க்கொள்ள வேண்டி தமிழைச் சிதைத்துள்ளார்கள். எப்படி?

திருத்தமிழ் என்ற வலைப்பூவின் பெயரை “thirutamil.blogspot” அல்லது karutthumedai.blogspot என்றும் எழுதி தமிழைக் களங்கப்படுத்தியுள்ளார்கள்.

ஐயோ பதறுகிறது மனம். தமிழ் தொன்மத்தைக் கேலி செய்துள்ளார்கள். தமிழை மாற்று மொழியில் எழுதுவதா? அடப்பாவிகளே! தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இப்படி ஒரு சமரசமா? வலைப்பூவை மலாயிலோ ஆங்கிலத்திலோ எழுதினால்தான் அனுமதி கிடைக்கும் என்பதற்காக தமிழ் பெயரை மாற்று மொழியில் எழுதிவிட்டு, பிறகு அதே வலைப்பூவில் தமிழ் தொன்மம், தமிழ் மரபு என்று வாய் கிழியும் துரோகிகளே உங்களை எப்படி மன்னிப்பது? என்று “தமிழ் நெறி மையக் பூலோக குழுமத்தின் தலைமைகத்திலிருந்து” தலைவர் தமிழரண் கண்ணன் அவர்கள் கோபத்தோடு கத்துகிறார்.

நேரடி ஒலிப்பரப்பிலிருந்து “தொழில்நுட்ப ஆசான் மகாலிங்க பூபதி: தமிழில் புளோக்கை வைத்துக் கொள்ள தமிழில் முகவரியை வைத்துக் கொள்வதில் சிரமம் உண்டு. கூகள் புளோக் வசதியைக் கொடுக்கிறது, ஆகையால் கூகளின் அதிகாரப்பூர்வ முகவரியைத் தமிழில் வைத்துக் கொள்வதால் கூகள் தேடலில் எல்லோரும் தமிழில் தட்டி தேடுவதென்பது சாத்தியம் குறைவு என்பதால், தொழில்நுட்பத்தைச் சரிகட்ட ஒருசிலர் தமிழை விட்டுக் கொடுத்துள்ளார்கள். இதில் தவறென்ன, தமிழை “thamilz” என்று எழுதுவதினால் என்ன தப்பு என்று மானமிக்க தமிழ் பற்றாளர்கள் தனக்குள்ளே கேட்டுக் கொண்டு சிறு சமரசத்தில் தமிழைத் தொழில்நுட்ப வசதிக்காக விட்டுக் கொடுத்துள்ளார்கள்.

புகார் 2: சமரசம் 2

தமிழில் வைத்த பெயரை, மதிவாணன் என்கிற பெயரை “mathivaanan” என்றும் வேறு மொழியில் எழுதுகிறார்கள். ஐயகோ! மனம் பதைக்கிறதே! அது என்ன மொழி? புரியவில்லையே. ஏன் தமிழ் என்கிற மரபின் தொன்மத்தைப் பழிக்கிறார்கள். கலப்படத்தை வெறுக்கும் இவர்களா தனது தமிழ்ப்பெயரை இப்படிக் கொச்சைப்படுத்தி வேறு மொழியில் எழுதுகிறார்கள்?

நேரடி ஒலிப்பரப்பிலிருந்து சுகுமாறன்: எங்கெல்லாம் இவர்கள் இப்படித் தமிழ்ப்பெயர்களை வேறு மொழியில் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரியுமா?
1. தனக்கான தேசிய அடையாள அட்டையில்
2. வங்கியில் கடன் பெறும் பாரத்தில்
3. வீட்டில் ஆஸ்ட்ரோ விண்ணப்பப்பாரத்தில்
4. தொலைப்பேசி அழைப்பு கணக்கின் பாரத்தில்


ஐயையோ போய்விட்டதே மானம். சோற்றுக்காகவும் பணத்திற்காகவும் வசதிக்காகவும் தமிழை விற்றுவிட்டானே வேறு மொழிக்கு, இந்த மரபு தமிழன். என்று அழுது கொண்டிருந்தார் தமிழ் நெறி தொன்ம கழகத்தின் செயலாளர்.

நேரடி ஒலிப்பரப்பிலிருந்து வியாழக்கிழமை குமாரசாமி: தேசிய அடையாள அட்டையில் எங்கள் பெயர் வேறு மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது. அதனால் என்ன, நாங்கள் இந்த நாட்டுப் பிரஜை அதனால் தேசிய மொழியான அந்த மொழியில்தான் எழுத வேண்டியுள்ளது. யாருக்கு என்ன சிரமம்? தமிழ் மரபு தமிழ் இலக்கணம் என்றெல்லாம் நாங்கள் நவீன படைப்பாளிகளின் ஆபாசங்களைப் பார்த்துதான் கத்துவோம் ஆனால் நாங்கள் ஏற்றுக் கொள்ளும் அடையாளங்களில் எங்களுக்கு தமிழ் முக்கியமல்ல. நாங்களாம் வாய் சொல்லில் வீரரடி பாப்பா!

தமிழ் நெறி தொன்ம கழகத்திலிருந்து தலைவர் அறைக்கூவல்:

தமிழ் பாவிகளே, நவீன படைப்பாளிகளை முட்டாள்கள் எனவும் பைத்தியம் என்றும் கதைக்கும் நீங்கள் இப்படிச் சிறு சிறு சமரசத்தில் தமிழ் துரோகிகளாக இருந்துள்ளதை இதுவரை யாரும் வெளிச்சத்திற்குக் காட்டவில்லையே! மொழிக்கு இழிவு என்று கத்திவிட்டு நீங்களே மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக சுயலாபத்திற்காக விற்றுவிட்டிர்களே! என்ன ஒரு கொடுமை.

நவீன படைப்பாளி 1: உங்களுக்கு தேவையென்றால் எதையும் செய்வீர்களா? நாங்கள் மொழியைச் சிதைக்கவில்லை, எங்கள் வாழ்வையும் எங்கள் மனிதர்களையும் எங்களுக்கான நவீன தமிழ் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம். உலக இலக்கியங்களையும் தமிழில் மொழிப்பெயர்த்து தமிழுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழை இறுக்கமாக்கவில்லை. ஆனால் நீங்கள், படைப்பிலும் இல்லை, தமிழையும் உலக அளவிற்குக் கொண்டு செல்லவில்லை.

தைரியமிருந்தால், தமிழ் மொழியின் தனித்துவத்தைக் காப்பது உண்மையென்றால், உங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் தமிழ் மானம் உண்மையென்றால், முதலில் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் மாற்றான் மொழியை முற்றிலுமாக துறந்து பாருங்கள். முடியுமா? என்ன முடியாதா? நாட்டிலிருந்து துரட்டியடிக்கப்படுவீர்களா?
அப்படியென்றால் சமரசம் நியாயமானதா? என்ன? தொழில்நுட்பத்தைப் பழகவும், தொழில்நுட்பத்தில் ஈடுபடவும் ஆங்கிலம் ஒரு துணையாகியிருப்பதால் “உஷ் ! உஷ்! சத்தம் போடாதே” என்று கிசுகிசுக்கிறீர்களா? ஐயையோ. . அப்ப கதைப்பதை நிறுத்திவிட்டு தகுதி பெற்றதும் வாருங்கள். எப்படியெல்லாம் தமிழைத் தளர்த்தி மாற்றான் மொழியில் மொழிப்பெயர்த்து தள்ளுகிறீர்கள். எத்துனைப் பெரிய முரண்பாடுகளில் இருந்துகொண்டு அறியாமைகளுடன் பேசி வந்துள்ளீர்கள்?

இன்னும் புகார்கள் நிரம்பிக் கொண்டே இருக்கின்றன.

பின்குறிப்பு: இது ஒரு கற்பனை கதை: உயிருடன் வாழும் யாரையும் குறிப்பிடுபவை அல்ல.

Tuesday, July 14, 2009

எழுத்தாளர் சண்முகசிவாவுடன் ஒரு கோப்பைத் தேநீர் – 2

அநங்கம் இதழ் குழு சார்பில் இளைஞர்களுக்கான “ஒரு கோப்பைத் தேநீர் இரண்டாம் கலந்துரையாடல் சந்திப்பாக கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் சண்முகசிவா ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு எளிமையான மனிதர். சிறந்த எழுத்தாளரும்கூட. கலந்துரையாடலைப் பற்றி சொன்னதும், உடனே ஆதரவைத் தெரிவித்தவர், “ஒரு கோப்பைத் தேநீர்” எனக்கு பிடித்தமான பெயராக உள்ளது என்றார்.


ஒரு கோப்பைத் தேநீர் என்ற புத்தகத்தை ஓஷோ எழுதியுள்ளார். ஆங்கிலத்தின் (cup of tea) தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட பரவலான வாசிப்புக்குச் சென்ற முக்கியமான புத்தகம். இருத்தலியலின் மகத்துவத்தையும் நுட்பத்தையும் எளிமையான உரையாடலாக அந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனித உறவுகளுக்கு மத்தியில் இறுக்கமான சூழலையெல்லாம், உடைத்து எறியக்கூடியது இருத்தலியல் பண்பு. இப்பொழுது நீ இருக்கிறாய் என்பார் ஓஷோ.


ஆதலால், மூத்த எழுத்தாளர்களுடனான இந்தச் சந்திப்பும் கலந்துரையாடலும் பெரியவர் இளையவர் என்கிற வயது வித்தியாசங்களையும் சமூகப் பிம்பங்களையும் தகர்க்கும் ஒரு முயற்சியாக இருக்கட்டும் என்றுதான் “ஒரு கோப்பைத் தேநீரை” அவர்களுக்கு மத்தியில் வைத்துள்ளேன். நட்புணர்வுடன் இலக்கியம் பேசுவதில்தான் முறையான பகிர்தல் நடைபெறும். கொள்கை இறுக்கம், கருத்துமுரண்பாடு, அவதூறுகளுக்கு மத்தியில் நடைபெறும் உரையாடலும் பகிர்தலும் தலைகணத்தையும் ஆளுமை ஆக்கிரப்பையும்தான் வெளிப்படுத்தும்.



ஆகையால் நட்போடு ஒரு கோப்பைத் தேநீருடன் பேசலாம் வாங்க.
கலந்துரையாடல் சந்திப்பில் யாருக்கும் பொன்னாடையோ மாலையோ போர்த்தப்படாது. துதி பாடி பிரசங்கமும் நடத்தப்படாது, மிகவும் எளிமையான உரையாடல், சந்திப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒஷோ தன் சீடனுடன் தேநீர் அருந்தி கொண்டே ஒரு கேள்வியைக் கேட்பார்.

“உலகத்திலேயே மிக அதிசயமான நிகழ்வு எது?”


)சீடன் பல உலக நிகழ்வுகளைக் கூறினான்.


“அதெல்லாம் எதுவும் இல்லை, இப்பொழுது நீயும் நானும் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருப்பதுதான் உலகிலேயே அதிசயமான நிகழ்வு”

கலந்துரையாடலின் விவரங்கள்:

திகதி: 19.07.2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை மணி 9.00க்கு
இடம்: Petaling Jaya Perpustakaan Konumiti

மேல் விவரங்களுக்கு: கே.பாலமுருகன் (+6016-4806241)

Monday, July 13, 2009

பாகம் 2 - மரபொழுங்குடன் மரபைக் கற்றவன் மட்டுமே தமிழ் படைப்பாளி (மற்றவன் பைத்தியம்) – மறைமலை இலக்குவனர்

நவீன இலக்கியம் குறித்த தனது கல்வியின் தேடலில் கிடைத்த கல்வியறிவுடன் இலக்கியத்தை அணுகிவிடலாம் என்று பேராசியர் பெருந்தகை மறைமலை அவர்கள் தனது நவீனத்துவம் சார்ந்த கருத்துகளை முன்மொழிந்தார். கீழே சந்தை, அறைக்கு வெளியே தண்ணீர் தேங்கிக் கிடக்க, படிகளில் சந்தையின் சாயல், என ஒரு இறுக்கமான சூழலில் இப்படியொரு பாடத்தைக் கறக வேண்டுமா என்று தோன்றியது. இருந்தும் கல்வி சார்ந்தவர்கள், பின்நவீனத்துவம் மற்றும் பல இசங்களை இரசங்களாகவும் பாடமாகவும் கரைத்து குடித்து நவீன இலக்கியவாதிகளின் மீது வாந்தி எடுக்கும் இவர்களைப் போன்றவர்களின் கருத்துகள் எப்படி உள்ளன என்பதையும் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது.

1. “மரபைக் கற்றவன் மட்டுமே தமிழ் படைப்பாளியாக இருக்க முடியும், மரபு தெரியாதவன் எப்படியொரு தமிழ்ப் படைப்பாளியாக இருக்க முடியும்” என்ற முதல் கருத்தை அவர் முன்வைத்தார். இதையே நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் மிகவும் நட்புணர்வுடன் கூறினார், “செவ்வியல் இலக்கியங்களைப் படித்துவிட்டு எழுத வருவது உங்களுக்கு தமிழ் எழுத்தை/படைப்பை மேலும் ஆழமாக விமர்சிக்கவும் படைக்கவும் முடியும்” என்று.

பேராசிரியர் கடுமையாக ஒரு வரையறையாக முன்வைத்த ஒரு கருத்தை எஸ்.ரா மிகவும் எளிமையான தொனியில் நட்புடன் முன்வைத்தார். மரபைக் கற்பது நல்ல விஷயமாகும், நமது பாரம்பரியத்தையும் தொன்ம இலக்கியங்களையும் கற்றுக் கொள்வது, சரித்திரத்தைக் கற்றறிந்து கொள்வதற்கு சமானம். ஆரம்பபள்ளி முதலே “வரலாறு” அல்லது “சரித்திரம்” பாடம் தொடங்கிவிடுகிறதே. ஆனால் மரபைக் கற்றவன் மட்டும்தான் படைக்க முடியும் என்பது மேல்தட்டுக் கல்வியாளர்கள்/விமர்சகர்களின் அழுத்தமான ஒரு கட்டளையாகத் தெரிகிறது. மெத்த படித்தவர்கள், தன் உயர்கல்விக்காக செவ்வியல் இலக்கியங்களோடு மன்றாடிவிட்டு வந்தவர்களெல்லாம் தனது கல்வியறிவை வைத்துக் கொண்டு வாழ்வின் அசல் படைப்பாளியைக் கூறு போட நினைப்பதோ அல்லது வரையறை அளித்து அவனை நிராகரிக்க நினைப்பதோ அபத்தம்.

2. மரபைக் கற்று, மரபோடு தேய்ந்து மரபோடு தொய்ந்து, மரபு ஒழுங்குடன் அளிக்கப்படும் புதிய முயற்சிகள்தான் “மோடர்னிஷம்” என்று அவர் கருத்தை முன் வைத்தார். ஆனால் மரபு கொடுக்கும் இறுக்கமான வடிவங்களைத்தான் உடைத்து எளிமையாக்கி மனிதனோடு நெருங்க வைக்கிறார்கள் நவீன படைப்பாளிகள். பாமரனும் கவிபாட வேண்டும் என்பதற்காகத்தான் புதுகவிதை வடிவம் மரபு வடிவத்திலிருந்து உடைந்து வந்தது. மரபு தவறென்று யாரும் சொல்ல கிடையாது, மரபின் வடிவம்தான், தற்காலத்து சிந்தனை வெளிப்பாடுகளுக்கு சரியான இருப்பைக் கொடுப்பதில் தோல்வி அடைகிறது என்று சொல்லப்பட்டது. அதன் மறு உருவாக்கமே நவீன படைப்புகள்.

பேராசிரியர் சொல்வதைப் பார்த்தால், மணிமேகலை, சிலப்பதிகாரம், தொல்காப்பியம், அகநாணுறு, புறநாணுறு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சங்கப் பாடல்கள், இப்படியாக எல்லாவற்றையும் நாம் பாடமாக எடுக்க வேண்டும். வாழ்நாளில் பாதி வயதைத் தாராளமாக செலவழித்து இதையெல்லாம் படித்துக் கரைத்து குடித்துவிட்டு வெளியே வரும்போது நாம் படைப்பதற்கோ எழுதுவதற்கோ எதுவும் இல்லாமல், நடைமுறை சார்ந்த எல்லாவற்றிலிருந்தும் பல வருடங்களுக்குப் பின் துண்டிக்கப்பட்ட ஜடமாக வந்து விழ வேண்டியதுதான்.

மரபைக் கற்பதில் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. என்னால் முடிந்த மட்டும் அகநாணுறூ / புறநாணுறு பாடல்களை விரும்பி வாசித்துக் கொண்டிருக்கிறேன். சிலப்பதிகாரத்தைக் கல்லூரி காலத்தில் பாடமாகப் படித்தேன். நம் மூதாதையர்களின் வாழ்வு அது. அதைக் கற்று தெரிந்துகொண்ட பின் அதை வேண்டாம் என்று நீக்குவதற்கும் நமக்கு உரிமை உண்டு. பேராசிரியர் சொன்னார், “பிடிக்கிறதோ இல்லையோ அது இரண்டாம் பட்சம் ஆனால் மரபைக் கற்பது ஒரு எழுத்தாளனுக்கு அடிப்படை தகுதியாகும். அப்படியென்றால் எழுத்தாளனாக ஆக வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் சமூகத்தில் வாழ்ந்து நடைமுறையின் அக புற கட்டமைப்புகளை உள்வாங்கிக் கொண்டு எழுத வேண்டியதில்லை, மணிமேகலையைப் படித்து அதை தாளம் தப்பாமல் ஒப்புவிக்க தெரிந்தாலே போதும், எழுத்தாளராகிவிடலாம். ஆஹா நல்ல பள்ளிப் படிப்பு.

-தொடரும்- மூன்றாம் பாகம்

கே.பாலமுருகன்
மலேசியா

Sunday, July 12, 2009

Modenism-ஐ “நவீனத்துவம்” என்று சொன்னால் அவன் மடையன் - மறைமலை இலக்குவனர்

பினாங்கு மாநிலத்தின் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கும் பேராசிரியர் மறைமலை இலக்குவனர் அவர்களின் இலக்கிய சொற்பொழிவு பினாங்கின் பாலாய் ராக்யாட் என்கிற சந்தைக்கு மேலுள்ள மண்டபத்தில் நடந்தது. சீனி நைனா முகமது அவர்கள் பேராசிரியரை அழைத்து வந்து அவரின் சொற்பொழிவை அங்கு நடத்துவதற்கு வாய்ப்பளித்திருந்தார். (இதுவரை நிகழ்வு குறித்து அறிமுகம் மட்டுமே)

நிகழ்வில் தனது உரையைத் தொடங்கிய பேராசிரியர் ஒரு தி.மு.க கட்சியின் அரசியல் போதகர் போலவும் அல்லது தமிழ்த்துறையின் பேராசிரியரின் கற்றல் கற்பித்தல் பாடம் நடத்துவதற்கு நிகராகவும் தனது உரையை செவ்வனே ஆற்றினார்.

ஏன் அவர் தி.மு.க கட்சியின் அரசியல் போதகர் என்றேன்? சமூகத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு மட்டுமே வீரமிக்கவையாக இருக்க வேண்டும் இலக்கியம் என்று கடைசிவரை வாதாடினார். தி.மு.க பேச்சாளர்கள் இப்படித்தான் மேடை பேச்சில் இலக்கியம் வளர்ப்பார்கள். எனினும் உரையை முடிக்கும்போது திடீரென்று நல்லவராக மாறி, “எழுத்தாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள், வணங்கவேண்டியவர்கள்” என்றெல்லாம் பேசிவிட்டார்.

Modenism-ஐ “நவீனத்துவம்” என்று சொன்னால் அவன் மடையன் என்று மறைமலை இலக்குவனர் கூறினார். அதைப் புதுமை இயல் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று பாடம் நடத்தினார். பேராசிரியர்கள் என்றாலே தான் படித்த பிற துறை சார்ந்த நுண்ணறிவுகளைக் கொண்டு மிக நேர்த்தியாக ஒப்புவிப்பார்கள். மேலும் பல பேராசியர்கள் நவீன இலக்கியவாதிகளின் மீது காத்திரமாக பாயக்கூடியவர்கள் என்று தனது பேச்சின் மூலம் நிறுபித்துள்ளார்கள்.

சரி மேலும் நவீனத்துவம், பின்நவீனத்துவம் நம்முடைய தமிழ்ப் பாரம்பரியத்திற்கு ஏற்புடைய வடிவமல்ல, அதை மேலை நாட்டிலிருந்து தூக்கிக் கொண்டு வந்து, தலையில் வைத்துக் கொண்டாடி, ஆர்பாட்டம் செய்து, தமிழ் சூழலைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றும், மேலும் ஆசியா நாடுகளின் குடும்ப சிதைவும், மனச் சிதைவும் சாத்தியமில்லாதவை ஆகையால் நம்முடைய சமூக கட்டமைப்பு இன்னும் சிதையவில்லை என்று வாதிட்டார் பேராசிரியர். ஒருவேளை பினாங்கு(மலேசியாவின் மாநிலம்) வந்தவர், அழகிய பாலத்தையும், கவர்மிகு உல்லாச தளங்களையும் பார்வையிட்டவர் மலேசியா மிக புனிதமான எவ்வித சிக்கலும் இல்லாத நிலப்பரப்பு என்று சொல்லிவிட்டார் அல்லது எண்ணிவிட்டார் போல. அவருக்கு என்சார்பில் சொல்ல வேண்டியது நிறைய இருந்தது ஆனால் நவீன தமிழ் இலக்கியவாதிகளைப் புரிந்துகொள்வதில் ஒரு இறுக்கமான பாடத்திட்டத்தை வகுத்துக் கொண்டு இருப்பவருடன் வாதிட்டும், விவாதித்தும் பயனில்லை என்று புரிந்துகொள்ள முடிந்தது.

பினாங்கு பாலம் இதற்கு முன் காலை தொடங்கி மாலைவரை நெரிசலால் சிதைந்து இருக்கக்கூடிய, சாலை பதற்றங்களை ஏற்படுத்தகூடிய ஒரு தடம். இந்தச் சாலை நெரிசலே போதும் அதில் பயணிக்கும் தொழிலாளர்களின் அவசர பொழுதுகளைச் சிதைத்து அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிடும். இங்கிருந்து தொடங்கி அந்த மன உளைச்சல் வீட்டு உறவுகள்வரை தாவும்.

மேலும் 8 வயது சிறுமியைக் கடத்தி அவளின் யோனியில் கத்திரிக்காய், முள்ளங்கி போன்றவற்றைத் திணித்து பாலியல் வன்கொடுமைப்படுத்திய மனம் சிதைந்தவர்கள் இருக்கும் பல மனிதர்களை கொண்ட சமூகமும்தான் இங்கேயும் உள்ளன. பிறகெப்படி பேராசிரியர் மனச்சிதைவு இங்கில்லை என்று சொல்ல முடியும்? பேராசிரியர் புனிதமான சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார், அவருக்கு என் வாழ்த்துகள் ஆனால் மனச்சிதைவும் குடும்ப சிதைவும் இன்னும் ஆசியா நாடுகளின் உக்கிரமடையவில்லை, அது மேலைநாட்டின் சமூக கட்டமைப்பு என்று சொல்வது நடைமுறை சார்ந்த சிந்தனையல்ல என்று கட்டாயம் சொல்ல முடியும். பிற நாடுகளுக்குக் கண்ணியமான சுற்றலாவை மட்டும் மேற்கொண்டால், அந்த நாட்டின் பின்னனியையும் சமூக வளர்ச்சியும் புரிந்துகொள்ள முடியாது. அதிகம் படித்துவிட்டதால் எல்லாம் நிலைகளையும் தனது கல்வி ஆளுமையைப் பயன்படுத்தி எந்தச் சமுகத்தையும் மதிப்பிட்டுவிட முடியாது.

அன்மையில் ஜொகூர் மாநிலத்தில் குழந்தைகளைப் பெற்று விற்கும் தம்பதிகளைக் கண்டுப்பிடித்துள்ளார்கள். குழந்தைகள் பார்க்கும்படி நேரடியாக புணர்ந்து பிள்ளைகளைப் பெற்று வேலைக்கு அனுப்புவதும் பிறருக்கு விற்றுப் பிழைக்கும் இந்தக் குடும்பம் இன்னும் சிதையவில்லை என்று பேராசிரியர் மறைமலை போல சாதரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாமா? என்ன ஒரு அபத்தம்?

மேலைநாட்டு சமூகக் கட்டமைப்பில் மனச்சிதைவு இருப்பதால் அவர்கள் பின்நவீனத்துவம் சர்யலீசம் படைக்கிறார்கள், அப்படியானதொரு சூழல் இல்லாத நமது ஆசியா நாட்டில் ஏன் படைப்பாளிகள் பின்நவீனத்துவம் எழுத வேண்டும் என்று கேள்வி கேட்கிறார் மறைமலை. நாங்கள் பின்நவீனத்துவம் எழுதவில்லை, எங்கள் சமூகத்தையும் எங்களின் வாழ்வு சார்ந்த அனுபவங்களையும் எழுதி கொண்டிருக்கிறோம். இசங்கள் கிறுகெடுத்த பலரும் இந்த மண்ணிலிருந்து வரும் அசலை அசலாகப் பார்க்க பழகவில்லை. மேலைநாட்டின் வரவுகளையே முன்வைத்து எல்லாம் நிலப்பரப்புகளின் இலக்கியங்களையும் வாழ்வையும் பார்த்துக் கொண்டும் மதிப்பீட்டு கொண்டும் இருந்தால், முதலில் மலேசிய தோட்டப்புற சமூகத்தில், நகர் சார்ந்த வாழ்வின் நெருக்கடியில் ஒரு 6 மாதம் வாழ்ந்து பார்க்கட்டும்.
இன்னும் தொடரும்

கே.பாலமுருகன்
மலேசியா

Saturday, July 11, 2009

அலைந்து திரிவது ஒரு மாபெரும் பயணம் – அர்த்தமற்ற பயணங்கள்




மாபெரும் போராளி சே குவாரா தனது மோட்டார் பயணத்தின் போது 3000க்கும் மேற்பட்ட மைல்கல் கடந்து பயணித்த போதுதான் தனக்கான வாழ்வின் மகத்துவங்களையும் தனது வெளியையும் அதன் அர்த்தங்களையும் கண்டைகிறார். பயணம் அவரின் வாழ்வின் தடத்தை மாற்றியமைத்தது. போலிவியா காட்டுக்குள் இருந்தபோது அவரின் நாட்குறிப்புகள் அவரின் வாழ்வின் துல்லியமான பகுதிகளையும் உணர்வுகளையும் அவர் அலைந்து திரிந்த ஒவ்வொரு சுவடுகளுக்கும் அப்பால் படிந்திருக்கும் அனுபவங்களையும் காட்டும். பயணம் செய்வது நம் வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியாகும். ஒவ்வொருநாளும் பல மனிதர்கள் பல இடங்களுக்குப் பல காரணங்களுடன் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதுநாள்வரையில் நீங்கள் மேற்கொண்ட பயணங்களை நினைவுகூற முடியுமா? அந்த ஒவ்வொரு பயணங்களிலும் நீங்கள் சந்தித்த மனிதர்களையும் சம்பவங்களையும் அதன் பிறகு அவதானித்துள்ளீர்களா? அவசரமாக எல்லாவற்றையும் கடந்துபோகும் சுபாவத்தினாலேயே பல பயணங்களை தினசரி கடமையைப் போலவே பாவித்துக் கொண்டு மறந்தும் துறந்தும் விடுகிறோம். பல மேதைகள் பயணம் செய்வதை விரும்புகிறார்கள், நேசிக்கிறார்கள். பலரின் வாழ்வை அர்த்தமுள்ளாக்கியதே அர்த்தமற்ற பயண்ங்கள்தான் என்றால் நம்ப முடியுமா?

அதென்ன “அர்த்தமற்ற பயணம்”? எந்தவித நோக்கமுமில்லாமல் அலைந்து திரிவது, தேசம் விட்டு தேசம் தாண்டுவது, பேருந்து பிடித்து ஊர் ஊராகச் செல்வது, போகும் இடத்தை நிர்ணயம் செய்யாமல் பயணம் செய்வது. இப்படிப் பல வகையிலான பயணங்கள். காலையில் பேருந்து பிடித்தால் சரியாக 5 மணிநேரத்தில் போய் சேரும் இடத்தை வந்தடைந்துவிடலாம் என்று டிக்கெட் உட்பட எல்லாமும் நேர்த்தியாக அமைந்த பயணம் மிக பாதுகாப்பானவை, சலிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எங்கு சென்று சேர போகிறோம் என்கிற எல்லாவற்றையும் மிக ஒழுங்கமைப்புடன் தீர்மானித்துவிட்டு, பயணம் செய்வது எவ்விதத்திலும் பயனை அளிக்காது. நான் சொல்வது அம்மாதிரியான பயணங்கள் கிடையாது.

மத குருக்கள், ஞானிகள், எழுத்தாளர்கள், போராளிகள் என சமூகத்தைச் சேர்ந்த பலரும் தீர்மானிக்கப்படாத எத்தனையோ பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் வாழ்வைத் திட்டமிடலுக்கு அப்பாற்பட்டு வைத்து பார்க்கிறார்கள். ஹரே ராமா ஹரே கிருஷ்ண இயக்கத்தைத் தோற்றுவித்த மத குரு பிரபுபாதா அவர்கள் கிருஷ்ண நாமத்தைப் பரப்புவதற்காக தனியாக கப்பல் ஏறி கையில் சொற்ப பணத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் சென்றார். கடவுளின் மீதான நம்பிக்கை மட்டுமே அவரைக் கடல் தாண்டி செல்வதற்குப் பலத்தைக் கொடுத்திருந்தது. அவரது பயணத்தினால் கிருஷ்ண பக்தி உலகம் முழுவதும் சென்றடைந்தது. லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அவர் முதலில் பக்தியைப் போதித்தது ஹிப்பிகளுக்குத்தான். ஹிப்பிகள் என்றால் போதைப் பித்தர்கள். அவர்களின் கவனங்களைப் பக்தியின்பால் திருப்பிவிட்ட மத குரு அவர்.

எனக்குத் தெரிந்து பல எழுத்தாளர்கள், இன்றும் வாழ்வின் இரகசியங்களையும் அதன் தனித்துவங்களையும் தேடி ஊர் ஊராகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணம் அவர்களின் படைப்பிலக்கியத்தை விரிவாக்குகின்றது. எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்றவர்கள் வாழ்நாள் முழுவதும் அர்த்தமற்ற பயணத்திலேயே பக்குவம் அடைந்தவர்கள், தனக்கான படைப்பிலக்கிய வெளியைக் கண்டடைந்தவர்கள் என்றே சொல்லலாம். எஸ்.ரா உயிர்மையில் அவரும் கோணங்கியும் மேற்கொண்ட அதிசய பயணங்கள் பற்றி மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

உலக புகழ் பெற்ற ஜப்பானிய சினிமா இயக்குனர் அகிரா குரோசாவா ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படித்தான் பதில் அளிக்கிறார்.

“ஒரு சிறந்த சினிமாவைத் தருவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்?”

“எதையும் படிக்கக்கூடாது. இது பள்ளிப் பாடமல்ல. வீட்டை விட்டு தூரமாகப் பயணம் செய்து அலைந்து விட்டு வர வேண்டும். மூலை முடுக்குகளில் சுற்றி அலைய வேண்டும். வீடு வந்து சேரும் போது ஒரு நல்ல சினிமாவுக்கான எல்லாமும் உன்னிடம் இருக்கும்”

இனிமேல் ஏதாவது ஒருநாளில் ஒரு நல்ல அர்த்தமற்ற பயணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். காரணங்கள் எதுவும் அற்ற வெறுமனே சுற்றி அலைந்துவிட்டு வரக்கூடிய ஒரு பயணத்திற்காக உங்களைத் தயார் செய்யுங்கள். அது உங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். நம்முடைய பரபரப்பான தினசரி அட்டவணை வாழ்வின் எல்லாம் துரங்களையும் ஒழுங்குகளையும் அறுத்து போட்டுவிட்டு, உங்களுக்காகப் பயணம் செய்யுங்கள். பயணம் உங்களுக்கான பாதையை அடையாளப்படுத்த வாய்ப்புகள் உண்டு.

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, July 10, 2009

தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்




நேற்றுவரை
என் விரல்களின் இடுக்குகளில்
காதலுக்கென ஒரு வரி
சிக்கியிருந்திருக்கலாம்.

நான் கடந்து வந்த
இரவுகளின் பெரும்
முணுமுணுப்பாக
இருந்ததென்னவோ
காதலின் ஒற்றை
வரிகள்.

நேற்றுவரை
வலியும் துக்கமும்
ஏக்கமும் முயற்சிகளும்
இருந்தன.
கவிதைகளும் இருந்தன.

இன்று
நெடுநாள் காத்திருப்பிற்குப்
பிறகு காதலில்
வெற்றியடைந்து
காதலியைப் பெற்றுவிட்டேன்.
கவிதைகளெல்லாம்
எங்கோ தொலைத்துவிட்டன.

2

தப்பித்து தப்பித்து
எத்தனையோ இரவுகளுக்கு
பிறகு
இன்றுதான்
ஒரு காதல் வரியை
சேமிக்க முடிந்தது.

அடுத்த வீட்டு
காதலன்
அவனின் காதலிக்காக
வைத்திருந்த கவிதைகளை
எப்படியோ காற்றில்
தவறவிட்டிருக்கிறான்.

200 நாட்கள்
கடும் முயற்சிகளுக்கு
பிறகு
அன்றென்னவோ
ஒரு காதல் கவிதையை
எழுதிவிட்டேன்.
ஆனால் அதுபோல
ஏற்கனவே 1000 கவிதைகள்
பிரசுரமாகிவிட்டன
என்பதை அறிந்துகொண்டபின்
பத்திரபடுத்த இயலாதது
இந்தக் காதல் கவிதைகளென
தீர்மானித்தேன்.


3
ஒரு காதல் கவிதையை
எழுதிய பிறகு
அதனைப் பத்திரப்படுத்த
மேகத்தின் விளிம்பில்
கட்டி வைத்தேன்.
மழையென பொழிந்து
சாக்கடை நீரில்
தேங்கிக் கிடந்தது.

தோற்றுப்போன
ஒரு காதலின் இரகசியங்களை
பறவைகளிடம் கொடுத்தனுப்பினேன்.
அது ஊராக ஊராக
எச்சமாகக் கழிந்து
தள்ளியது.

காதலுக்குத்தான்
மேகங்களும் பறவைகளும்
காதலின் தோல்விகளுக்கல்ல
என்பதை பாழாய்போன
ஒரு காதலும்
கற்றித்தரவில்லையே.

கே.பாலமுருகன்
bala_barathi@hotmail.com

Wednesday, July 8, 2009

இருளைக் கடப்பதுதான் தைரியமா?

இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிற்சி முகம்களோ அல்லது தன்முனைப்பு முகாம்களோ நடந்தால் அதில் நடக்கும் அபத்த கூத்துகள் பற்றி சொல்லவே வேண்டாம். பித்த மூளைகளின் அரிப்புகள், தனியார் நிறுவனங்கள் தமிழ்ப்பள்ளிகளில் புகுந்து தன்முனைப்பு கொடுக்கிறேன் என்கிற பெயரில் ஏற்படுத்தும் கூத்துகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.

அம்மா அப்பாவின் தியாகங்களை உணர்த்துவதற்காக, அம்மா பாடல், சோகப் பாடல்களைப் போட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அழச் செய்து திருத்த வேண்டும் என்கிற மனோபாவத்துடன் அலைகிறார்கள். இதில் பல்கலைகழக மாணவர்களும் இதற்கு உடந்தையாக இருந்து பள்ளிக்குச் சென்று மாணவர்களை உளவியல் ரீதியில் பயமுறுத்துகிறார்கள்.

சரி அதை விட்டுத் தள்ளலாம். அதையும் கடந்து மேலும் ஒரு நடவடிக்கை இருக்கிறது. இதுதான் அபத்தத்தின் உச்சம். மாணவர்களுக்கு தைரியத்தை உண்டாக்க போகிறோம் என்கிற திட்டத்துடன், அவர்களை நடுகாட்டில் இருட்டில் தனியாக நடக்கவிட்டுப் பயிற்சி அளிக்கிறார்கள். தன்முனைப்பு முகாமை நடத்தும் அவர்களே இருளில் ஆங்காங்கே ஒளிந்து கொண்டு மாணவர்கள் தனிமையில் நடக்கும்போது பயமுறுத்தி உற்சாகமும் படுத்தவே செய்கிறார்கள்.

மாண்வர்கள் என்ன இருளில் காட்டில் இலைகளைச் சுற்றிக் கொண்டு போருக்கா போகப் போகிறார்கள்? அந்தக் காலத்திலிருந்தே நாம் குழந்தைகளை வளர்ப்பதிலும் அவர்களை வழிநடத்துவதிலும் தோல்வியடைந்தே வந்திருக்கிறோம். அட்தானால்தான் இருளைக் கண்டால் மாணவர்களும் குழந்தைகளும் அலறுகிறார்கள். அதன் நிதர்சனத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் தன்னை வெளிச்சத்தில் இருத்திக் கொண்டு இதுதான் உண்மையென நினைத்துக் கொள்கிறார்கள். இருளைக் கடக்க வேண்டும் அது பயங்கரமானது என்று கற்பிக்கப்பட்டே வந்துள்ளதால் அவர்களின் பார்வை இருளின் மீது ஒரு பூச்சாண்டியைப் பார்ப்பதற்கு நிகரான மனநிலையில் படர்கிறது.


இதன் விளைவு என்ன தெரியுமா?

மாணவர்கள் அலறியடித்துக் கொண்டும் அழுது கொண்டும் ஓடுகிறார்கள். பயத்தில் விழி பிதுங்கி செய்வதறியாமல் மனம் துடிதுடிக்க தனக்குள்ளே அமிழ்ந்து போகிறார்கள். இருளைக் கண்டு அதைக் கடக்க முடியாமல் தவித்து அதன் விளிம்பில் நிற்கிறார்கள். இதுதான் அந்த நடவடிக்கையின் விளைவும் அதை நடத்துபவர்களுக்குக் கிடைத்த முதுகு சொறிதலும்.
இருளைக் கடந்து வருவதுதான் தைரியத்திற்கான அளவுகோலா? இருளில் தனியாக நடந்துவிட்டால் அவன் வீரனாகிவிடுவானா? என்ன ஒரு முட்டாள்தனமான புரிதல் இது? இருள் என்பது மிக அருகமையிலுள்ள ஒரு உண்மை. வெளிச்சம் என்பது நாம் ஒழுங்காக நடப்பதற்க்காகச் செய்யும் பாசாங்குத்தனம். ஒரு சுவாமிஜி சொல்லியிருக்கிறார். பாரதி இருளை குறைந்த வெளிச்சம் என்றுதான் சொல்லுகிறார். இருளை எப்படிப் பார்க்க வேண்டும் உணர வேண்டும் என்கிற சிறு பயிற்சிகூட இல்லாத இவர்களெல்லாம் எப்படி தமிழ்ப்பள்ளிகளுக்குள் நுழைகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

இப்பபடியே போனால், மாணவர்களெல்லாம் வீட்டிற்கு வெளியில் இருளில் படுத்து உறங்க ஆரம்பித்துவிடுவார்கள் தனது வீரத்தைக் காட்டுவதற்காக. வாழ்வில் அவர்கள் நிகழ்த்தி காட்ட வேண்டிய சாகசங்கள் எவ்வளவோ இருக்க, இருளுக்குள் நடந்து அழாமல் வருவதுதான் சாகசம் என்றால், எனக்குத் தலைச் சுற்றுகிறது. முதலில் இப்படி தன்முனைப்பு நடத்தி மாணவர்களின் உளவியலைச் சீரழிக்கும் இவர்களை 14 வருடம் காட்டில் வாழ்ந்து வர அனுப்பி வைக்கப்பட வேண்டும். புராணத்திலெல்லாம் ஆ ஊ ன்னா காட்டுக்கு கிளம்பி விடுகிறார்களே. நடைமுறை உலகத்தில் வாழ்த் தெரியாத இவர்களும் புராண மனிதர்கள்தான் என்னைப் பொருத்தவரையில். காட்டுக்குச் சென்றாலும் இவர்கள் ஆபத்தை ஏற்படுத்த நிறைய வாய்ப்புகள் உண்டு. மிருகங்களுக்கு, "காட்டில் வாழ்வது எப்படி?" என்று பாடம் எடுத்தாலும் எடுப்பார்கள்.

கே.பாலமுருகன்
மலேசியா

Monday, July 6, 2009

சை. பீர்முகமது எழுதிய ‘ஜாலியன் வாலா படுகொலையும் அஜித் சிங்கும்” சிறுகதை குறித்து கலந்துரையாடல்

இன்று கெடா மாநில எழுத்தாளர் சங்க செயலவை கூட்டத்திற்குப் பிறகு வழக்கம்போல சிறுகதை கலந்துரையாடல் நடைபெற்றது. இம்முறை மலேசிய படைப்பாளியின் கதை குறித்த கலந்துரையாடல் என்பதால் சை.பீர்முகமது எழுதி ஏப்ரல் “உயிரெழுத்து” இதழில் வெளிவந்த சிறுகதை கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கதை அஜித் சிங் என்கிற சீக்கிய இளைஞனின் வாழ்வைக் காட்டி சீக்கியர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொண்டிருக்கும் 5 மத அடையாளங்களை மனிதநேய தளத்தில் வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது.

ஒரு நம்பிக்கையாக இருந்த சீக்கியம், குரு கோவிந்த சிங்கின் வருகையாலும் சீக்கியர்களுக்கு எதிராக இஸ்லாமிய முகாலய மன்னன் அவுராத் ஜித் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையாலும் இனப்படுகொலையாலும் அவர் எழுப்பிய போராட்டாமும் போரும் பிறகு மத அடையாளமாக நிறுவப்பட்டதை ஆங்காங்கே கதைகளில் வலிந்து புகுத்திச் சொல்லியிருக்கிறார். படிப்பறிவு இல்லாத அஜித் சிங் அந்த 5 அடையாளங்களை வைத்திருப்பதே ஜாலியன் வாலா பார்க் படுகொலையில் உயிரிழந்த தன் முஸ்லிம் நண்பனுக்காக என்று கதையில் சை.பீர் காட்டியிருக்கிறார். ஜாலியன் வாலா படுகொலையைச் செய்த “டையர்” உத்தம் சிங்கால் கொலை செய்யப்படுகிறான் (எல்லோருக்கும் தெரிந்த வரலாறு) என்பதைக் கேள்விப்பட்டதும், அவன் தனது சீக்கிய மத அடையாளங்களைத் துறப்பதாகக் கதை முடிகிறது.

வரலாற்றில் எப்பொழுதோ நடந்த சீக்கிய கொடுமைகளுக்குச் சாதகமாக திணிக்கப்பட்ட இஸ்லாம் எதிர்ப்புணர்ச்சியும் அதன்பால் உருவான அடையாளங்களும் இப்பொழுது சமூகத்தில் நல்ல முறையில் நல்லிணக்கத்துடன் வாழும் சீக்கிய (இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் நண்பர்களாக சமரசமாக வாழும்) இஸ்லாமியம் உறவுகளுக்கு நடுவே அதே வன்முறையுடன் பின்பற்றப்பட வேண்டுமா என்கிற கேள்வியை நடைமுறை மீது சுமத்துவது போல கதையை சை.பீர் வடிமைத்துள்ளார்.

கலந்துரையாடலில் பெரும்பாலும் நண்பர்கள் சை.பீரின் கதை மனதில் ஒட்டவில்லை, மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட கருத்தாக்கத்திற்காக கதையில் சை.பீர் மெனக்கெட்டுள்ளார் என்று வெளிப்படையாகத் தெரிகிறது என்று பகிர்ந்துகொண்டார்கள். ஜாலியன் வாலா படுகொலையையும் சீக்கிய மத அடையாளங்களையும் தேர்ந்தெடுத்து மனிதநேய கதையைச் சொல்ல முற்பட முயன்ற சை.பீர் அதற்கான வடிவமாக சிறுகதையைத் தேர்ந்தெடுத்து தோல்வியடைந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டது. சில இடங்களில் தேவையில்லா உரையாடல்கள், மேற்கொள்கள் காட்டப்படுகிறது. கதையின் இறுக்கத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காத நிலையில் இந்த மாதிரியான நீட்டிப்புகள் தேங்கிவிடுகின்றன என்றும் சொல்லப்பட்டது.

சை.பீர் அவர்கள் இதையே ஒரு கட்டுரையாக எழுதியிருந்தால் கொஞ்ச சிறப்பாக இருந்திருக்கும் என்றும் சிலர் சொன்னார்கள். படைப்பைப் படைத்த பிறகு அதை எவ்விதத்திலும் மதிப்பீட எல்லாம் உரிமைகளும் வாசகனுக்கு உண்டு. அதை நியாயப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ, அந்த நியாயப்படுத்துதலின் நம்பகத்தன்மையை ஏற்றுக் கொள்வதும் வாசகனுக்குரிய களம். கலந்துரையாடலில் கலந்துகொண்ட, மணிஜெகதீஸ், குமாரசாமி, புண்ணியவான், முனியாண்டிராஜ், க.பாக்கியம், சந்தியாகு, ஜோன்சன் எல்லோரும் தங்களின் பங்களிப்பைச் செய்தார்கள்.

கே.பாலமுருகன்
மலேசியா

Saturday, July 4, 2009

மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சுற்றுலா சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்

முன்பு ஒரு முறை பல நடிகர்கள்- இசை அமைப்பாளர்கள் என்று கலக்கல் செய்த படம் சுயம்வரம். வெகுவிரைவிலேயே ரசிகர்களால் மறக்கப்பட்ட படம். காரணம் சலிப்பு தட்டும் வகையிலான நடிகர்களை ஒட்டு மொத்தமாக நடிக்க வைத்து, அதைச் சினிமாவாகவே மாற்றிய சினிமா உத்திதான். அதே போல ஆனால் கொஞ்சம் மாறுதலான முயற்சியில் இயக்குனர்களெல்லாம் ஒன்று சேர்ந்து நடித்திருக்கும் படம்தான் மாயாண்டி குடும்பத்தார் படம்.



இந்தப் படத்தை மேம்போக்காக விமர்சனம் செய்யவே எனக்கு நேரமும் விருப்பமும் இருக்கிறது. ஆழ்ந்து விமர்சிக்க படத்தில் அப்படியொன்றும் கலை அம்சங்கள் இல்லை. இயக்குனர்களாக அவ்வளவு பரிச்சியமில்லாத நடிகர் பட்டாளம் கிராமத்திற்குச் சுற்றுலாவிற்குச் சென்றது போலத்தான் படத்தின் நடிகர்கள் தேங்கி நிற்கிறார்கள். “பருத்தி வீரன்” படத்தில் வரும் அசல் கிராமத்தான்களைப் பார்க்க முடியவில்லை. மாயாண்டியின் முதல் மருமகளைத் தவிர.



எல்லாம் கிராமத்து பழைய படங்களில் வருவதைப் போல (நாட்டாமைப் படம் உட்பட) இந்தப் படத்திலும் சொத்து விவகாரத்தால் பங்காளி பகை ஊடாடுகிறது. இரு குடும்பத்திற்கும் பழைய பகையால் படத்தின் தொடக்கக் காட்சியிலேயே திருவிழாவில் சண்டை. நம்மையெல்லாம் நம்ப வைக்க. மணிவண்ணன் மட்டும் ரொம்ப நல்லவராக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் பாத்திரத்தில் நல்ல அப்பாவாக, (“போங்கடா போங்கடா பிள்ளை குட்டிங்கள படிக்க வைய்யுங்கடா” தேவர் மகனில் கமல் சொல்வது போல) அங்குமிங்குமாக பழைய பாணியில் வலம் வருகிறார். பரிதாபத்தைக் கரைத்துச் சொட்டுவதற்காக படத்தின் பாதியில் கருகி இறந்தும் வைக்கிறார். இதை வைத்துதான் அவரின் கடைசி மகனின் பரிதாபங்களையும் அனுபவிக்கும் கொடுமைகளையும் அவனின் தியாகங்களையும் எளிதாக முன் வைக்க முடிகிறது.



ஒரு சில கதாபாத்திரத்தின் பங்கு ஆங்காங்கே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும் கைவிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பொண்வண்ணன் கதாபாத்திரம் சொற்ப காட்சியில் வந்து படத்தோடு சம்பந்தமில்லாமல் கரைவது போல இருக்கிறது. ஆனால் மிக எளிமையான நடிப்பு அவருடையது. அடுத்தப்படியாக சிமான் அவர்களைச் சொல்லியாகவே வேண்டும். ஈழப் போராட்டம் தொடர்பாக அவர் நடத்திய துணிகர செயல்களைப் போலவே படத்திலும் விவசாயிகளுக்கும் எளிய மக்களுக்க்கான போராட்டாவதியாக வலம் வருகிறார். அனேகமாக அவரே இயக்குனரிடம் இப்படியொரு கதாபாத்திரத்தைக் கேட்டு வாங்கியிருக்க வேண்டும் போல. அவர் அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே ‘அறுவை’ சொற்பொழிவு பாடலுடன் விஜயகாந்த் போல பிரச்சாரம் செய்கிறார். பாடல் வரிகள் வெறும் வரிகளாகவே சலசலவென ஓடி மறைந்துவிடுகிறது, இசையும்கூட. படம் முழுக்க நடிக்க முயற்சி செய்து தோல்விக் கண்டுள்ளார் சீமான். முகத்தில் எந்தச் சலனமும் இல்லாத கதாபாத்திரம். பிரச்சார மேடைகளில் மட்டும் அவருக்கேயுரிய குரல் தொனி.



படத்தில் நல்ல விஷயமே இல்லையா? இருக்கிறது. வழக்கம்போல ஒரு பைத்தியம்தான் வந்து நகைச்சுவை செய்வதாகக் காட்டியதை நல்ல விஷயம் என்று சொல்லலாமா? அல்லது எப்பொழுதும்போல ஒரு திருமணத்திற்குச் சென்று அங்கு ,மணப்பெண் ஓடி போக வேறு வழியில்லாமல் கதாநாயகி கழுத்தை நீட்ட, (எத்தனை படத்தில் பார்த்தாகிவிட்டது) அதை நல்ல விஷயம் என்று சொல்லலாமா?



இதில், மாயாண்டி விருமாண்டி என்று கிராமத்து பேர்களை (ஏற்கவனே விருமாண்டி படம் ஏற்படுத்திய பாதிப்பாக இருக்கலாம்) வலிந்து புகுத்திக் கொண்ட விதம் அசலான நடிப்பில் தெரியவில்லை. ஆக மொத்தம் மாயாண்டி குடும்பத்தார், இயக்குனர் பட்டாளம் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, பழைய பாணியிலேயே ஒரு பங்காளி கும்மாளம் போட்டுள்ளார்கள். அவ்வள்ளவுதான்.



கே.பாலமுருகன்
மலேசியா

Friday, July 3, 2009

The Curious case of Benjamin Button-திரைக்கவிதைகள்



1
ஒரு முதியோர் இல்லத்தில்
பிறந்த கிழவனாக
விடப்பட்டேன்.

காலம் பின்னோக்கி
நகர்கையில்
என் உடலில் இருந்த
முதுமை மெல்ல
உதிர துவங்கின.

உடனிருந்தவர்களின் காலம்
அவர்களைக் கடத்தி செல்கையில்
எனக்கான காலம்
மிகப் பழைய புள்ளியிலிருந்து
மலர்ந்து கொண்டிருந்தன.

தோல் சுருக்கம்
களைந்து
தளர்ந்த உடல்
வீரியமடைந்தன.
உறுப்புகள் பசிக்கொள்ள
என் புறத்தோற்றதைத் தாவி
கடந்தேன் புதுபுது
வயதுகளை.

2
எப்பொழுதும் பழக்கமாகிபோன
ஒரு விருந்தாளி வீடுவரை
வந்துவிடும்.
காலையில் விழித்ததும்
நேற்றைய இரவு முழுவதும்
அந்த விருந்தாளி கதவைத் தட்டி
தன்னுடைய வருகையை
உறுதி செய்திருக்கும்.
மரணம்.
முதியோர் இல்லத்தின்
மிக சாமர்த்தியமான விருந்தாளி
வேறு யாராக இருக்க முடியும்.

-தொடரும்-
கே.பாலமுருகன்

Thursday, July 2, 2009

சிவா பெரியண்ணன் கவிதை

சிவா பெரியண்ணன் கவிதை

நீலமாய் வானம் உடைந்து விழுந்ததாய்
பார்த்தவர்கள் பேசிக்கொண்டார்கள்
அந்தத் துண்டுகள்
வானத்தினுடையதுதானென்றும்
அந்த நீலம்
மிகவும் பரிச்சயமானதென்பதுமாய்
அவர்களின் பேச்சு இருந்தது!
வானம் உடைந்து போனதாய்
அவர்கள் அழவும் செய்தனர்!
பின்பு வானம் குறித்தான
வழிப்போக்கன் பேச்சு
அவர்களை கோபம் கொள்ளச்செய்தது
வழிப்போக்கன் கேட்டான்:

1) வானம் நீலம் என்று யார் சொன்னது?
2) வானத்தின் உண்மையான இருப்பு என்ன?

ஏப்ரல் 2006-இல் எழுதியது

குறிப்பு: மலேசிய நவீன கவிஙஞர்களில் முக்கியவானவர். 90களின் பிற்பாதியிலிருந்து இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார். மலாயாபல்கலைக்கழகத்தில் பயின்று இப்பொழுது ஜொகூர்பாருவில் வேலை செய்து கொண்டிருக்கிறார். காதல், வல்லினம் போன்ற மலேசிய இதழ்களில் தனது நவீன கவிதைகளின் மூலம் நவீன வட்டத்தில் இருப்பை உருவாக்கியவர். சிவாவின் கவிதைகளில் எப்பொழுதும் ஒரு கேள்வி தேங்கி நிற்கும். அது இந்தப் பிரபஞ்சத்தின் புரிதலைக் கேள்விக்குள்ளாக்கும் கேள்வியாக இருக்கலாம்; அல்லது கழகத்தை ஏற்படுத்தும் கேள்வியாக இருக்கலாம். 2007 தொடக்கம் காதல் இதழின் வழி அவரது எழுத்துகள் எனக்குப் பரிச்சயம். தற்பொழுது வல்லின இணைய இதழை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

கே.பாலமுருகன்
மலேசியா

Wednesday, July 1, 2009

பறப்பதற்கு மறந்தேன் -தமிழிலும் ஆங்கிலத்திலும்


பறப்பதற்கு மறந்தேன்
என் காதலிக்காக
ஒரு சொல்லை சேமித்தபோது
எனக்குச் சிறகுகள் முளைத்திருந்தன.

அந்தச் சொல்லில்
என் காதலுக்கான இரகசியங்களை
சேர்த்தபோது
சிறகுகள் வளரத் துவங்கின.

என்னுடன் சேர்ந்து
சிரித்தாள். அழுதாள்.
என் பொழுதுகளைக் கொண்டாடினாள்.
என்னால் பறக்க முடியும்
என்பதை மட்டும்
கற்றுத்தர தவறினாள்.

உடைந்து மனிதனானேன்.

கே.பாலமுருகன்

ஆங்கிலத்தில். . .
“Forgot to fly”
k.balamurugan

When I save
One word for
My love
Growth of wings
Starts on me.

When I stuff
My secret of love
In the word
Wings start to grow.

She laughed with me.
She cried with me.
She enjoyed my lifetime.
But she missed
To teach me
That I can fly.

I broke down
To a common man.

Translated by k.ranjini


யார் இந்த Anonymous?

புளோக்கர்களி‎ன் பதிவில் இந்த “அனாதமேய” பெயர் அல்லது பெயரில்லாத நபர்களின் பதிவுகளைப் பார்க்கலாம். இவர்களில் இரண்டு வகை உண்டு. ஒரு சிலர் புளோக் வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் நண்பர்களின் பதிவில் கருத்துரைக்க “Anonymous” என்கிற குறியீட்டைத் தேர்ந்தெடுப்பார்கள். கீழே அவர்களின் பெயரைக் குறிப்பிடவும் செய்வார்கள்.

அடுத்தபடியாக வருபவர்கள் பெயரை வெளியீட மறுக்கும் கருத்து கந்தசாமிகள். அவர்களில் சிலரின் பதிவு அல்லது கருத்து ஆரோக்கியமானதாக இருக்கின்றது. பெயர் வெளியீட முடியாதவர்கள் கெட்ட வார்த்தையில் கேட்பது, அசிங்கமாகப் பேசுவது என்று கீழ்த்தரமான செயல்களிலும் ஈடுபட துணிவார்கள் இந்த அனாதமேய பேர்வழிகள். ஆதலால் பெயரில்லாமல் வரும் கருத்துகளைப் பிரசுரிப்பதில் கவனம் வேண்டும்.

தைரியமிருந்தால் பெயருடன் முன் வர வேண்டும். பெயரில்லாமல் வந்து பதிவிட்டு பிறரை அவமானப்படுத்த வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன் உள்ளே நுழைபவர்களை எதைக் கழற்றி அடிக்க வேண்டும் என்று பதிவாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த மாதிரி தத்திகளிடம் நான் கேட்க நினைக்கும் சில கேள்விகள் உண்டு.

“உனக்கெல்லாம் எதுக்கு பேரு வச்சாங்க?”
“கருத்து சொல்ற முன்னுக்கு தொடை நடுங்குதான்னு பாரு”

தர்க்கம் சார்ந்து பேச முடியாமல் போகும் இடத்தில் சிலர் தனிமனித குனாதிசயங்களையும் அவர்களின் பலவீனங்களையும் அம்பலப்படுத்தி கேலி செய்வது அனாதமேய பேர்வழிகளின் உத்திகளில் ஒன்று. அல்லது கெட்ட வார்த்தையில் திட்டி தனது பிளவாளுமையைக் காட்ட முயல்வது. உனக்கு புத்தி பேதலித்து விட்டதால் பிறரை ஏன் கேலி செய்கிறாய்? உனக்கு வேண்டியது ஒரு கழகம். அதை அமைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தையும் சேர்த்துக் கொண்டு சாலையின் நடுவீதியில் நின்று கொண்டு போவோர் வருவோரையெல்லாம் கத்தி கூப்பாடு போட்டு திட்டு. அங்கு உனக்கொரு அடையாளம் கிடைக்கும். பிறர் மனநிலை ஆய்வாளன். ஒழுக்கிய மன்னன் என்றெல்லாம்.

பெயர் வெளியீடக்கூட தைரியம் இல்லாத கோழைகளின் கருத்துகளை நிராகரிக்கும் ஆற்றல் நமக்கு வேண்டும். நம் பதிவுக்குள் நுழைந்து நம்மையோ நம்மைச் சார்ந்த மனிதர்களையோ கெட்ட வார்த்தையிலோ கேவலப்படுத்தும் வகையான சொற்களிலோ பேசும் ஒரு மண்ணாங்கட்டியின் பதிவை நாம் பிரசுரிப்பது என்று அதில் குளிர் காய ஒரு சுயநலம் நமக்கு இருப்பது போன்றுத்தான் தெரியும்.

ஆமாம். நமக்குப் பிடிக்காதவனை பிறர் யாராவது திட்டி பேசினால் அதைக் கண்டு கேட்டு உச்சிக் குளிரும் மனப்பான்மைப் பலருக்கு உண்டு. இதிலும் அந்த மாதிரி சிலர் படைப்பாளராகவும் எழுத்தாளராகவும் உலா வருவது வேதனைக்குரிய விஷயம். படைப்பு சக்தி ஒவ்வொரு உற்பத்தியிலும் நம்மைப் பக்குவப்படுத்தும், நமது ஆளுமையை விரிவாக்கும், இருத்தலியல் சார்ந்து நமது இருப்பை பலமாக்கும். பிறரை கெட்ட வார்த்தையில் ஏசி, கேலி செய்து கும்மாளம் அடிப்பதில் எங்கிருக்கிறது ஆளுமை?

கே.பாலமுருகன்
மலேசியா